கார்த்திகை திருநாள்: மாவலி தீப்பொறியாய் ஒளிரும் அன்பின் நினைவுகள்!

By பால்நிலவன்

ஒரு கனவைப் போல இருக்கிறது பழைய நினைவுகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்... அவை வாழ்வின் திரும்ப வராத எங்கோ மறைந்துபோன காலங்களாக மாறிவிட்டன. அவ்வப்போது நினைத்து ஏங்க வைப்பனவாகவும் அவை அமைந்துவிட்டன. அதென்னமோ... தீபாவளியைவிட தீபாவளி முடிந்த பின்னர் ஒரு மாதமும் சிலநாட்களும் கடந்தபிறகு வரும் தீபத் திருநாள்தான் எனக்கு நினைத்து மகிழ உகந்த ஒன்றாக நினைவின் சாளரத்தில் தங்கியுள்ளது.

ஒருகூடை நிறைய அகல்கள் எங்கள் வீட்டிலிருக்கும். பழைய அகல்களோடு ஆண்டுக்கு ஆண்டு புதிய அகல்கள் கொஞ்சமும் சேர்ந்திருக்கும். அவற்றையெல்லாம் தாழ்வாரத்தில் சமையல் அறை போகும் வழியில் எடுத்துவைத்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்து எல்லாவற்றிலும் அம்மா எண்ணெய் ஊற்றுவார். பஞ்சு திரியை சின்னதாக சுருட்டி சுருட்டி கொடுக்க அக்கா ஒவ்வொன்றாக எண்ணெய் நிறைந்த விளக்கேற்றும் வகையில் அகலில் பொருத்தி வைப்பார். பின்னர் சாமி அறையில் மாவிளக்கு மாவில் விளக்கேற்று படைத்து சாமி கும்பிட்டுவிட்டு அனைத்து அகல் விளக்குகளிலும் தீபம் ஏற்றுவோம்.

எனக்கு சில வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டின் அனைத்து மாடங்களிலும் எடுத்துச்சென்று வைத்துவிட்டு வரும் வேலை என்னுடையது. முன்றில் வாசல் சுற்றிலும் உள்ள தூண் ஓர தாழ்வாரத்தின் கருங்கல் தளங்களில் அழகழகாக கொண்டுசென்று வைப்போம். வீட்டின் அனைத்து அறை வாசலிலும், வாசல் மேல் பகுதியின் பக்கவாட்டில் விளக்கு ஏற்றிவைப்பதற்காகவே வைக்கப்பட்ட அந்த சின்னதான முக்கோண மாடங்களிலும் வைப்போம். பல நேரங்களில் அவற்றில் எதாவது பொருள்கள் இருக்கும். கோயிலுக்குப் போய் வந்த குங்கும பிரசாதப் பொட்டலம் நான் மறந்து வைத்த கமர்கட் பாக்கெட் பழசான நிலையில் அவற்றையெல்லாம் எடுத்துவைத்து சுத்தம்செய்து பின்னர் அங்கு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். இதில் கொடுமை என்ன வென்றால், பலவிதமான மாடங்கள் நிறைந்தது எங்கள் வீடு.

அக்காலத்தில் புறசுவர்கள் அரைமீட்டர் கனப்பரிமாணம் கொண்டதான மண் சுவர் அது. வீட்டுக்குள் குறுக்கிடும் சுவர் கால் மீட்டர் அகலத்திற்கு இருக்கும். ஆனால், அக்கால மண் கோட்டைகள் போன்ற தன்மையில் அச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுண்ணாம்பு, முட்டை, வெல்லம், செம்மண், களிப்புமண் எல்லாவற்றையும் குழைத்து கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. அதில்தான் அகலஅகலமாக மிகவும் பெரிய மாடங்கள் அமைக்கமுடியும்.

அதில் காய்கறிக் கூடைகள், இதர சில பொருள்களும் கூட வைத்திருப்போம். ஒன்றாம் வகுப்பிலிருந்து நான் ப்ளஸ் டூ முடிக்கிற வரையிலுமே கூட என்னுடைய புத்தகங்களுக்கு என்று ஒரு தனி மாடம் அளிக்கப்பட்டிருந்தது. அவற்றை ஆறாம் வகுப்பிற்கு பிறகு வண்ண வண்ண காகிதங்களால் ஒட்டி அழகுசெய்து சில நேரங்களில் எனக்கு பிடித்த வார இதழ்களில் வந்த சில்பியின் அக்கால புராதன கட்டிடங்கள் சார்ந்த ஓவியங்களைக்கூட ஒட்டி அழகு பார்த்துக்கொண்டிருப்பேன். பேனா பென்சில் எல்லாம் ஒரு டப்பியில் போட்டு அதிலேயே கிடக்கும்.

இதில் முக்கியமானது உப்புப் பானைக்குள் ஓர் அகல் விளக்கு தீபத்தை வைக்க வேண்டும். பின்னர், நான்கு பக்க தாழ்வாரங்கள், கூடம், நடைப்பகுதி மாடங்களில் சில விளக்குகள், வெளியே இருபக்கமும் உள்ள திண்ணையின் கருங்கல் விளிம்புகளில் இந்த பக்கம் இரண்டு அந்தப் பக்கம் இரண்டு அவ்வளவுதான். அதன் பின்னர் தான் மாவலி சுற்றும் வேலை. மாவலியைப் பொறுத்தவரையில் முன்பெல்லாம் எனக்கு நண்பன் மகேசு இருந்தான். நிறையமுறை மாவலிக்கான பனம்பூத் தூள் அவனுடைய வேலைக்காரர்கள் ஏற்பாடு செய்ததை எனக்கும் கொண்டுவந்து தருவான். அதற்குக் காரணம் அவனுடை வீட்டுத் தோட்டத்தில் அவனுக்காக ஓர் அழகான சின்னஞ்சிறு மலைக்கோயில் (எங்கள் பகுதிகளில் நிறைய மலைக்கோயில்கள் உண்டு) ஒன்றை நான் கட்டிக்கொடுத்துள்ளேன்.

ஒருமுறை அங்காளம்மா கோயிலுக்கு போய்விட்டு வரும்போது என்னைப் பார்த்துவிட்டான். நண்பன் மகேசு வீட்டைப் பார்த்தேன். மலைத்துப்போனேன். அந்த மாட மாளிகை வீட்டில் எனக்குத் தெரிந்து ஆயிரம் தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. வீட்டுக்குள் அழைத்துச் சென்று அம்மாவிடம் அறிமுகப்படுத்தினான். அவர்கள் எனக்கு மாவலி மாவு ஒரு தட்டில் வைத்து தந்தார்கள். எங்கள் வீட்டிலும் அப்படியான மாவலிமாவு (மாவிளக்கு மாவு) செய்யும் வழக்கம் உண்டு. ஆனால்அங்கு சாப்பிட்டது நான் வாழ்வில் அவ்வளவு தித்திப்பான மாவலி மாவை சாப்பிட்டதில்லை. ஏதோ ஒரு திணுசாக இனித்தது அப்பண்டம். ஆனால் சிற்சில ஆண்டுகளாக அவனை ஏனோ பார்க்க முடிவதில்லை. பின்னர் நாங்களே பனஞ்சாலைக்கு சென்று விழுந்துகிடக்கும் பனம்பூக்களை வைத்து மாவலிச்சுற்றை தயாரித்துக்கொண்டோம். நண்பனை ஏனோ காணமுடியவில்லை. சரி, விடுங்கள்... அதையெல்லாம் நினைத்தால் அவ்வளவுதான்.

எங்கள் வீட்டில் மாவலி சுற்றுவதற்கு முன்பாக இன்னொரு வேலை வைப்பார்கள், பிள்ளையார் கோவில், மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று அகல்விளக்ககளை வைத்து எண்ணெய் ஊற்றி அருகிலிருக்கும் விளக்கு தீபத்தை ஒற்றி நம்முடைய தீபத்தை ஏற்றிக்கொண்டு அங்கே வைத்துவிட்டு வரவேண்டும். அங்காளம்மன் கோயிலுக்கு போவதற்கு முன்பாக தான் மாவலி சுற்றும் வேலை.

வீட்டுக்கு வெளியே எதிரே உள்ள வைக்கோல் கூளங்களும் சாணமும் சமையல் பச்சைக் காய்கறித்துண்டுக் கழிவுகள் என பலவிதமாக நிறைந்த குப்பை மேட்டின்மீதும் ஓர் அகல் விளக்கு தீபம் வைக்க வேண்டும். இந்த வேலையெல்லாம் முடிந்த பிறகுதான் மாவலி சுற்ற முடியும். பனமட்டையை வெட்டி அதில் வெகுநீளமாக கத்தரித்த வேட்டித் துணியில் நெருப்பில் சுட்ட பனம்பூத் தூளை போடவேண்டும்.

மாவலி தயாரிப்பு: தீப்பொறிகள் பறக்க காரணமான பனம்பூத் தூள் தயாரிப்பதே ஒரு சுகமான அனுபவம். கழனிப் பக்கம் சென்று பனை மரங்களிலிருந்து பனம்பூக்களை எடுத்து வரவேண்டும் சில நேரங்களில் கீழே விழுந்துகிடக்கும். நிறைய எடுத்துவந்த பின்னர் தோட்டத்திலோ அல்லது காலிமனை பகுதியிலோ ஒரு அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி அதில் விறகு குச்சிகளை போட்டு எரியவிட வேண்டும். அதன்மேல் இந்த பனம்பூக்களைப் போட்டு நெருப்பிட வேண்டும். நெருப்போடு பூசணி இலைகளை நிறைய போட்டு மூடிவிட வேண்டும். மறுநாள்தான் நெருப்பில் வெந்த பனம்பூத் தூளை கரியோடு சேர்த்து அதை எடுத்து வரவேண்டும். அவற்றுடன் உப்பு சேர்த்து மைய அரைத்து தூளாக்கிக்கொள்ள வேண்டும். அரையடிக்கு அரை மீட்டர் நீளம் கத்தரித்த வேட்டி நீளவாக்கில் தரையில் வைத்து அதில் பனம்பூத் தூளை நீளமாக போட வேண்டும். இருபக்கமும் துணியை மடித்து சுருட்டி மூன்றாக வெட்டப்பட்ட பனைமட்டையில் செருக வேண்டியதுதான் வேலை.

அதன்பின்னர் நானும் சின்ன அண்ணனும் நேரே அடுப்படிக்குப் போனால் அங்கே அம்மா அடுப்பில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புத் துண்டுகளை கம்பிகளால் கிடுக்கி எடுத்து பனைமட்டைக்குள் வைக்கப்பட்டுள்ள பனம்பூ துணி பொட்டலத்தின்மேல் பரவலாய் வைப்பார்கள். சிற்சில நிமிடங்களே போதும். அதன் பிறகு தெருவில் வந்து சுற்றவேண்டிதுதான் பாக்கி....

மாவலியோ மாவலி என்று பாடுவோம். பாடியபடியே மாவலியை சுற்றும்போது வட்டவட்டமாக பொறிகள் தெறிக்கும். காத்துக்கு காத்தாட காத்தோடு பூவாட பூவோடு பொன்னாட பொன்னோடு மாவலியை சுத்தலாம்... நெருப்போடு மாவலியை வாங்க வண்டிச்சக்கரம், வானச்சக்கரம், வண்ணச் சக்கரம் சுத்தலாம்... வாங்க.. அட மாவலியோ மாவலி காணலையே காவலி.. என்று பாடியபடியே நாங்கள் சுற்றிசுற்றி விளையாடுவோம். அதில் மற்றதெல்லாம் தெரியும். அதென்ன மாவலியில் வண்டிச்சக்கரமா? ஆமாம் ஒன்றுமில்லை நம் தலைக்கு மேலே சுற்றுவது வானச் சக்கரம். நம் கையிலிருந்து இடது பக்கமும் வலது பக்கமும் சுற்றுவது வண்டிச் சக்கரம். இன்னும் எவ்வளோ இருக்கிறது.

வட்டவட்டமாக தோன்றும் தீப்பொறிகளை உருவாக்கியபடியே அப்படியே சுற்றிக்கொண்டு ஏரிக்கரைக்கு போவோம். மாலை 6 மணிவாக்கில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை இங்கிருந்தே பார்த்து வணங்குவோம்.

அதன் பின்னர் அங்காளம்மா அம்மன் கோவிலுக்குச் செல்வோம். கோவில் பிரகாரத்தில் மண்டபத்தில் என லட்ச தீபம் ஏற்றப்பட்டிருக்கும். அங்கேயும் நாம் கொண்டுபோன அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றிவிட்டு திரும்ப வேண்டும். அப்படி திரும்பிய ஒருநாள் என் ஆருயிர் நண்பன் மகேசு வீட்டை எதற்கும் பார்க்கலாம் என்று போனேன். வீடு பூட்டியிருந்தது. அந்த தெருவில் பல வீடுகளிலும் ஆட்கள் இல்லை. எங்கள் ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்க பலரும் ஊரை காலிசெய்து போய்விட்டனர் என்பதை பிற்காலத்தில் நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவர்கள் பஞ்சம் பிழைக்க போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அது உண்மைதான் என்று என் அம்மா சொன்னார்கள்.

வாழ்க்கை எந்த நேரத்தில் யாரை கவிழ்த்துவிடும் என்றே சொல்லமுடியாது போலிருக்கிறது. ஜிலோவென்று இருள் மண்டிய அந்தத் தெருவில் ஒரு பாழடைந்த காட்டு பங்களா போன்ற மகேசுவீட்டு காட்சியைக் கண்ட மாத்திரத்தில் பேய் வீடோ என்று நினைத்து அலறிவிட்டேன். அதன்பிறகு ஏன் நிற்கிறேன். அங்கிருந்து அந்த நிமிடமே ஓட்டம்தான். அடுத்த நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த நிமிடம் வரை அந்த ஓட்டத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. ஒருமுறை நேரு பிறந்தநாளில் எங்கள் பள்ளியில் மாநிலம் தழுவிய அளவில் விழா ஒன்று நடைபெற்றது. காற்றில் பறக்கும் வண்ணக் கொடிகளைக்கொண்டே மைதானத்தை பந்தலாக்கியிருந்தார்கள். உலக குழந்தைகள் ஆண்டுவிழா தினம் என்று நினைவு. தமிழகத்தின் நூற்றுக்கணக்கான பள்ளிகளிலிருந்து வந்து எங்கள் பள்ளி மைதானத்தில் மாணவ மாணவிகள் குவிந்திருந்தனர். கொடிகளுக்கிடையே விழுந்த சூரியன் வெளிச்சத்தில் ஆயிரம் முகங்களிலும் தேடிப் பார்த்துவிட்டேன். என் அருமை நண்பன் முகத்தை மட்டும் ஏனோ காணவில்லை. ஒவ்வொரு கார்த்திகை திருநாளன்றும் இந்த நினைவு வருவதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

17 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

மேலும்