பிரியா மரணம் | விதைக்கப்படுவது எத்தகைய எண்ணம்? - ஒரு மருத்துவரின் உணர்வுபூர்வ பகிர்வு

By செய்திப்பிரிவு

“ஒவ்வொரு அறுவை சிகிச்சை மருத்துவனும், தன்னுள்ளே ஒரு சவப்பெட்டியை சுமக்கின்றான். தனது தோல்விகளை, இயலாமையை எண்ணி அந்த சவப்பெட்டியில் மனவேதனையை கொட்டி அழுதுவிட்டு வெளியேறுகின்றான்” - ரேனி லேரீச்.

முதல் நாள் மருத்துவக் கல்லூரி மாணவனாகவும், மருத்துவராக இறக்கும் கடைசி நாளிலும் நினைவில் நிற்பது, “என் சக்திக்கு உட்பட்டு, மனசாட்சிக்கு உட்பட்டு மனித உயிர்களைக் காப்பதும், அவர்களின் உடல் நலனை பேணிக்காப்பதும் அல்லது முடிந்த அளவு அவர்களின் வலியை போக்குவதே என் தலையாய கடமை” என்ற எண்ணம்தான்.

உலகம் முழுவதும் போரினாலும், தீவிரவாதச் செயலாலும் உயிர் இழக்கும் எண்ணில் அடங்கா உயிர்களைப் பற்றியோ, அவர்களைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்களைப் பற்றியோ சிந்திக்க நேரமில்லாதபோது, ஓர் இளம் கால்பந்தாட்ட வீராங்கனையின் மரணம், அவரின் குடும்பத்தாரையும், மக்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.

ஊடகங்களில் பிரேக்கிங் செய்தியாக, “மருத்துவர்களை தனிப்படை தேடுகின்றது! மருத்துவர்களின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது” என தவறு இழைத்த மருத்துவர்களை, கழுவேற்றும் வரை எங்கள் கடமை தொடரும் என்று ஊடகவியலாளர்களும், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் அரசியல் உள்நோக்கங்களும் உற்று நோக்கினால் விளங்குகின்றது.

அரசு மருத்துவர்கள், அதிலும் பல்வேறு துறை அறுவை சிகிச்சை மருத்துவர்களும், மயக்கவியல் மருத்துவர்களும், கடுமையான மன உளைச்சலுக்கும், நம்பிக்கையற்ற நெருக்கடியான மனநிலையில் உள்ளனர் .

தனியாரிலும் கைவிடப்பட்ட பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை துணிந்து செய்த மூத்த மருத்துவர்களும், “இதே நிலைதான், நாளை நமக்கும்” என்ற எண்ணத்தை விதைக்கின்றது இந்த செயல்.

நடந்த நிகழ்வினை ஊடகங்கள் வழியே அறிந்தவரை, நவம்பர் 7-ஆம் தேதி, இளம் கால்பந்து வீராங்கனைக்கு முட்டி மூட்டுனுள் (Knee Joint), முன்புற சிலுவை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்காக மூட்டு அக நோக்கி வழி அறுவை சிகிச்சை (Arthroscopy) நடைபெற்றது.

சிறு துளை வழியே கிழிந்த தசைநார்களை தைத்து சரிசெய்யும் போது, இரத்த சிதறல்களால் நுட்பமான அறுவை சிகிச்சை கடினம் என்பதால், மேல் தொடைப் பகுதியில் ரத்த ஒட்டத்தை தடைசெய்வதற்காக தடுப்புக்கட்டு (Tourniquet) போடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த கையோடு, நோயாளியை அறுவை சிகிச்சைக்குப் பின் வைத்து கண்காணிக்கும் பிரிவிற்கு மாற்றியுள்ளனர்.

மயக்கம் தெளிந்த நிலையில், கால் வலி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையினால், கால் வலி என்று வலி நிவாரணி கொடுக்கப்பட்டுள்ளது. இளம்பெண் என்பதால் மேல் தொடையில் கட்டப்பட்ட தடுப்புக்கட்டை பார்க்காமல் விட்டுவிட்டனர்.

பலமணி நேரம் ஆன பின்னரே, அதனை கவனித்தபோது மீள முடியாத சேதம் ஏற்பட்டு இருப்பதை அறிந்து சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். முதலில் கால்களுக்கு ரத்த ஒட்டம் இல்லாத காரணத்தால் தசைநார்கள் வீங்கி நரம்புகளும், தசைநார்களும் சேதம் அடைந்ததைத் தொடர்ந்து முதலில் தசைநார்களின் மேல் உள்ள உறையினை விலக்கி, திசுப்படல அறுவை சிகிச்சை (Fasciotomy) செய்து, உள்ளே உள்ள தசைநார்களின் அழுகிய நிலை கண்டறியப்பட்டது.

பின் செயல்பாடுகள் இழந்ததை குடும்பத்தாரிடம் சொல்ல, காலினை இழக்கும் சூழ்நிலையை விளக்கிய போது, தங்கள் அருமை மகள் கட்டிய கனவு கோட்டை, ஒரு நொடியில் தரைமட்டமான நிலையில், சில மணி நேரம் கழித்தே, உயிரைக் காப்பாற்றும் பொருட்டு காலினை அகற்றுவதற்கு சம்மதம் அளித்துள்ளனர். காலினை அகற்றிய பிறகு ஒரு நாள் வேதனை சிறிது குறைந்திருந்தாலும், அழுகிய தசை நோய் தொற்றால், வெள்ளை அணுக்கள் பல மடங்கு அதிகரித்ததால் சிறுநீரகம், கல்லீரல், இதயம் பாதிக்கப்பட்டு நவம்பர் 15-ஆம் தேதி இறப்பு ஏற்பட்டுள்ளது .

இது போன்ற இறப்புகளை, அரசு மருத்துவமனைகள் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல மாட்டார்கள். ஒருமுறைக்கு பலமுறை உள்ளுறை மருத்துவ தணிக்கை செய்வதும், இது போன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் எப்போதும் நடைபெறாத வண்ணம் தனித்தனியாகவும், பின்னர் அனைத்து மருத்துவர்கள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள், பயிற்சி மாணவர்கள் முன்னிலையிலும், “நடந்தது என்ன? இதுபோன்ற நிலை பின்னொரு நாளில் நடைபெறாமல் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று எச்சரிக்கும் விதமாக மாதந்தோறும் தணிக்கை நடத்தப்படும் .

தொலைக்காட்சி விவாதத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியாத மேல்தட்டு மருத்துவர், அரசு மருத்துவமனையில் இறப்புப் பற்றிய தணிக்கையோ, புள்ளி விவரங்களோ, பகுத்துணர்தலோ நடைபெறுவதில்லை என்ற சில கருத்துக்களை வைத்தார். இதனால் உள்ளே மாதந்தோறும் நடைபெறும் மருத்துவத் தணிக்கைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது .

மருத்துவத் தணிக்கை இந்த இளம் வீராங்கனையின் மரணத்தை எப்படி பகுத்து பின்வரும் காலங்களுக்காக எப்படி வழிவகை செய்வார்கள் என்று பார்க்கும் முன்னர் மருத்துவ கவனக்குறைவு (Medical Negligence) மற்றும் குற்றவியல் அலட்சியப்போக்கு (Criminal Negligence) என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

மருத்துவ கவனக்குறைவு என்பது மருத்துவ வரைமுறைகளுக்கு உட்பட்ட செயல்பாட்டில் இருந்து வேறுபட்ட ஒரு செயலால் அல்லது செயலற்ற தன்மையால் அல்லது கவனக்குறைவால் ஏற்படும் துயர விளைவுகள்.

குற்றவியல் அலட்சியம் என்பது ஒருவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல் என்று அறிந்து, ஊறு விளைவிப்பது. கவனக்குறைவால் அறியாமல் நிகழும் துன்பியலுக்கும், அறிந்தே ஊறு விளைவிக்கும் துன்பியலுக்குமான, வேறுபாடு நிறைய உள்ளது.

இளம் கால்பந்தாட்ட வீராங்கனை தன்னால் கால்பந்து விளையாடாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அறுவை சிகிச்சைக்கு ஆட்படுகின்றார். எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் இரத்தப்பெருக்கு ஏற்பட்டால் சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்பதற்காக, ரத்தத் தடுப்புக்கட்டு போட்டபின் அறுவை சிகிச்சை செய்கின்றார். கிழிந்த முன்புற சிலுவை தசைநார்கள் தைக்கப்படுகின்றது .

அவரும் கவனச்சிதறலால், அடுத்தடுத்து வேலையை எண்ணியோ, குடும்ப பணியை எண்ணியோ அங்கிருந்து சென்று விடுகின்றார். இளம் பெண் என்பதால் மேல் தொடையில் கட்டப்பட்ட ரத்தத் தடுப்புக் கட்டினை பார்க்காமல் வலி நிவாரணி மட்டும் கொடுத்து விட்டு கவனிக்கத் தவறுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்காக மருத்துவக் கோட்பாடுகள் பற்றி பார்ப்போம்.

மேற்கூறிய ஏதேனும் ஒருவர் கண்டு அறிந்து இருந்தால், இத்தகைய துன்பியல் நடைபெறாமலும், இக்கட்டுரை இடம் பெறாமலும் போவதற்கான வாய்ப்புள்ளது.

ரத்தத் தடைக் கட்டால் தசை நார்கள், நரம்புகள், ரத்த ஓட்டம் இல்லா நிலையில் தசைநார்களில் உள்ள புரதம், மின்பகுபொருள் பொட்டாசியம், தனி ஆக்சிஜன் மூலக்கூறு (Free radical oxygen) ஆகியவை இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் உள்ள உயிரணுக்களை அழித்து விடுகிறது .

மருத்துவக் கவனக்குறைவால் ஏற்பட்ட துன்பியல் விபத்தா? அல்லது குற்றவியல் அலட்சியத்தின் கீழ் வருமா? என்றும் மருத்துவத் தணிக்கையில் வருமா? அல்லது சட்டத்தில் குற்றவியலில் வருமா? என்ற தெரிவு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஆராய்ந்தால் விடை கிடைக்கும் .

“நல்லவன், கெட்டவன் என்ற கோடு வரையறைந்தே பழகிய உங்களுக்கு அந்தக் கோட்டை அழித்துப் பாருங்கள், நாம் அனைவரும் ஒரு வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றோம்” என்ற திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகின்றது.

இதே அரசு மருத்துவர்கள், கரோனா தடுப்பு வீரர்கள் என்று கொண்டாடிய நேரமும் நினைவிலிருந்து மங்கிவிட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, திவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி மீண்டு வந்து பணிபுரியும் மருத்துவரும் இதில் உட்பட்டுள்ளார். உயர் சிகிச்சை அறுவை சிகிச்சைகள் என்று ஒரு சில ஒப்புயர்வு மையங்கள் (Center of Excellence) என்று தேர்வு செய்து செம்மை படுத்துதல் என்பது, கலைஞர் சொன்னது போல, “மருத்துவமனைகள் கட்டங்களாலோ, கருவிகளாலோ சிறப்படைவதில்லை. அதில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களாலுமே சிறப்படைகின்றது” என்றார்.

2018-ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பேராசிரியர்கள், துணை போராசிரியர்களின் எண்ணிக்கையை குறைத்ததால் கடுமையான ஆட்பற்றாக்குறையும், கவனச் சிதறலுக்கும் உள்ளாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ பணி இடங்களை மீண்டும் நிரப்புவது அவசியம் .

தரவரிசை என்பது மருத்துவரின், செவிலியரின் கனிவான பரிவும், சிறப்பு கவனமுமே அன்றி காப்பீடுத் திட்டத்தில் வருவாய் பெருக்குவதில்லை என்பதும். அதில் செலவு செய்யும் நேரத்தை நோயர்களை பரிசோதனை செய்வதில் ஒதுக்கினால் நல்ல நிலை பெரும்.

உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை நமது மகளாகவோ, தங்கையாகவோ, குடும்பத்தில் ஒருவராகவோ, நண்பராகவோ இருந்திருந்தால் என்ன மன வேதனை அடைந்திருப்போமோ, அதே வேதனையும், குற்ற உணர்வும் சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவருக்கும் இருந்து கொண்டிருக்கும் .

“அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்” என கண்ணதாசன் சொல்லி உள்ளார். மருத்துவருக்கு தெய்வம் என்ற பட்டமும் வேண்டாம்! மனம் அறியா தவறு இழைக்கும் போது கழுவேற்ற வேண்டும் என்ற நிலையும் வேண்டாம்! உறுப்புகளையும், சினை முட்டைகளையும் பணமாக்குபவர்களுக்கு விருதும் வேண்டாம்!

பெரும்பான்மையான அரசு மருத்துவர்கள், சாதாரண குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று, மிக குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று, பொது ஒதுக்கீட்டில், சமூக நீதியினாலும் உயர்நிலை அடைந்து, தனியார் கார்ப்பரேட் என்ற நிலைக்கு செல்லாமல், தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்காக உழைக்க விரும்புவர்களாகவே இருக்கின்றனர் .

“இவர்கள் மிகவும் நல்லவர்கள், இவர்களை எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்!” என்ற மனநிலை, இவர்களை இழப்பதற்கு வாய்ப்பளிக்கும். தவறும் போதும் , எண்ணங்கள் / வார்த்தைகள் சிதறும் போதும் வருந்தாத மருத்துவர்களே இருக்க மாட்டார்கள்!

“தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே!
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே !
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை” - கண்ணதாசன்.

- மருத்துவர் உத்தம் சிங்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்