தமிழ்நாடு, இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்று என்பது நாம் பெருமையடைய கூடிய விஷயம்தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, பொருளாதார, தொழில்நுட்ப மேம்பாட்டில் மட்டும் இருக்கிறதா? என்பது நாம் சிந்திக்க கூடிய சவலான கேள்வியே! அதை நிருபிக்கும் விதமாய் ஆணவக்கொலை, வன்தொடர்தல், குடும்ப வன்முறை என்று பாலின வன்முறை சராசரி நிகழ்வாகவே பெருகி வருகிறது என்றால் அது மிகையாகாது. பெரும்பாலான குடும்பங்களில் வன்முறை என்பது மிகவும் இயல்பான ஒன்று. அரசாங்க தரவுகளின்படி (NFHS5) 40 சதவீத பெண்கள் தங்கள் கணவரால் உடல் ரீதியான, பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
“எல்லார் வீட்ல தான நடக்குது. கண்டும் காணாம இரு. நீ நல்லா இருக்கலாம்” என்றே கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் அறிவுறுத்தப்படுகிறாள். இது வன்முறையை இயல்பானதாக்கும் பொதுப்படிப்பினையே! ஆனால், அதனை நியாயப்படுத்தும் போக்கு பெண்களிடமே காணப்படுவது மிகவும் அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி அபாயகரமானதே! சில சூழ்நிலைகளில் கணவர், மனைவியை அடிப்பது மிகவும் சரியே என்று பெரும்பாலான பெண்கள் கருதுவதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றது. ஒரு மனைவியின் என்ன செயல்களால், கணவர் தூண்டப்படுகிறார் என்று ஆராய்ந்தால் : குழந்தை (அ) குடும்பத்தை சரிவர கவனித்து கொள்ளவில்லை; மாமனார்- மாமியாருக்கு மரியாதை கொடுக்கவில்லை; மனைவி நடத்தையின் மீது கணவர் சந்தேகப்படுவது போல மனைவி நடந்து கொள்ளுவது என்று பட்டியல் நீள்கிறது. இதனால் வன்முறையை இயல்பானதாக கருதுகிறது பொதுபுத்தி.
திருமண உறவில் ஒரு பெண் அனுசரித்து போவதற்கே பெரும்பாலும் அறிவுறுத்தப்படுகிறாள். இதுவே, நாங்கள் மேற்கொண்ட ஆய்விற்காக குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேர்காணல் செய்த போது வெளிப்பட்டது. “கொஞ்சம் விட்டு பிடிங்க” என்பதே பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் அறிவுரை.
“அவன் அப்படித்தான் பேசுவான். அவனுக்கு அடங்கி தான் இருக்கணும்”. “ஆம்பிள்ளை பிள்ளை அப்படி தான் இருக்கும். நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்” - இது போன்ற ஆணாதிக்கத்திற்கு அடிகோடிடும் சிந்தனைகள் வன்முறையை நியாயப்படுத்தும் போக்கினை மேலும் வலுப்படுத்துவதுவாகவே இருக்கிறது .
» கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
» வானிலை முன்னறிவிப்பு: 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாங்கள் நேர்காணல் செய்த பாதிக்கப்பட்ட பெண்களில், பெரும்பாலானவர்கள் உயர்நிலை பள்ளிப்படிப்பிலிருந்து, பட்டப்படிப்பு வரை படித்தவரே! இவர்கள் ஏதோவொரு பணிபுரிபவராகவும் இருக்கிறார்கள். ஆக குடும்ப வன்முறையானது படிப்பு, வேலை, சமூக நிலை என்று அனைத்தையும் தாண்டி நிகழக்கூடிய ஒன்று தான் என்பதே உண்மை. பெண்கள் என்ன நிலையில் இருந்தாலும் “எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்; என் துணிமணியை துவைச்சு போடணும்; எனக்கு சமைச்சு போடணும்” என்பதே திருமண கட்டமைப்பின் சராசரி எதிர்பார்ப்பு. இதற்கு அடிப்படை தான் என்ன? நமது சமூகத்தில் காலங்காலமாய் புரையோடியிருக்கும் ஆண் மேலாதிக்க சிந்தனைதான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.
மூன்று மாவட்டங்களில் நடந்த எங்களின் ஆய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள் உதவிக்கு யாரை அணுகினார்கள் என்று பார்த்தால். பெரும்பாலானவர்கள் தங்கள் பிறந்த வீட்டினரிடம் இதை பற்றி முதலில் பகிர்ந்து கொண்டதாக கூறினார்கள். அது மட்டுமின்றி, காவல் துறை, ஊர் பெரியவர்கள், சாதி பெரியவர்கள், ஜமாத், சர்ச் என்று பல்வேறு வழிகளில் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்ததாகவும் கூறினார்கள்.
குடும்ப வன்முறை தங்களுக்கு நிகழும் போது, இப்பெண்கள் உடனடியாக உதவியை நாடுகிறார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். உதவி நாடுவதென்பது, அவர்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல! சமூகத்தில் பல தடைகள் அவர்களை செயலிழக்க செய்கிறது.
முதலில் “வாழாவெட்டியா வந்து கெடக்குறா” என்று பெண்களை சுமையாக கருதும் நமது கலாச்சாரத்தில், தனது பெற்றோருக்கு பாரமாக இருக்க அவர்கள் விரும்புவதில்லை. அது மட்டுமல்லாமல், “நம்ம அம்மா- அப்பாவுக்கு மானகேடாக போயிடும்” என்று பிறந்த வீட்டினருக்கு களங்கம் ஏற்படுமோ என்ற தயக்கமும் விடாப்பிடியாக அவர்களை பின்னிழுத்து செல்கிறது.
இரண்டாவதாக,“கணவருக்கு ஒரு படி கீழ் இறங்கி பெண்கள் போனால், பிரச்சினை இல்லை” என்ற பொதுபுத்தியால் பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் வன்முறைக்கு தாங்களே காரணம் என்று அவர்களை நம்ப வைக்கிறது சமூகம்.
மூன்றாவதாக, “ஆம்பளை துணையில்லாம இருக்கிறது எல்லாம் கஷ்டம்” போன்ற அறிவுறுத்தல்கள், தயக்கங்கள் அனைத்தையும் தாண்டி கணவரின் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் பழிவாங்குவாரோ? என்ற பயம்; யார் தன்னை ஆதரிப்பார்கள்? என்ற குழப்பம்; “பிள்ளைகளுக்காக வாழுங்கள்” என்ற சமூக அறிவுறுத்தலை தாண்டி, குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? என்று பல கேள்விகள் அவர்களுக்கு எழுகிறது.
இறுதியாக, காவலர்களை அணுகினால், எத்தகைய சூழலாய் இருந்தாலும் கணவருக்கு அறிவுரை கூறி, அவரிடமே திரும்பி அனுப்புவார்கள்; கணவர் குடிபோதையில் இருந்தால், அவரை விசாரிக்க மறுப்பார்கள் என்பது போன்ற தயக்கம் பாதிக்கப்பட்ட பெண்களிடம் எட்டி பார்க்கத்தான் செய்கிறது. அதற்காக அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போக மாட்டார்களா? என்றால், ‘பெரும்பான்மையோர் போகிறார்கள்’ என்பதே உண்மை. ஆனால், எந்த சூழலிலும் அந்த பெண்ணை சமாதானம் செய்வதன் மூலம், குடும்பம் கட்டுக்குலையாமல் இயங்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான உதவிக்கான கட்டமைப்புகளின் (விதிவிலக்கு உண்டு) நோக்கம்.
மேலும், குடும்ப வன்முறையை கையாள்வதற்கான தனிப்பட்ட தேர்ச்சி பெற்ற தொண்டு நிறுவனங்கள் மிகவும் குறைவே. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 கீழ் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை பற்றி நாங்கள் நேர்காணல் செய்த பெரும்பாலான பெண்களுக்கு தெரியவில்லை என்பது மிகவும் ஆச்சரியமே. இந்த பெண்கள் மட்டுமின்றி, இந்த கட்டமைப்புக்குள் ஒருங்கிணைந்து பணிபுரியும் சில அலுவலர்கள், அமைப்புகளுக்குமே இது பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது எங்கள் ஆய்வில் புலப்பட்டது.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 என்பது குடும்ப வன்முறைக்கு எதிராக அமலுக்கு வந்த முக்கியமான சட்டம். உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ , பொருளாதார ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ குடும்பத்தில் வாழும் எந்த பெண்ணையும் (அக்கா, மனைவி, அம்மா, இணையர்) துன்புறுத்தும் எந்த செயலையும், அதே குடும்பத்தில் வாழும் ஒரு ஆண் புரிந்தால் அது குடும்ப வன்முறை என இந்த சட்டம் அங்கீகரிக்கிறது. இந்த சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற வகையில் நியமிக்கப்பட்டு, அவர்கள் மாவட்ட தலைமையகத்திலிருந்து இயங்குகின்றனர். மனிதவள பற்றாக்குறை, போதுமான பயிற்சியின்மை, ஒருங்கிணைந்து பணி புரிவதில் சிக்கல்கள் என்று பல சவால்களை தங்கள் பணியில் அவர்கள் சந்திக்கின்றனர். இதனால் குடும்ப வன்முறைக்கு எதிரான அவர்கள் பணியில் தொய்வும் ஏற்படுகிறது.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டை சார்ந்த பெண்கள் இந்த வன்முறையிலிருந்து எவ்வாறு மீள முடியும்? யாரை நம்பி உதவி பெற முடியும்?
பெண்களுக்கான புதிய கொள்கையை மாநில அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கோப்புகளில் எழுதப்படும் வெறும் வார்த்தைகளைக் கொண்டு எதுவும் செய்ய இயலாது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிறுவன உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு, அதனை மக்கள் மத்தியில் பரவலாக்கி, அவர்கள் அதனை எளிதாக அணுகி பயன்படுத்த கூடியதாக்குவது மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல் நமது சிந்தனையிலும் மாற்றம் தேவை. அத்தகைய மாற்றம் நமது வாழ்விலும், நமது கலாச்சாரத்திலும் பிரதிபலிக்க வேண்டும். அதுவே இந்த குடும்ப வன்முறையை சகித்துக் கொள்ளாத சமுதாயத்தை உருவாக்கும்.
| சுடரொளி - மனித உரிமை செயற்பாட்டாளர். ‘பிரக்ஞா’ என்ற பெண்களுக்கான அமைப்புடன் இணைந்து, பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்படுகிறார். |
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
20 days ago