தேநீர் கடை வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் சேவை

By என்.சுவாமிநாதன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம், சாஸ்தமங்கலம் பகுதியில் உள்ளது சிந்தியா டீ ஸ்டால். இதன் உரிமையாளர் சந்திரனும், அவரது தேநீர் கடையும் இப்பகுதியில் பிரபலம். இந்தக் கடையின் வாடிக்கையாளர்களே மார்னிங் ப்ரண்ட்ஸ், ஒரு சாயா கூட்டாயுமா?, சந்திரன் கடையில் சாயா கூட்டாயுமா? என மூன்று வாட்ஸ் அப் குழுக்களையும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் ஓய்வு பெற்ற போக்குவரத்து துணை கண்காணிப்பாளர் அப்துல் கூறுகையில், “சந்திரனின் தேநீர்கடை சிறு வயது நண்பர்களை அப்படியே இன்னும் நண்பர்களாகவே வைத்துள்ளது. நாங்கள் அடிக்கடி இங்கு சந்தித்துக் கொள்வோம். எங்களது அரட்டையில் சந்திரனும் சேர்ந்து கொள்வார். மார்னிங் ப்ரண்ட்ஸ் வாட்ஸ் அப் குழுவை இங்கே தேநீர் குடிக்க வரும் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் பல சேவைகளும் செய்து வருகிறோம். ஏழைகளுக்கும் நேசக்கரம் நீட்டி வருகிறோம்” என்றார்

ஒருசாயா கூட்டாயுமா வாட்ஸ் அப் குழுவை நிர்வகிக்கும் அரசு ஊழியர் குமார், “எங்கள் குழுவில் இந்த டீக்கடைக்கு தினசரி வரும் 19 பேர் உறுப்பினராக உள்ளனர். இந்தக் குழுவை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பதிவும் செய்ய உள்ளோம். ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் இந்த டீக்கடையிலேயே எங்கள் சந்திப்பை நடத்தி வருகிறோம். இந்த தேநீர்க் கடையில் மலையாள தினசரி, வார, மாத இதழ்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் இருக்கும். அண்மையில் குடிமைப் பணித் தேர்வில் வென்ற மருத்துவர் மிதுன் பிரேம்ராஜ் இந்த டீக்கடை புத்தகங்களையும் பயன்படுத்தியவர். இதனால் சந்திரன் அவரையே அழைத்து பரிசு கொடுத்தார்” என்றார்.

சந்திரன்

டீக்கடை உரிமையாளர் சந்திரன் கூறுகையில், “நான் மூன்றாவது தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்கிறேன். அப்பா இறப்பால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்த டீக்கடையைத் தொடங்கினேன். கடைக்கு சிந்தியா என என் மகள் பெயரையே வைத்தேன். அவர் இப்போது மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். என் வாடிக்கையாளர்கள் பலரும் வாட்ஸ் அப் குழுக்களை இந்த டீக்கடையை மையப்படுத்தித் தொடங்கி, சேவையிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE