உடல் தானத்தின் பின்னால் 16 கொலைகள்!

By ஆர்.சி.ஜெயந்தன்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று ‘மோகமுள்’. அதற்கு திரை வடிவம் கொடுத்து, சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் எழுத்தாளரும், இயக்குநருமான ஞான ராஜசேகன். தனது தொடர்ச்சியான திரையுலகச் செயல்பாடுகள் மூலம், தமிழ் நிலத்தின் மாபெரும் ஆளுமைகளான பாரதி, பெரியார், ராமானுஜன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுக்கு யதார்த்தமான திரைமொழியில் வடிவம் கொடுத்தவர். திரை இயக்கத்துக்காக மொத்தம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஞான ராஜசேகரன் தற்போது ‘இந்திய ஆட்சிப்பணியும் சினிமாவும் மற்றும் நானும்’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்கிடையில் தன்னுடைய மகள் வசிக்கும் ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கே தனது பயண அனுபவங்கள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிந்து வருகிறார்.

ஒரு பதிவில் உடல்தானம் உருவான பின்னணியைக் குறித்து, எடின்பரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு எலும்புக் கூட்டினை நேரில் கண்டு அதனுடைய உலுக்கும் உண்மைக் கதையை எழுதிருக்கிறார். அதை நம் வாசகர்களுக்கு அவரது அனுமதியுடன் இங்கு வழங்குகிறோம். இனி ஞான ராஜ சேகரன் விவரிக்கிறார்:

’ராமானுஜன்’ படத்தின் உதவி இயக்குநர் ராக்ஸி, தன்னுடைய மனைவி ஆகியோருடன்...

அதிர்ச்சியடைந்தேன்!

“இன்று ஸ்காட்லாந்தின் தலைநகரமான எடின்பராவிற்கு சென்றிருந்தோம். UK வின் கலை, இலக்கியங்களின் தலைமையிடமாக கருதப்படும் பழம்பெரும் நகரமிது. அதைப்போலவே மேற்படிப்புகளுக்கும் சிறந்த இடமாக கருதப்படுகிறது.என் மகள் CREATIVE WRITING இல் PG படித்ததும் இங்குதான். மகள் படித்த கல்லூரியை சுற்றிப்பார்த்தோம். என்னுடைய ' ராமானுஜன்' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராக்ஸியையும் சந்தித்தோம்.

நகரம் முழுவதும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கட்டிடங்களாகவே நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளாக மருத்துவ மேற்படிப்புக்கு சிறந்த பல்கலைக்கழகமாக எடின்பரா கருதப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரியின் பல்வேறு துறைகளை பார்வையிட்டு வந்தபோது உடற்கூறாய்வு(ANATOMY) பகுதியில் நீதிமன்றத்தின் ஆணைப்படி எல்லோரும் பார்க்கும்படி வைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூட்டையும் அதன் வரலாற்றையும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

தீர்ப்பின்படி 100 ஆண்டுகளைக் கடந்து காட்சிக்கு இருக்கும் பர்க்கின் எலும்புக்கூடு

சடலங்களின் தேவை

19ஆம் நூற்றாண்டில் உடற்கூறாய்வு துறையில் ஐரோப்பாவிலேயே சிறந்து விளங்கியது, எடின்பரா. உடற்கூறாய்வு பேராசிரியர் Dr ROBERT KNOX என்பவருக்கு DISSECTION செய்துகாண்பித்து மாணவர்களுக்கு பாடம் நடத்த மனித சடலங்கள் தேவைப்பட்டன. அன்றைய சட்டப்படி ஜெயிலில் இறந்தவர், தற்கொலை செய்துகொண்டவர், அனாதையாக இறந்தவர் சடலங்களை மட்டுமே மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் டாக்டர் KNOXன் தேவைக்கு அவை போதுமானதாக இல்லை. சட்டபூர்வமில்லாமல் சடலங்கள் கிடைத்தாலும் அவர் அவைகளை வாங்கி பாடம் நடத்த உபயோகப்படுத்தினாராம். சிலர் கல்லறைகளில் புதைத்த பிணங்களை தோண்டி எடுத்து வரத்தொடங்கினார்களாம். இதனால் கல்லறைகளுக்கு காவல் அதிகமாக்கப்பட்டதாம். இதிலிருந்து தப்பிக்க, இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சவப்பெட்டிகளை இரும்பினால் செய்து கல்லறைகளில் சடலங்களை புதைக்கவும் செய்தார்களாம்.

கொடூர லாட்ஜ்

இந்த சமயத்தில்தான் வில்லியம் பர்க், வில்லியம் ஹேர் என்கிற திருடர்கள் இருவர், சடலங்களுக்கு மார்க்கெட் இருப்பதை அறிந்து புதிய திட்டம் ஒன்றை தீட்டினார்கள். இருவரின் மனைவியரும் இதற்கு உதவியாக இருந்தார்கள். ஹேரின் மனைவி நடத்திவந்த லாட்ஜ் இதற்கு வசதியாக இருந்தது. ஆண்கள் பெண்கள் என்று சிலரை லாட்ஜில் கொண்டுவந்து தங்க வைத்து அவர்களை கொன்று அவர்களின் சடலங்களை Dr Knoxக்கு விற்கத் தொடங்கினார்கள். இவ்வாறு ஒரு வருடத்திற்குள் 16 கொலைகளை செய்து ஒரு சடலத்துக்கு 7 முதல் 10 பவுண்டு வரை சம்பாதித்தார்கள். லாட்ஜில் தங்க வந்த ஒரு தம்பதி ஏற்கனவே கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு கீழே கிடத்தியிருந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்குச்சொல்ல பர்க், ஹேர் அவர்களது மனைவியர் எல்லோரையும் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தியது. இந்த
16 கொலைகளையும் ஆராய்ந்து பார்த்தபோது போலீஸுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் கழுத்தை நெரித்து கொன்றிருந்தாலும் அடையாளம் எதுவுமின்றி இயற்கையான மரணம் போல நிகழ்ந்திருப்பதினால் ஆதாரமின்றி சட்டப்படி நிரூபிக்கமுடியாமல் போலீஸ் திணறியது. (மெடிக்கல் எவிடென்ஸ் இல்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு 'பர்க் முறை' என்று சட்டப்புத்தகத்தில் விவரிக்குமளவுக்கு இந்தக் கொலைகள் இன்று புகழ்பெற்றுவிட்டன).

காட்சிக்கு வைக்கப்பட்ட எலும்புக்கூடு

வேறுவழியின்றி, பர்க்கின் பார்ட்னரான ஹேரை அப்ரூவராக்கி கொலைகளை போலீஸ் நிரூபித்தது. நீதிபதி, கொலையாளி பர்க்கினை பொதுமக்களுக்கு முன்பாக தூக்கிலிடவும் அவனது உடலை உடற்கூறாய்வு செய்து எலும்புக்கூட்டை எல்லோரும் காணும்படி காட்சிப்பொருளாக வைக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மக்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதுதான் அந்த நீதிபதியின் ஆதங்கம். மீதமுள்ள ஹேரையும்,மனைவிமார்களையும் சினங்கொண்ட மக்கள் நாட்டைவிட்டு துரத்தியடித்து விட்டார்களாம்.

இதற்குப்பின்னர்தான் புதிய ANATOMY ACT நடைமுறைக்கு வந்தது.அதைத்தான் உலகம் இப்போது பின்பற்றிவருகிறது. இன்று ஒருவர் தாமாக முன்வந்து தனது இறப்புக்குப்பின்னர் தன் உடலை மருத்துவத்துறைக்கு தானமாக நல்குவதற்கு வகை செய்தது இந்த சட்டம்தான். எடின்பராவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கு சிந்தனை வேறாக இருந்தது. பின்பற்றுவதற்கும் நினைவுகூர்வதற்கும் தான் நாம் "தலைவர்களுக்கு" சிலைகளையும் நினைவுச்சின்னங்களும் வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த எடின்பரோ நீதியரசர் சொன்னது போல் சமூகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களைப் பற்றியும் மக்களிடையே ஒரு பாடமாக அமையும்படி நாம் நினைவுச்சின்னங்களை உருவாக்கினால் என்ன?

- ஞான ராஜசேகரன்

- இவ்வாறு தன்னுடைய பதிவில் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்