”சமூகத்தின் முரண்பாடுகள், பொறாமை, அவமானத்துக்கு இடையே நீங்கள் யார் என்று சொல்ல முடியாத இயலாமை போன்றவற்றை தனது சுயசரிதைகளில் தைரியமாகவும், கூர்மையாகவும் கையாண்டிருக்கிறார் ஆனி எர்னாக்ஸ். இவருடைய சேவை போற்றத்தக்கது. நிரந்தரமானது”. - 2022-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸின் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் குறித்த அறிமுகம் இவ்வாறுதான் வாசிக்கப்பட்டிருந்தது.
82 வயதில் மொழி தொடர்பான சேவைகளுக்காக ஆனி எர்னாக்ஸ்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை ஆனி எர்னாக்ஸ் பெற்றிருக்கிறார்.
இந்தப் பெருமை, புகழ் எல்லாவற்றையும் விட ஆனி எர்னாக்ஸ்க்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் இலக்கிய உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாவும், திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது. காரணம், ஆனி எர்னாக்ஸ் தனது சுயசரிதைகளைதான் நாவல்களாக எழுதினார். தற்போது அந்த சுயசரிதைகளுக்குத்தான் நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாவல்களுக்கான பாரம்பரிய பாதையிலிருந்து விலகி, எந்தவித புனைவும் அல்லாது வாசகர்களுடனான ஓர் ஆசிரியரின் இயல்பானதொரு உரையாடலுக்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம் நிச்சயம் இலக்கிய உலகில் புதிய பாதையை திறக்க வழி செய்திருக்கிறது.
ஆனி எர்னாக்ஸின் படைப்புகள் பட்டாம்பூச்சிகளையோ, நட்சத்திரங்களை பற்றியதாக இருந்ததில்லை. அவர் தனது இருண்ட நாட்களை தனது படைப்பில் வெளிப்படுத்தினார். சட்ட விரோத கருக்கலைப்பு, தன்னைவிட 30 வயது குறைந்த நபருடனான காதல், தோல்வி அடைந்த அவருடைய உறவுகள், மார்பக புற்றுநோய், பாலியல் ஈர்ப்பு, பாலியல் தேவை, பெற்றோரின் இறப்பு என பல நிகழ்வுகளை வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அதனால் அவருடைய ஒவ்வொரு புத்தகமும் சாமானிய மக்களுக்கு மிக நெருக்கமாகி இருக்கிறது.
» சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வந்த ஜவஹர்லால் நேருவே காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்: அமித் ஷா
கருக்கலைப்பை பேசிய ஆனியின் முதல் புத்தகம்: ஆனி பிரான்ஸில் உள்ள நார்மண்டியில் 1940-ம் ஆண்டு பிறந்தவர். அவருடைய குடும்பம் பாட்டாளி வகுப்பை சேர்ந்ததாகவே இருந்தது. ஆனி தனது இளமை பருவத்தில் பள்ளிகளில் வர்க்க ரீதியான வேறுபாடுகளை எதிர் கொண்டதாக தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். அவர் பள்ளிக்கு செல்வதையும், உயர் வகுப்பு மாணவர்களுடன் அவர் நட்புப் பராட்டுவதையும் அவர் சார்ந்த சமூகம் விரும்பவில்லை. இதனால் அவர் சிறுவயதிலேயே மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனியை அப்போதெல்லாம் அவரது தாயார்தான் மீட்டெடுத்திருக்கிறார். தொடர்ந்து இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர் லண்டனில் இலக்கியம் பயின்று, 1970-களில் பிரான்ஸில் ஆசிரியர் பணியை தொடங்கினார். அந்தக் காலக்கட்டத்தில்தான் அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் பிறந்தன.
1974-ல் வெளியான தனது முதல் நாவலான Les Armoires vides (Cleaned Out)-ல் 1964-ம் ஆண்டு தனக்கு நடந்த சட்டவிரோதமான கருக்கலைப்பை அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்திற்கு தெரியாமல் நடந்த அந்த கருக்கலைப்பில் அவருக்கு நேர்ந்த மன அழுத்த அனுப்பவங்களை நேர்மையுடன் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்திருக்கிறார்.
அந்த முதல் நாவல் படைப்பில் ஆனியின் எழுத்துடன் பல பெண்கள் ஒன்றிப் போயினர். அவருக்கு ஏராளமான கடிதங்கள் குவியத் தொடங்கின. “நீங்கள் எனது வாழ்க்கையை உங்கள் வாழ்க்கையாக எழுதி உள்ளீர்கள்” என பலரும் ஆனியின் கைகளை பற்றிக் கொண்டதை தனது நேர்காணல்களில் அவ்வப்போது அவர் நினைக்கூர்வதை காணலாம்.
சமரசம் இல்லாத எழுத்தாளர்: ஆனி தனது 50 ஆண்டுக்கால எழுத்துலக வாழ்க்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத எழுத்தாளராகவே இன்றளவும் அறியப்படுகிறார். பிரான்ஸில் நிலவிய பாலினப் பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக முரண்பாடுகள், வர்க்க பேதம், பெண்களின் நிலை என அனைத்தையும் தனக்கு நடந்த உண்மை நிகழ்வுகளின் வாயிலாக வெளிக்கொண்டு வந்தார்.
ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய உலகில் பிரெஞ்சு மொழியில் ஆனி தொடர்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். உண்மையில் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பின்னர் தான் அவரது படைப்புகள் உலகளவில் அடையாளம் கண்டன.
உணர்வுகளிலிருந்து ஒரு நிகழ்வை கூறுவதுதான் இலக்கியத்தின் செயல் என்று ஆனி தீவிரமாக நம்புகிறார். தன்னுடைய எழுத்துகளுக்கு எல்லாம் தனது இளமைக்கால அனுபவங்கள்தான் காரணம் என்றும், அவைதான் எல்லாவற்றையும் பிணைக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.
எழுத்தில் அரசியல்: எழுத்தையும் அரசியலையும் பிரிக்க முடியாது என தீர்க்கமாக கூறும் ஆனி, பிரான்ஸில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு எதிராக எழுந்த தடைகளுக்கு எதிராகவும் தனித்து நின்றார். இவ்வாறு வெறும் எழுத்துடன் தனது சமூகப் பணியை நிறுத்தாது தனது செயல்பாடுகள் மூலமாக ஆனி எர்னாக்ஸ் நிலை நிறுத்தி வருகிறார்.
அவரது படைப்புகளில் Cleaned Out , Simple passion, Shame, Happening, Getting Lost, The Years ஆகிய புத்தகங்கள் உலக அளவில் பரவலாக சென்றிருக்கிறது. 82 வயதிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஆனி எர்னாக்ஸ் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு கூறுவது ஒன்றுதான்: “உண்மையைச் சொல்வது ஒரு நாவலாசிரியரின் வேலை. சில நேரங்களில் எந்த உண்மையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது, ஆனால் எப்போதும் நான் உண்மையையே தேடுகிறேன்...”
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
5 hours ago
வாழ்வியல்
22 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago