கனடாவின் தமிழர் தகவல்: 32 வருட சாதனை

By ஆர்.சி.ஜெயந்தன்

தொண்ணூகளில் கனடாவில் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என மதிப்பிடப்பட்டிருந்தது. புதிய குடிவரவாளர்களுக்கு கனடிய அரசு வழங்கிய வசதிகளும் சலுகைகளும் சேவைகளும் அன்று ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் மட்டும் இருந்தன. அதனால் அவைகளை தமிழர்களால் அவ்வளவாக அறிய முடியவில்லை. இந்த இடைவெளியை நிரப்பவென இவைகளைத் தமிழில் வழங்கும் நோக்குடன் 1991, பிப்ரவரி மாதம் ‘தமிழர் தகவல்’ சஞ்ஜிகையின் முதல் இதழ் வெளியானது. அன்று தொடங்கி, கடந்த 32 ஆண்டுகளாக ‘தமிழர் தகவல்’ ஒவ்வொரு மாதமும் தவறாமல் வெளியாகிவருகின்றது.

தமிழர்கள் இன்று கனடிய குடியுரிமை பெற்றவர்களாகிவிட்ட நிலையிலும் அவர்களுடைய தாய் மொழியிலான தமிழின் தேவை அதிகரித்தே செல்கிறது. முக்கியமாக - குழந்தை வளர்ப்பு, குடும்ப மீளிணைவு, கனடிய குடிவரவுச் சட்ட மாற்றங்கள், தொழில்வாய்ப்பு, மாணவர்களுக்கு கனடிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகள், கனடிய அரசியலில் ஈடுபாடு, வீடு, சொத்து கொள்முதல், தொழில் தொடங்கும் வணிக முயற்சிகள், இலக்கியப் பங்களிப்பு உள்ளிட்ட புலம் பெயர் மண்ணில் அவசியத் தேவையாக இருக்கக் கூடிய விஷயங்களிலும் முழுமையான வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. இவை தொடர்பாகத் தொடக்கம் முதலே இத்துறையில் புழங்கி வரும் துறைசார் தமிழர்களிடம் அவர்களது பரந்துபட்ட அனுபவங்களிலிருந்து ‘தமிழர் தகவல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர். தற்போது இத்துறையில் இயங்கிவரும் புதிய தலைமுறையினரும் எழுதி வழிகாட்டி வருகின்றனர்.

30ஆம் ஆண்டு சிறப்பு மலர்
​​​

முப்பது ஆண்டுகளைக் கடந்த தமிழர் தகவலின் பயணம் குறித்து அதன் ஆசிரியர் எஸ். திருச்செல்வம் நம்மிடம் பேசும்போது “ இதுவரையிலும் 540க்கும் அதிகமானவர்கள் தமிழர் தகவல் சஞ்ஜிகையில் எழுதியுள்ளனர். இவர்களுள் 330 பேர் வரை ‘தமிழர் தகவ’லிலேயே முதலில் எழுதத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக நூற்றுக்கும் அதிகமான இளையோர், மாணவர் இதுவரை எழுதியுள்ளனர். தொடக்கம் முதலே இலவசமாகவே தமிழர் தகவல் விநியோகிக்கப்பட்டுவருகிறது. கூடுதலனாவர்களுக்கு இதழ்கள் சென்றடைய வேண்டுமென்பதே விலையில்லாமல் விநியோகிக்கப்பட்டுவருவதன் நோக்கம். எந்தவொரு அரசடமிருந்தும் நிதி பெறாது, சமூகத்தின் உதவியுடன் மட்டுமே வெளிவருகின்றது. அதனல் 'சமூகத்திடமிருந்து சமூகத்துக்கு' என்கிற மகுட வாசகத்தை ‘தமிழர் தகவல்’ சஞ்ஜிகையின் முகப்பு அட்டையில் முக்கிய கொள்கையாகப் பொறித்து வைத்துள்ளோம்.

இன்னொரு பக்கம் கனடா வாழ் தமிழர் சமூகத்தில், உலகளாவிய தமிழர்களின் நலன், பண்பாடு, வரலாறு, இலக்கியம், கல்வி ஆகிய தளங்களில் ஓய்வறியாது பங்களித்து வரும் ஆளுமைகளுக்கு மதிப்பளிக்கவும், திறமை - செழிப்பு ஆகியற்றை வளர்க்கவும், கனடிய பெரும்பான்மையினருக்கு இதனை அறியக் கொடுக்கவும் விருது வழங்குவதை தமிழர் தகவல் 1992 இல் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த 31 ஆண்டுகளில் 271 பிரமுகர்கள் ‘தமிழர் தகவல்’ விருதுகளைப் பெற்றுள்ளனர். இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆஸ்திரேலியாயாவில் வாழுபவர்களுடன் தமிழரல்லாத கனடியர் பலரும் இவ்விருதினை பெற்றுள்ளனர். கனடா நாட்டின் முக்கிய தினசரிப் பத்திரிகைகளில் ஒன்றான ‘டொரண்டோ ஸ்டார்’ (Toronto Star) பாரபட்சமற்ற ஊடக சேவைக்காக தமிழர் தகவல் விருதினை 1997இல் பெற்றது” என்றார்.

ஆசிரியர் குழுவினர்

தமிழர் தகவல் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். திருச்செல்வம் பிழைப்புக்காக புலம் பெயர்ந்து கனடாவுக்கு வரவில்லை. அதுபற்றி கேட்டபோது கனத்த மனதுடன் நம்மிடம் பகிர்ந்தார் அவர்: “எங்களுடைய மகன் அகிலன் அரசியல் காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டார். சொந்த நாட்டில் மகனை இழந்து நின்றபோது இலங்கையில் அதற்குப் பிறகும் வாழமுடியாது என்கிற நிர்ப்பந்தம் எனக்கும் எனது மனைவி ரஞ்சிக்கும் ஏற்பட்டது. என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் நாங்கள் திகைத்து நின்றபோது, சர்வதேச மன்னிப்புச் சபை (International Amnesty) எங்களைத் தொடர்பு கொண்டு கனடாவில் குடியேறுவதற்கான வசதிகளை செய்து உதவியது. கனடா வந்த சில நாட்களிலேயே நாங்கள் இருவரும், இன்னும் சில நண்பர்களை அழைத்து பத்திரிகை குழுவொன்றை அமைத்து இந்த சஞ்சிகையை தொடங்கி 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்” என்றவர் தொடந்தார்..

“தமிழர் தகவல் புதிய குடிவரவாளர்களுக்கும், ஏற்கனவே குடியேறி குடியுரிமை பெற்றவர்களுக்கும் இன்னும் பல்வேறு நாடுகளிலிருந்து கனடா வரும் தமிழர்களுக்கும் தகவல்களை இலவசமாக வழங்கியபடியே தொடர்கிறது. ஒரு நாட்டின் சட்ட திட்டங்களும் நடைமுறைகளும் மாறியபடியே இருக்கும். அவற்றை உடனுக்குடன் மக்களுடன் பகிர்ந்துகொள்வதுடன் தனிப்பட்ட ஆலோசனைகளையும் தமிழர் தகவல் குழு செய்து வருகிறது.

சில முந்தைய இதழ்கள்

தமிழர் தகவல் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களில் கணிசமானவர்கள் சொந்தமாக புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த 32 ஆண்டுகளில் முப்பது ஆண்டு மலர்களை தமிழர் தகவல் சஞ்சிகை வெளியிட்டிருக்கிறது. இரண்டு வருடங்கள் கரோனா பேரிடர் காரணமாக மலர் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. முப்பதாவது ஆண்டு மலர் முன்னெப்போதையும் விட சிறப்பாக ’இளமகிழ் சுவடு’ என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது. 216 பக்கங்கள் கொண்ட இந்த மலரில் இளையோரும், முதியோரும், பிறநாட்டு அறிஞர்களும் கட்டுரைகள் சமர்ப்பித்து சிறப்பித்திருக்கிறார்கள்.” என்றார்.

நூறு வருடங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றிய ஆராய்ச்சியை முன்னெடுக்கும் ஒரு மாணவர், தமிழர் தகவல் பழைய இதழ்களை ஆராய்ந்தாலே போதுமானது. தமிழர்களின் புலம்பெயர் வரலாறு இத்தனை விரிவாகவும் ஆழமாகவும் காலந்தோறும் பதிவாகியிருப்பது பெரும் தகவல் களஞ்சியம் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்