கிண்டியில் இருந்து ஜெமினி வரை: சென்னையில் ‘வந்தியத்தேவன்’ சாயல் சிலை வைக்கப்பட்ட கதை

By கண்ணன் ஜீவானந்தம்

தமிழ் இலக்கியங்களில் ஆகச் சிறந்த நாவல்களின் பட்டியலில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சோழ மன்னர்களின் பெரு வாழ்வை பற்றி எழுதப்பட்ட இந்த நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த காதபாத்திரமாக பார்க்கப்படுவது ஆதித்த கரிகாலனின் நண்பனாக வரும் வல்லவரையன் வந்தியத்தேவன்தான்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் நீண்ட நேரம் வரும் கதாபாத்திரமும் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான். அப்படிப்பட்ட ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ சாயலில் சிலை ஒன்று சென்னையில் உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்தச் சிலையை பலரும் கடந்து வந்திருந்தாலும், அதன் பின்புலம் அதிகம் தெரிந்திருக்காது. அந்த சிலை வைக்கப்பட்ட கதையை தெரிந்துகொள்ள நாம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1880-களில் இருந்தே சென்னைக்கு மிக அருகில் உள்ள கிண்டியில் குதிரைப் பந்தயங்கள் நடைபெற்று வந்தது. இந்தியாவில் முதன்முதலாக 1777-ம் ஆண்டு சென்னையில்தான் ரேஸ் கோர்ஸ் அமைக்கப்பட்டது. தற்போது கிண்டி ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள இடத்தில்தான் குதிரைப் பந்தயங்கள் நடைபெற்று வந்தன. பணம் வைத்து ஆடப்படும் இந்த குதிரைப் பந்தயங்களால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர். இதன் காரணமாக குதிரைப் பந்தயங்களை தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, 200 ஆண்டுகளாக சென்னையில் நடந்து வந்த குதிரைப் பந்தயத்தை நிறுத்துவது என்று 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குதிரைப் பந்தயத்தின் நினைவாக ஒரு குதிரை வடிவ சிலை வைக்க வேண்டும் என்று அப்போது தமிழக முதல்வராக இருந்து கருணாநிதி முடிவு செய்தார். அந்தச் சிலையை ஜெமினி மேம்பாலாம் அருகில் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தச் சிலையை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் கதாபாத்திரமாக உள்ள வல்லவரையன் வந்தியத்தேவனை போன்று வடிவமைக்க வேண்டும் என்று சிற்பி ஜெயராம் நாகப்பாவிடம் கூறியுள்ளார்.

இவ்வாறு கருணாநிதி கூறியதின் அடிப்படையில் வல்லவரையன் வந்தியத்தேவனின் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு குதிரை மற்றும் அதை ஓட்டிச் செல்லும் மனிதன் போன்ற சிலையை சிற்பி உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து, இந்தச் சிலை அண்ணா மேம்பாலத்தில் நடுவில் நுங்கம்பாக்கம் செல்லும் சாலையை நோக்கி அமைக்கப்பட்டது. தற்போது இந்த சிலை கம்பீரமாக அண்ணா சாலையின் அடையாளமாக காட்சி அளிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE