பீட்ரூட் சாறு, சர்க்கரை கரைசலில் ‘பொன்னியின் செல்வன்’ 16 கதாபாத்திரங்களின் ஓவியங்கள்: மதுரை டிசைனர் அசத்தல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிருத்திகா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் முக்கிய 16 கதாபாத்திரங்களை கதர் ஆடை துணியில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை கரைசலை பயன்படுத்தி மிகச் சிறப்பாக வரைந்துள்ளார்.

எம்ஜிஆர் முதல் கமல் வரை பல ஜாம்பவான்கள் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க நினைத்தனர். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், ஏதோ ஒரு வகையில் அது கைகூடாமல் போனநிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் முயற்சியால் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால் இனி தமிழ் காவியங்கள், சரித்திர சம்பவங்கள் பலவும் இந்த தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் திரைப்படமாக வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், இன்று வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ரசிகர்கள் பலரும் பலவிதமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிருத்திகா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் முக்கிய 16 கதாபாத்திரங்களை கதர் ஆடை துணியில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை கரைசலை பயன்படுத்தி மிகச் சிறப்பாக வரைந்துள்ளார். செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமா திரையரங்கில் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது இவரின் இந்த ஒவியங்கள், தற்போது சமூக வலைதங்களில் வைரலானதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிருத்திகா கூறுகையில், ‘‘ஓவியங்கள் வரைவதில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் அதிகம். அதில், இதுபோல் தனித்துவமாக ஓவியம் வரைவது என்பது என்னுடைய பழக்கம். அந்த அடிப்படையிலே இயல்பாக இந்த ஓவியங்களை வரைந்தேன். அது எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நான் காஃபி பவுடர் மூலம் பெண்களின் ஒவ்வொரு பருவங்களையும் ஓவியமாக வரைந்துள்ளேன். சோழப் பேரரசு காலத்தில் நாம் இருந்திருந்தால் இதுபோல் இயற்கை சாயத்தைப் கொண்டுதானே வரைந்திருப்போம் என்ற அடிப்படையிலே பீட்ரூட் சாறு, சர்க்கரை கரைசலை கொண்டு கதிர் ஆடையில் வரைந்தேன். தற்போது டிசைனிங் துறையில் பணிபுரிகிறேன். எதிர்காலத்தில் இதுபோல் தனித்துவமான ஓவியங்களை வரைந்து இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE