'ஃப்ளூ காய்ச்சலைத் தடுக்க...' - மதுரை அரசு மருத்துவமனை மருத்துவ நிபுணர் இளம்பரிதி வழிகாட்டுதல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஃப்ளூ காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மதுரை அரசு மருத்துவமனை நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனாவுக்கு பிறகு தற்போது, ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளிக் குழந்தைகளை இந்த காய்ச்சல் அதிகமாக பரவ ஆரம்பித்துள்ளது. அதனால், பள்ளிகளில் குழந்தைகள் வருகை குறைந்துள்ளது. திடீர் வெயில், திடீர் மழை என சீதோஷ்ண நிலை மாறி வருவதால் இந்த வைரஸ் காய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது. பெரியவர்களையும் இந்த காய்ச்சல் பரவலாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த தொற்று நோயை பற்றிய பல்வேறு சந்தேகங்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நெஞ்சகப்பிரிவு சிறப்பு மருத்துவ நிபுணர் இளம்பரிதியிடம் கேட்டோம்.

ஃப்ளூ காய்ச்சல் என்றால் என்ன - ஃப்ளூ காய்ச்சல் இருமல், உடல்வலி மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தொற்று. காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக ஃப்ளூ காய்ச்சல் இன்ப்ளூயென்ஸா (influenza) என்று சொல்லப்படுகிறது. ஃப்ளூ காய்ச்சலின் வகைகளில் பருவகால காய்ச்சலைத் தவிர, 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை (தொற்றுநோய்) ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சலும் அடங்கும்.

பொதுவாக முக்கிய அறிகுறிகள் என்ன - காய்ச்சல் (100ºF அல்லது 37.8ºCக்கும் அதிகமான வெப்பநிலை), அதிக சோர்வு, தலைவலி அல்லது உடல்வலி, இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகிறது.

ஃப்ளூ காய்ச்சல் ஆபத்தானதா - இருக்கலாம். பெரும்பாலானவர்கள் இந்த ஃப்ளூ காய்ச்சலை சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் தாங்களாகவே கடந்து செல்கிறார்கள். ஆனால் சிலர் இந்த காய்ச்சலால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதில், சிலர் இறக்கிறார்கள். ஏனெனில் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா எனப்படும் தீவிரமான நுரையீரல் தொற்றுநோயை ஏற்படுத்தும்.

இந்த காய்ச்சல், 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர், சிறு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள், குறிப்பாக 2 வயதுக்குட்பட்டவர்கள்). கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோய், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், நுரையீரல் நோய்கள், புற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் போன்ற நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த காய்ச்சல் ஆபத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் அறிகுறிகளை கொண்டே மருத்துவர்களால் ஃப்ளூ காய்ச்சலை சொல்ல முடியும். ஆனால் சில நேரங்களில் இந்த காய்ச்சல் அறிகுறிகளை தாண்டி பிற பிரச்சனைகளை ஏற்படுத்தினால் சோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.

எப்படி நம்மை அந்த காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் - கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த காய்ச்சலால் நோய் வாய்ப்பட்டவர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி போடுவது நல்லது.

காய்ச்சல் வந்தால் என்ன செய்வது - ஃப்ளூ காய்ச்சல் இருப்பதாக நினைத்தால், வீட்டிலேயே இருந்து ஓய்வெடுக்க வேண்டும். நிறைய திரவ உணவை குடிக்கலாம். காய்ச்சல் மற்றும் வலியைப் போக்க பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இந்த காய்ச்சலுக்கு பயனுள்ளதாக இல்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் தாங்களாகவே குணமடைகின்றனர்.

மூச்சு விடுவதில் சிரமம், மார்பு அல்லது வயிற்றில் வலி, அழுத்தத்தை உணருவது, தலை சுற்றல், குழப்பமாக உணர்ந்தால், கடுமையான வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஃப்ளூ காய்ச்சலுக்கு சிகிச்சை உண்டா - ஃப்ளூ காய்ச்சல் உள்ளவர்கள் வைரஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த மருந்துகள் காய்ச்சலால் ஏற்படும் சில பிரச்சனைகளைத் தவிர்க்க மக்களுக்கு உதவும். காய்ச்சல் உள்ள எல்லோருக்கும் வைரஸ் தடுப்பு மருந்து அவசியமில்லை. ஆனால் சிலருக்கு தேவைப்படுகிறது. உங்களுக்கு வைரஸ் தடுப்பு மருந்து தேவையா என்பதை மருத்துவர்தான் தீர்மானிப்பார்.

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த காய்ச்சல் வந்தால் என்ன செய்வது - கர்ப்பிணிப் பெண்களுக்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. கர்ப்பமாக இருப்பவர்கள், இந்த காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் பெறுவது மிகவும் முக்கியம்.

ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி யார், எப்போது போட வேண்டும் - 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி பெறலாம். நீரிழிவு நோய், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், நுரையீரல் நோய்கள், புற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி முக்கியமானது. குளிர்காலம் தொடங்குவதற்கு முன், ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி பெறுவது சிறந்தது. குறிப்பாக அக்டோபர் மாதத்திற்கு முன் தடுப்பூசி போடுவது நல்லது. ஃப்ளூ தடுப்பூசியை கரோனா தடுப்பூசியுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

23 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்