இளைப்பாறச் சென்று மரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை: நீண்ட போரட்டத்திற்கு பின் மீட்பு

By செய்திப்பிரிவு

மாமரம் ஒன்றில் இளைப்பாறும் சிறுத்தையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறுத்தை மரத்தில் ஏறுவதில் என்ன சிறப்பு எனக் கேட்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சர்ய அதிர்ச்சி காத்திருக்கிறது. முதலில் பார்க்கும்போது உயரமான மாமரத்தில் ஒய்யாரமாக சிறுத்தை இளைப்பாறுவது போல தோன்றினாலும், வீடியோ ஓடத்தொடங்கிய கொஞ்ச நேரத்தில் காட்சிகள் ஜூம் அவுட்டாகும்போது சிறுத்தை மாமரத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அய்யையோ அந்த சிறுத்தைக்கு என்னச்சு எனப் பதறுபவர்களுக்கு... நீண்ட போரட்டத்திற்கு பின்னர் அந்தச் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டு விட்டது.

இந்திய வனப் பணி (Indian Forest Service) அலுவலர் பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், "காட்டுயிர்களை உயிர் பாதுகாக்கும் வன உயிர் மேலாண்மை என்பது தினசரி சாகசங்களைக் கொண்ட ஒரு துறை. மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இந்தச் சிறுத்தை எப்படி அந்த உயரத்திற்குச் சென்றிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நாங்கள் இப்போது அவரை மீட்டாக வேண்டும்" என்ற குறிப்புடன் மரத்தில் இளைப்பாறும் (சிக்கிக்கொண்ட) சிறுத்தை ஒன்றின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பதிவிட்ட ட்வீட்களில், "எல்லாவற்றுக்கும் ஒரு நிலையான செயல்பாட்டு முறை (Standard operating procedures) உண்டு, ஆனாலும் ஒவ்வொரு சூழ்நிலையும், ஒரு தனித்துவமான சவாலாகவே அமைகிறது. அவை கூடியிருக்கும் மக்களைக் கட்டுப்படுத்துவதில் தொடங்கி சிக்கிக்கியிருப்பவரை மீட்பது வரை அந்த நேரத்தின் கணநேர முடிவுகளை சார்த்தே இருக்கிறது. அதற்கு முந்தைய அனுபவமும் கை கொடுக்கிறது. இந்த சிறுத்தையை மீட்கும் பணி 7-8 மணிநேரத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்தது” என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்த சிறுத்தை மீட்பு வீடியோ மூன்று மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உயரமான தென்னை மரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கி வரும் சிறுத்தை ஒன்று திடீரென வேகமாக மேல ஏறும் வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து, பிரவீன் முந்தைய சிறுத்தையின் வீடியோவை மீள்பதிவு செய்துள்ளார்.

இரண்டாவது வீடியோவினை இந்திய வனப் பணி அலுவலர் சுசந்தா நந்தா பகிர்ந்துள்ளார். அதில் இந்த சிறுத்தை ஏன் உயரமான தென்னை மரத்தில் ஏறுகிறது என்று தெரிய வேண்டுமா? வீடியோவை கடைசி வரை பாருங்கள் என்று கூறிப்பிட்டுள்ளார்.

1.17 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், உயரமான தென்னை மரத்தில் இருந்து மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் சிறுத்தை ஒன்று கீழிறங்குகிறது. கிட்டத்தட்ட தரையைத் தொட இருந்த நேரத்தில் கீழே இருந்து மற்றொரு சிறுத்தை விரட்ட வந்தை விட வேகமாக மீண்டும் மரத்தில் ஏறுவது பதிவாகியிருக்கிறது.

சிறுத்தைகள்: பெரும்பாலும் மஞ்சள் நிறத் தோல் கொண்டவை. இவற்றின் உடம்பிலும் கறுப்பு நிற வளையங்கள் இருக்கும். ஆனால் அவை முழு வட்ட வடிவில் இல்லாமல் ஆங்காங்கே உடைந்து இடைவெளியுடன் இருக்கும். வட்டத்தின் நடுவில் அடர்த்தியான பழுப்பு நிறம் இருக்கும். உறுதியான, பருத்த உடலுடனும் குட்டையான கால்களும் கொண்ட சிறுத்தைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை. சிறுத்தைகளை ஓட்டத்தில் மிஞ்சக்கூடிய விலங்குகள் இல்லை. இரவில் வேட்டையாடும் சிறுத்தைகளிடம் இன்னொரு வித்தியாச குணமும் உண்டு. இவை தாங்கள் வேட்டையாடிய இரையை மரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று சாப்பிடும். இவற்றின் பாதங்கள் பூனையின் பாதங்களைப் போல உள்ளிழுக்கும் அமைப்பு கொண்டவை. அதனால்தான் மரங்களில் எளிதாக ஏற முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE