”ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால்...” - பெரியாரின் 10 சிந்தனைகள் | பிறந்தநாள் சிறப்பு

By செய்திப்பிரிவு

பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் பெரியார், 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சிறந்த தத்துவ அறிஞராகவும், சிந்தனையாளராகவும் கருதப்படுகிறார்.

ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பெரியார், செப்டம்பர் 17 ஆம் தேதி, 1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். அதுவரை பலரும் பேசத் தயங்கிய கருத்துக்களை பொதுவெளிக்கு கொண்டு வந்து அதன் மூலம் உரையாடல்களையும், விவாதத்தையும் தொடர்ந்து ஏற்படுத்தினார். தனது சிந்தனைகளை ஆழமாகப் பரப்பினார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் கேள்விகளை எழுப்பினார்.

சமூக நீதி, சாதி, கடவுள் மறுப்பு, சமூக ஏற்றத் தாழ்வு, பெண் விடுதலை, பெண் கல்வி, விஞ்ஞானம், அரசியல், அறிவியல் என அனைத்து விஷயங்கள் குறித்தும் பெரியார் பேசினார். வயோதிகக் காலத்திலும் ஓய்வெடுக்காமல் தனது சமூகப் பணியை இடைவிடாது தொடர்ந்தார். பெரியாரின் சிந்தனை நீட்சியாகவே தமிழகத்தில் திராவிட கட்சிகள் தோன்றின.

மரணத்திற்குப் பிறகும் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரியாரின் சிந்தனைகள், நூற்றாண்டுகள் கடந்தும் வெளிசத்தைப் பரப்பக்கூடியவை.

அத்தகைய பெரியாரின் சிந்தனைகளில் சில...

* யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

* ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.

* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது.

* என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர், அதில் உண்மையில்லை. நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்.

* சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை.

* மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.

* ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன்.

* ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.

* ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.

*மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

செப்டம்பர் 17, இன்று பெரியார் பிறந்த தினம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE