‘கைகளை சுத்தம் செய்யாமல் உணவு சாப்பிட்டால் கல்லீரலை தாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்’ 

By செய்திப்பிரிவு

நெல்லை: கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதால் ஹெபடைடிஸ் ‘ஏ மற்றும் இ' வைரஸ் கிருமி கல்லீரலை தாக்கும் என்று திருநெல்வேலி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கல்லீரலை தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்லீரலை காக்கவும் ஹெபடைடிஸ் பி வைரஸை கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினம் ஆண்டு தோறும் உலக கல்லீரல்அழற்சி தினமாக அனுசசரிக்கப்படுகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை திருநெல்வேலி மாநகர காவல் துணைஆணையர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உயர் சிறப்பு மருத்துவமனை கண்காணிப்பாளரும், கல்லீரல் மற்றும் குடல்நல , மருத்துவப் பிரிவு துறைத் தலைவருமான கந்தசாமி வரவேற்றார். சிறுநீரகவியல் பிரிவுதுறைத் தலைவர் ராம சுப்பிரமணியம், குடல் நலப் பிரிவு பேராசிரியர் பாப்பி ரிஜாய்ஸ், உதவி மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், பி.எஸ்.சி பாரா மெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு கருத்தரங்கு: பேரணி முடிவில் கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. ஓய்வு பெற்றமருத்துவ பேராசிரியர் மன்மதராஜன், புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் சுந்தரம் மற்றும் கல்லீரல், குடல்நல அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் சரவண பூபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் ஹெபடைடிஸ் பி வைரஸால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் குறித்தும், அதன்வகைப்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. இந்த வைரஸ், ஏ, பி, சி, டி மற்றும் இ என்று, ஐந்து வகையில்இருந்தாலும், ‘ஏ மற்றும் இ' வைரஸ்கிருமி, நம்முடைய கையை சுத்தம்செய்யாமல் உணவு உட்கொள்வதால் தாக்குகிறது.

இதனால் ஏற்படும் பாதிப்பு, ஒரு வாரத்தில் சரியாகிவிடும், மற்ற மூன்று ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளும் ரத்தம் வழியாகவும், பாதுகாப்பற்ற உடல் உறவாலும், சுகாதார முறையில் பராமரிக்கப்படாமல் பச்சை குத்துதல், காது குத்துதல் மற்றும் ஒரே சவரக் கருவியை பலர் உபயோகித்தல் போன்றவற்றாலும் பரவுகிறது. இக்கிருமி தாக்கிய சிலநாட்களில், உடல் சோர்வு, மூட்டுவலி, வாந்தி, வலதுபுற அடி வயிற்றில் வலி ஆகியவை ஏற்படும்.

தடுக்கும் முறைகள்: ‘ஹெபடைடிஸ்' வைரஸ் தாக்காமல் இருக்க, குழந்தை பிறந்து, 24 மணி நேரத்துக்குள், "இமினோகுளோபின்' தடுப்பூசி போட வேண்டும். இதை தொடர்ந்து, ஒன்று மற்றும்ஆறு மாதத்துக்குள், மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும். பெரியவர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், அரசு மருத்துவமனையில், "ஹெச்பிஎஸ்எஜி.,' என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

கர்ப்ப கால கல்லீரல் அழற்சி நோயை கண்டுபிடிக்கும் பரிசோதனை, மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்க்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மற்றும் பைப்ரோஸ்கேன் பரிசோதனை நடைபெற்றது.

உதவி மருத்துவர் ஷபிக் நன்றி கூறினார். செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE