ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற தெருநாய்களிடம் சண்டையிட்டு இறந்த சேவலுக்கு நினைவேந்தல்: 500 பேர் பங்கேற்ற உ.பி. நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

லக்னோ: புதிதாக பிறந்த ஆட்டுக்குட்டியை கடிக்க வந்த தெருநாய்களிடம் சண்டையிட்டு இறந்த சேவல் ஒன்றிற்கு துக்கம் கடைபிடித்து, மனிதர்களுக்கு நடத்துவது போல நினைவேந்தல் நடத்தி உள்ளது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம். இதில் சுமார் 500 பேர் பங்கேற்றனர்.

தொட்டிலில் தூங்கிய உரிமையாளரின் குழந்தை பாம்பிடமிருந்து காப்பாற்றிய கிரிப்பிள்ளை கதையை சிறுவயதில் படித்திருப்போம். அதேபோல, வளர்த்த உரிமையாளர்களுக்காக நாய் உயிர்த் தியாகம் செய்த நிகழ்வுகளை செய்திகளில் நாம் படித்திருப்போம். ஆனால், இந்தச் செய்தி உரிமையாளர் வீட்டி ஆட்டுக்குட்டியை காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த ஒரு சேவலைப் பற்றியது. அந்த சேவலின் பெயர் லாலி.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், பெஹ்தாவுல் கலா கிரமாத்தைச் சேர்ந்த மருத்துவர் சால்க்ராம் சரோஜ். இவரது வீட்டில் லாலி என்ற சேவல் வளர்ந்து வந்துள்ளது. இந்தச் சேவல் கடந்த 13 நாட்களுக்கு முன்பு சால்க்ராம் வீட்டில் புதிதாக பிறந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற தெருநாய்களிடம் சண்டையிட்டு இறந்திருக்கிறது.

இதனை அறிந்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சேவலுக்கு நல்லமுறையில் இறுதிச் சடங்கு நடத்தி, துக்கம் கடைபிடித்து மனிதர்களுக்கு செய்வது போல நினைவேந்தல் நடத்தி லாலியின் கவுரவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து சால்க்ராம் சரோஜ் கூறும்போது,“லாலி இறந்த அன்று வீட்டில் இருந்த எல்லோரும் வீட்டின் முன்பகுதியில் இருந்திருக்கிறார்கள். அப்போது பின்பக்கம் திடீரென சேவல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கு வீட்டில் புதிதாக பிறந்திருந்த ஆட்டுக்குட்டியை கடிப்பதற்காக வந்த தெருநாய்கள் வந்துள்ளன. அதில் ஒரு நாய் ஆட்டுக்குட்டியை கடிக்க சென்ற போது, எங்கள் வீட்டுச்சேவல் லாலி, நாய் மீது பாய்ந்து அதனைக் கொத்தி காயப்படுத்தியுள்ளது. அதற்குள் அடுத்த நாய் லாலியைத் தாக்கி காயப்படுத்திவிட்டது. இதனால் லாலி ஜூலை 8-ம் தேதி இறந்து விட்டது” என்றார்.

அவரைத் தொடர்ந்த அவரது மகன் அபிஷேக், “லாலிக்கு நாங்கள் எல்லா சம்பிரதாயங்களுடன் இறுதிச் சடங்கு நடத்தி எங்கள் வீட்டிற்கு அருகில் அதை எரித்தோம். சடங்குகள் நடந்து கொண்டிருக்கும்போது எனது தந்தை, லாலிக்கு டெராவின் (நினைவேந்தல்) நடத்தலாம் என்றார். நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

லாலியின் நினைவேந்தல்:

லாலியின் மறைவுக்கு துக்கம் கடைபிடித்த சால்க்ராம் சரோஜின் குடும்பம் பின்னர் காரியமும் நடத்தியது. இதில் 500 பேர் கலந்து கொண்டனர். இதற்காக சமையலுக்கு தனியாக ஆள் ஏற்படு செய்திருந்தனர். விருந்தில், பூரி, கச்சோரி, சாதம், பருப்பு, ஊறுகாய், உருளைக்கிழங்கு, தக்காளி குழம்பு, கீரை, பூசணிக்காய் மற்றும் பூந்தி ஆகியவை பரிமாறப்பட்டன.

"இந்த பதார்த்தங்களை சமைத்தவர் அதற்காக என்னிடம் பணம் எதுவும் வாங்கவில்லை. இதைத்தான் அன்பிற்காக செய்வதாக தெரிவித்தார். லாலி பெயரிளவில் தான் சேவலேத் தவிர மற்றபடி அவன் எங்கள் குடும்பத்தில் ஒருவன். அவன் இடத்தில் வேறு யாரையும் இனிவைத்து பார்க்க முடியாது" என்று நெகிழ்ச்சியாக லாலியின் பிரிவைப் பகிர்ந்து கொண்டார் சால்க்ராம் சரோஜ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE