தயாரிக்கப்படும் முறையைப் பொறுத்து, பிரியாணியும் மருத்துவ குணமிக்க உணவு தான்! செயற்கைப் பொருட்களின் சேர்மானம் இல்லாமல், இயற்கையான அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மூலம் தயாரிக்கப்படும் பிரியாணி ரகங்கள் ஆரோக்கியமானவை. இதில் தனித்துவமான ஆம்பூர் பிரியாணி ரகங்கள், சுவையோடு சேர்த்து நலத்தையும் ஊட்டுபவை!
காற்றில் மிதக்கும் வாசனை
புகழ்பெற்ற ஆம்பூர் பிரியாணியைச் சுவைக்கலாம் என்கிற எண்ணத்தில் ஆம்பூரை நோக்கிப் பயணப்பட்டோம்! திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு எல்லையாக இருக்கிறது ஆம்பூர்.
காட்டுக்குள் நுழையும்போது, தாவரங்களின் வாசனை வருவதைப் போல, ஆம்பூர் நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் நுழைந்ததும் பிரியாணி வாசனை காற்றில் பரவியது! ’ஆம்பூர் பிரியாணி’ என்கிற பெயருடன் நிறையப் பிரியாணி கடைகள் கண்ணில் தென்பட்டன! நண்பர் ஒருவர் குறிப்பிட்ட ஆம்பூர் பிரியாணி கடையைத் தேடிக் கண்டுபிடித்து உள் நுழைந்தோம்!
பிரியாணி தயாராகும் காட்சி
ஆம்பூர் மட்டன் பிரியாணி ரகத்தின் தயாரிப்பு முறைகளை அறிந்துகொள்ள ஆயத்தமானோம்! கடை உரிமையாளரிடம் அதன் தயாரிப்பு முறைகளைக் கேட்டறிந்து, நேரடியாகப் பார்க்கத் திட்டமிட்டோம். மூன்று நபர்களுக்காகப் பிரியாணி தயாரிக்கப்படும் காட்சி எங்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரியாணி தயாரிப்புக்குத் தேவைப்படும் அடிப்படை உணவுப் பொருட்களைப் பற்றி அறிமுகம் வழங்கினார் பிரியாணி சமைக்கும் வல்லுநர்.
தீயின் அளவு முக்கியம்
ஆம்பூர் பிரியாணி தயாரிப்பில் உள்ள சமையல் நுணுக்கங்களையும் எங்களால் கவனிக்க முடிந்தது. இறைச்சி முற்றியதாக இல்லாமல், இளம் கறியாக இருப்பது சீரண ஆற்றலுக்கு உகந்தது. சீரகச் சம்பா அரிசிச் சாதம் உடலுக்கு வலிமை அளிக்கும். இஞ்சி, பூண்டு, மிளகாயை அப்படியே போடாமல் விழுதாக அரைத்துப் போடுவதால் சுலபமாக இறைச்சித் துண்டுகளுடன் கலந்து செரிமானத்தை மேம்படுத்தும். ஒவ்வொரு பொருளையும் வதக்கும் நேரமும், தீயின் அளவைத் தேவையான அளவுகளில் மாற்றுவதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பின்னர், சில நிமிடங்களில் ஆவி பறக்கப் பிரியாணி பரிமாறப்பட்டது! தொடுகைக்காக வெங்காயமும், எண்ணெய்க் கத்திரிக்காயும்! நல்ல காமினேஷன். இனிப்புக்காக ’பிர்னி’ எனப்படும் அப்பகுதியில் புகழ்பெற்ற இனிப்பு ரகம் வழங்கப்படுகிறது. பிர்னிக்கு எனத் தனி ரசிகப் பட்டாளமே அங்கு இருக்கிறதாம். சுவைத்துப் பார்த்தோம். வித்தியாசமான சுவையால் ஆம்பூர் பிரியாணி எங்களைக் கட்டிப்போட்டது.
அளவோடு சாப்பிடுவது நல்லது
உடல் பருமன் உடையவர்கள், அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகமிருப்பவர்கள், பிரியாணி ரகங்களைத் தவிர்ப்பதே நல்லது. அளவுக்கு மீறிச் சாப்பிடப்படும் உணவுகள், அது பிரியாணி என்றல்ல; எந்த உணவானாலும் சரி, நிச்சயம் பாதகங்களையே உண்டாக்கும்.
கடைகளின் தேர்வு முக்கியம்
பழைய எண்ணெய், தரமற்ற உணவுத் தயாரிப்பு பொருட்கள், பழைய இறைச்சி பயன்பாடு, செயற்கை சுவையூட்டிகள், கலப்படப் பொருட்கள் போன்ற தயாரிப்பு முறைகேடுகள் நிகழ்ந்தால், பாதிப்பு ஏற்படுவது உறுதி! எனவே, அறம் சார்ந்து செயல்படுகின்ற கடைகளைத் தேர்ந்தெடுத்து பிரியாணி ரகங்களைச் சுவைப்பது நல்லது.
மகிழ்ச்சி அளிக்கும் பிரியாணி
பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் ஆம்பூர் பிரியாணி, உடலுக்கு வலுவைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல்; மனதிற்கும் வலுவைக் கூட்டும். ஓர் உணவுப் பொருள் உடலுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும் என்பதற்கு ஆம்பூர் பிரியாணி ஒரு சிறந்த உதாரணம்.
ஏலகிரி சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்போது கண்டிப்பாக பிரியாணி நகரமான ஆம்பூருக்குப் பயணம் மேற்கொண்டு அட்டகாசமான ஆம்பூர் பிரியாணியைச் சாப்பிடத் தவறாதீர்கள்!
> இது, அரசு சித்த மருத்துவர் டாக்டர் வி.விக்ரம்குமார் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
கட்டுரையாளர்,
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago