இரட்டைமலை சீனிவாசன் உடனான அம்பேத்கரின் நட்பு - ஒரு சிறப்புப் பார்வை

By செய்திப்பிரிவு

இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு (1891- 1956) முன்னோடியாகவும், சக பயணியாகவும் இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் (1860 - 1945). அம்பேத்கர் பிறந்த ஆண்டில் ‘பறையர் மகாஜன சபை’யை உருவாக்கி, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக சீனிவாசன் போராடினார். 1900-ல் தென்னாப்பிரிக்கா சென்ற அவர், அம்பேத்கர் அரசியலில் நுழைந்த 1920-ல் தாயகம் திரும்பி தீவிர அரசியலை முன்னெடுத்தார்.

இரட்டைமலை சீனிவாசனுக்கும் அம்பேத்கருக்கும் நெருக்கமான சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் கல்வியால் மேலெழுந்து வந்தவர்கள். கம்பீரமான கோட் சூட்டே இவர்களின் அடையாளம். இருவரும் தம்மைக் காட்டிலும் தம் மக்களைத் தீவிரமாக நேசித்தவர்கள்.

1880-களில் இரட்டைமலை சீனிவாசன் க‌ல்லூரிக்குச் சென்றபோது, அங்கு படித்த 400 மாணவர்களில் அவர் மட்டுமே ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ‌ர். கடும் சிரமங்களுக்கு மத்தியில் படிப்பை முடித்த அவரே தமிழகத்தின் முதல் பட்டியலினப் பட்டதாரி. இதேபோல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பட்டியலினத்தவர் என்கிற பெருமை அம்பேத்கருக்கு உண்டு.

இருவரும் பத்திரிகையைப் பயன்படுத்தி, ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்கள். இரட்டைமலை சீனிவாசன் ‘பறையன்’ (1893) இதழை நடத்தியதைப் போலவே, அம்பேத்கரும் ‘மூக் நாயக்’ (1920), ‘பகிஷ்கருக் பாரத்’ (1927) ஆகிய‌ இதழ்களை நடத்தினார்.

1939-ல் இரட்டைமலை சீனிவாசன் தன் வாழ்க்கை வரலாறான ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ எழுதிய அதே காலகட்டத்தில், அம்பேத்கர் தன் வாழ்க்கை அனுபவங்களை ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ என எழுதி வெளியிட்டார்.

1923-ல் மதராஸ் மாகாண சட்டமேலவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, நில உரிமை, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்காகக் குரல் எழுப்பினார்.

ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமைக்காக ‘ஒடுக்கப்ப‌ட்டோர் கல்விக் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கி, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க பள்ளிகளும், விடுதிகளும் அமைத்து, உதவித்தொகையும் வழங்குமாறு வலியுறுத்தினார்.

இரட்டைமலை சீனிவாசனின் சமுதாய நடவடிக்கைகளின் காரணமாக, தேசிய அரசியல் தலைவர்களிடையே அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவ்வாறே அம்பேத்கருடன் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

1930 – 31ல் லண்டனில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார். ஒடுக்கப்பட்டோரின் ம‌க்கள்தொகைக்கு ஏற்பக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், இரட்டை வாக்குரிமை ஆகியவற்றை வலியுறுத்தி சீனிவாசன் உரையாற்றினார்.

அம்பேத்கரும் சீனிவாசனும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலே அரசமைப்பில் பட்டியலினத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் அம்பேத்கருட‌ன் பழகியது தொடர்பாக, ‘‘நானும் அவரும் நகமும் சதையும்போலப் பழகினோம். வட்டமேஜை மாநாடுகளில் இருவரும் இணைந்து ஒடுக்கப்பட்டோருக்காகப் போராடினோம்’’ என இரட்டைமலை சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை வாக்குரிமையைக் கண்டித்து காந்தி எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். நாடே கொந்தளிப்பாக மாறிய சூழலில், தென்னாப்பிரிக்காவில் அவருடன் பழகியவர் என்ற முறையில், இரட்டைமலை சீனிவாசன் காந்தியுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பலன் கிடைக்காததால் 1932-ல் அம்பேத்கர் - காந்தி இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தில் அம்பேத்கரின் பக்கம் இரட்டைமலை சீனிவாசனும், காந்தியின் பக்கம் ராஜாஜியும் கையெழுத்திட்டன‌ர்.

அம்பேத்கர் தன் சமயத் தேடலில் இரட்டைமலை சீனிவாசனின் நெருங்கிய உறவினரான பண்டிதர் அயோத்திதாசரின் பௌத்தப் பாதையைக் கண்டடைந்தார். அதேவேளையில், இரட்டைமலை சீனிவாசன் ஒடுக்கப்பட்டோரின் சைவ மரபுகளைத் தேடினார்.

இரட்டைமலை சீனிவாசனின் மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்ட நினைவு காரியக் கமிட்டியிலும் அம்பேத்கர் இடம்பெற்றார். இந்த அம்சங்கள் இரட்டைமலை சீனிவாசன் மீது அம்பேத்கர் கொண்டிருந்த நட்பையும் இருவரும் ஒரே நோக்கத்துக்காக இணைந்து செயல்பட்டதையும் வெளிப்படுத்துகின்றன.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

மேலும்