சதீஷ் - தீபா தம்பதியரின் வீடியோக்களை பார்க்காமல் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டா தளங்களில் பயணித்துவிட முடியாது. அதிலிருந்து தப்பி வாட்ஸ்அப் சென்றால் கூட அங்கேயும் அவர்கள் பிரவேசிப்பார்கள். குறுகிய காலத்தில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த அவர்களிடம் பேசினோம்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள்..
“நான் சதீஷ். மனைவி தீபா. எனக்கு சொந்த ஊர் சென்னை. நான் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கு சிறுவயதிலிருந்து சினிமா மீது அதீத ஆர்வம். அதற்கு என் அம்மா தான் காரணம். சிறுவயதிலிருந்தே என் அம்மா பார்த்த சினிமாக்களை என்னிடம் சொல்லி சொல்லி எனக்குள் சினிமா மீதான ஈர்ப்பை ஏற்படுத்தினார். அது அப்படியே பழகி, நான் நிறைய படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படியிருக்கும்போது, 2015 - 16 காலக்கட்டத்தில் டிக் டாக்கிற்கு முன்னதாக மியூசிக்கலி என்ற செயலி ஒன்று அறிமுகமானது. எல்லோரும் அதில் மூழ்கியிருந்தனர். அப்போது நானும் விளையாட்டாக வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்தேன். மனைவியுடன் இணைந்து வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றி வந்தேன்.
அப்போது நானும் என் மனைவியும் இணைந்து வடிவேலு, கோவை சரளா நகைச்சுவையை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் வீடியோவை ஒன்றை பதிவேற்றினோம். 2019-ம் ஆண்டு அந்த வீடியோ பயங்கரமாக வைரலானது. நல்ல ரீச் கிடைத்தது.
» 2 உறுப்புகள் செயலிழப்பு, 95 நாட்கள் எக்மோ சிகிச்சை: மீனாவின் கணவர் இறப்புக்கு காரணம் என்ன?
அதன்பிறகு நாங்கள் போடும் வீடியோக்களை மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். என் குழந்தையை வைத்து சில வீடியோக்களை பதிவேற்றினேன். அதுவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்த வீடியோக்கள் வியூஸ்களை அள்ளின. குறிப்பாக எங்களை பக்கத்துவீட்டு பையன் போல மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். இன்றைக்கும் சாலையில் எங்காவது என்னைப் பார்த்தால், பல ஆண்டுகள் பழகியது போல அவ்வளவு நெருக்கமாக பேசுகிறார்கள். நாளாக நாளாக வீடியோக்கள் வைரலாக தொடங்கின.
பிறகு ஒருகட்டத்தில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு அடிக்ட் மாதிரி தான். நிறைய பேர் பாராட்டுகிறார்கள். உங்கள் வீடியோவைப் பார்த்து சிரிக்கிறோம்; மகிழ்கிறோம். வீடியோக்கள் ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டராக உள்ளது என பலரும் மனம் திறந்து பாராட்டுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆக, டிக் டாக் தடைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் ஷார்ட் வீடியோக்களை போட முடிவெடுத்தோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தேன்.
அந்த வீடியோ செம வைரலானது. பிறகு ஷார்ட்ஸ் வந்தது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதன் மூலம் எங்களின் ஒரு நிமிட வீடியோக்கள் ரீச் ஆக ஆரம்பித்தது. நாட்கள் ஆக ஆக, மில்லியன் கணக்கில் வீடியோக்கள் வியூஸ்களை அள்ளியது. நான் பெரும்பாலும் வ்லாக் (vlog) வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக வீட்டில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை வைத்து சுவாரஸ்யமாக வீடியோக்களை உருவாக்கினேன். அதேசமயம் என் மனைவி தீபா ஒரு சேனல் வைத்து அதில் வ்லாக் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். என்னுடைய வீடியோக்களை பார்த்த பலரும், எங்கள் வீட்டில் நடந்தது போலவே இருக்கிறது என்று பலரும் பாராட்டினார்கள்.
அந்த வீடியோக்கள் மற்றவர்களுடைய வாழ்விலும் பொருந்திப்போவது தான் அதன் பலம். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களிலும் என்னுடைய வீடியோக்கள் இடம்பெற ஆரம்பித்தது. வயதானவர்கள் பலரும் சோஷியல் மீடியாக்களில் இருப்பதில்லை. மாறாக வாட்ஸ்அப் மூலம் வரும் வீடியோக்களை அவர்கள் விரும்பி பார்க்கின்றனர். அதன் மூலமாகவும் என்னுடைய வீடியோக்கள் ஏராளமாக ஷேர் செய்யப்பட்டன. இப்படித்தான் என் யூடியூப் பயணம் தொடங்கியது.”
வீடியோவுக்கான கான்செப்ட்டை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அதற்காக ஸ்கிரிப்ட் எழுதி ஒரு குறும்படம் போல எடுப்பீர்களா அல்லது அந்த நேரத்தில் தோன்றுவதை வைத்து வீடியோ ஷூட் நடக்குமா?
“பல தரப்பட்ட இடங்களில் நிகழ்வதையும், பார்ப்பதையும் வைத்து தான் வீடியோவை உருவாக்குகிறோம். வீடுகளில் அன்றாடம் நடக்கும் விஷயங்கள், எங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள், நண்பர்கள் அவர்கள் வீடுகளில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், குடித்து விட்டு வீட்டுக்கு வருவது, அதனால் ஏற்படும் பிரச்னைகள் என சுற்றியிருக்கும் சம்பங்கள் தான் என்னுடைய கான்செப்ட். ஸ்கிரிப்டை பொறுத்தவரை, நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கி வைத்துள்ளோம்.
அதில், ஒரு வாய்ஸ் ஓவரிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். இதுதான் கான்செப்ட். தொடக்கத்தில் இப்படி நடக்கிறது, பிறகு வாய்ஸ் ஓவர், இறுதியில் ஒரு பாடலை வைக்கிறோம் என முழுவதையும் விவரித்துவிடுவேன். இறுதியில் ஒரு பாட்டை வைத்தால் அது வீடியோவின் தரத்தை உயர்த்தி, நகைச்சுவையாக முடியும் என எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். ஸ்கிரிப்படும் எழுதுவேன். ஒரு நிமிட வீடியோக்கள் என்றால், என் மனைவியிடம் நானே வாயால் சொல்லி அப்படியே ஷூட் செய்துகொள்வோம்.
இந்த வீடியோக்களில் அப்போது என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே ஸ்பாட்டில் டயலாக்காக பேசிவிடுவோம். பொறுமையாக தெளிவான வீடியோக்களை எடுக்க வேண்டும் என்ற போது மட்டும் டயலாக் எழுதி ஷூட் செய்வோம்.”
கேமிரா, எடிட்டிங்குக்கு தனியாக குழு எதும் வைத்திருக்கிறீர்களா அல்லது நீங்களே எல்லாவற்றையும் செய்துகொள்கிறீர்களா?
“எங்களிடம் 11 பேர் கொண்ட குழுவெல்லாம் இல்லை (என சொல்லிவிட்டு சிரிக்கிறார்). கதை, திரைக்கதை, வசனம் என டி.ஆரைப்போல நான் தான் எல்லாவற்றையும் செய்கிறேன். ஐபோன் இருப்பதால் கேமிரா குவாலிட்டி என எல்லாமே எனக்கு எளிதாக இருக்கிறது. எனக்கு எடிட்டிங் மிகவும் பிடித்த ஒன்று. 2005 - 06 காலக்கட்டத்தில் அப்பொழுதே வீடியோக்களை எடிட் செய்வேன். பழைய பாடல்களை,புதிய வீடியோக்களில் மிக்ஸ் செய்வது என எல்லாவற்றையும் செய்வேன். எனக்கு அதில் தான் ஆர்வம். ஆனால், என்னை கொண்டுபோய் சிவில் இன்ஜினியரிங்கில் சேர்த்துவிட்டார்கள். எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. அப்போதிருந்தே எடிட்டிங்கில் ஆர்வம் இருந்ததாலும், இன்று எல்லா சாஃப்ட்வேரும் எளிதாக இருப்பதாலும் நானே எடிட் செய்துகொள்கிறேன்.”
இப்போழுது நிறைய பேருக்கு இருக்கும் சந்தேகம் ஷார்ட்ஸ் மூலமாக பணம் வருமா என்பது தான். அது குறித்து?
“யூடியூப் ஷார்ட்ஸ் மூலமாக ரெவன்யூ வரும். எப்படியென்றால், மொத்தமாக சேர்த்து ஒரு அமௌண்ட் கொடுப்பார்கள். 2021-ம் ஆண்டு அக்டோபர், செப்டம்பரில் ஒரு ஷார்ட்ஸ்க்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். முன்பெல்லாம் ஒரு நிமிடத்திற்குள்ளான வீடியோவேக்கே காசு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஒரு நிமிடத்திற்கு மேல் வீடியோ இருக்க வேண்டும் என வரையறுத்துவிட்டார்கள்.
நிறைய பேர் ஷார்ட்ஸ் வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்ததால், யூடியூப் வீடியோவுக்கான பணத்தை குறைத்துவிட்டது. மொத்தமாக பணத்தை கொடுக்க ஆரம்பித்தார்கள். உதாரணமாக ஒரு மாதத்திற்கு 100 டாலர்கள் என மொத்தமாக கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். வீடியோ பயங்கரமான வைரலாக இருந்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும். அதில் ஒன்றிரண்டு வீடியோக்களாவது ஒரு மில்லியன் வியூஸ்களை பெற்றால்தான் வருமானம்.”
நீங்கள் முழுக்க முழுக்க யூடியூப் வீடியோக்களில் இறங்கிவிட்டீர்களா?
“இல்லை. நான் இதற்காக 2 மணிநேரம் ஒதுக்கிவிடுவேன். அதுவே ஒரு வீடியோ எடுக்க எனக்கு போதுமான நேரம். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். யூடியூப் வீடியோக்கள் எனக்கு பார்ட்டைம் தான்.”
இன்று நிறைய யூடியூப் சேனல்கள் முளைத்துவிட்டன. யூடியூப்பில் மட்டுமே பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என இளைஞர்கள் கருதுகிறார்கள். இதை மட்டும் நம்பி ஒருவரால் வாழ்க்கையை நடத்த முடியும் என நினைக்கிறீர்களா?
“யூடியூப் இப்போதைக்கு ஒரு ட்ரெண்ட். இதை நம்பி நம் தொழிலை கைவிட முடியாது. யூடியூப்பை நம்பி மட்டுமே இருக்க முடியாது. என்றைக்குமே நம் தொழில் தான் நம்மை காப்பாற்றும். எங்களுடைய நேரம் நல்லா இருந்ததோ என்னவோ எங்கள் வீடியோக்கள் ரீச் ஆகின. எங்களை விட திறமையான ஆட்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு வராமல் கூட இருந்திருக்கலாம். இதை மட்டும் நம்பி சம்பாதிக்க முடியுமா என்றால் அது கஷ்டம் தான். காரணம் முன்பு ஒரு தொகையை கொடுத்துக்கொண்டிருந்த யூடியூப் தற்போது அதை குறைத்துவிட்டது. இன்னும் கூட குறையலாம். சொல்ல முடியாது. யூடியூப் ஒரு மதில் மேல் பூனையப்போலத்தான். உங்கள் வீடியோக்கள் ரீச் ஆக வேண்டும். மக்களை பார்க்க வைக்க வேண்டும். அதில் வியூஸ்கள் குறைந்துவிட்டால் மீண்டும் பின்னோக்கி தள்ளப்படுவோம்.”
நீங்கள் இந்த வீடியோக்களை எடுக்கும்போது என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?
“என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு மிகப்பெரிய பிரச்னை கன்டென்ட் தான். தினமும் 8 மணிக்கு 3-4 நிமிட வீடியோக்களை பதிவேற்றுவேன். நீளமான வீடியோக்களை போடமாட்டேன். எவ்ளோ தான் கன்டென்டை உருவாக்க முடியும். அது தான் பெரிய சவாலாக எனக்கு தோன்றுகிறது. காரணம் ஒரு வீடியோவை எடுத்துவிட்டால் அந்த கன்டென்ட் எனக்கு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அதை போடுவேன். அதுபோல போடாமல் டெலிட் செய்த வீடியோக்கள் நிறையவே உண்டு. ஏனோ தானோ என போடமாட்டேன்.
எனக்கு சிரிப்பு வரவேண்டும். மனைவிக்கு சிரிப்பு வரவேண்டும். அப்போதுதான் அதை போடுவேன். அந்த தேடுதல் எனக்கு சிரமமாக உள்ளது. நிறைய பேரிடம் பேச வேண்டியிருக்கிறது. அவர்கள் வீடுகளில் என்ன நடந்தது என்பதை கேட்கவேண்டும். அதையொட்டிதான் வீடியோவை உருவாக்குவேன். அதனால் எனக்கு பெரும் சவால் கன்டென்ட்தான்.”
உங்களுடையது காதல் திருமணமா?
“ஆமாம். என்னுடைய திருமணம் காதல் திருமணம் தான். 10-வது படிக்கும் போதிலிருந்து நாங்கள் காதலித்தோம். என்னுடைய பக்கத்து வீடுதான் தீபா. சாதிமறுப்பு திருமணம். இருவீட்டாரின் ஒத்துழைப்புடன் தான் திருமணம் செய்துகொண்டோம். எனக்கு சதீஷ் தான் வேண்டும் என் மனைவி உறுதியாக இருந்து இறுதியில் என்னை இப்படி கஷ்டத்தில் தள்ளிவிட்டார் (என்கிறார் சிரித்துக்கொண்டே). நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். என் மனைவி பெங்களூரு. ஆனால், அவர் வளர்ந்தது எல்லாமே சென்னை தான்.”
கேமரா முன்னாடி இருக்குற தம்பதிக்கும், கேமரா முன்னாடி இல்லாத கணவன் மனைவிக்கு என்ன வித்தியாசம்? பர்சனலா நீங்க ரெண்டு பேரும் எப்படி?
“உண்மை சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் வீடியோவில் கேமராவுக்கு முன்னால் பார்ப்பது போலத்தான் யதார்த்தத்திலும் இருப்போம். எனக்கு யதார்த்தத்தை பிரதிபலிப்பது தான் பிடிக்கும். எலியும் பூனையுமாகத்தான் இருவரும் இருப்போம். அதற்காக வீடியோவில் காட்டுவதுபோல தீபா அவ்வளவு மோசமான மனைவி கிடையாது. நிறையபேர் என்னிடம் நீங்கள் வீட்டில் 'அடி வாங்குவீர்களா?' என சீரியஸாக கேட்கிறார்கள். அப்படியெல்லாம் நடக்காது. கணவன் - மனைவியிடையே வரும் சண்டைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அதனை தடுக்க முடியாது. மற்றபடி ஜாலியாக, கலாய்த்துக்கொண்டு இருப்போம்.”
பொதுவாக வீட்டில் மனைவியை, காதலியை ட்ரால் செய்து தான் பெரும்பாலான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உங்கள் வீடியோவும் கூட. அப்படியிருக்கும்போது, மனைவிகள் என்றால் இப்படித்தான் என்ற பொது பிம்பம் சமூகத்தில் கட்டமைக்கப்படாதா?
“நீங்கள் சொல்வது சரிதான். நானே அப்படியான வீடியோக்களைத்தான் பதிவேற்றம் செய்து வருகிறேன். உண்மையில் மனைவிகள் அப்படி கிடையாது. என்னவென்றால், அது ஒரு காமெடிக்காக தேவைப்படுகிறது. அதை வெறும் ரசித்துவிட்டு கடந்துவிடலாம். நம் மனைவியை எவ்வளவு திட்டினாலும், எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம் என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். எல்லார் வீட்டிலும் அப்படித்தான். இதை படித்துகொண்டிருப்பவர்களையும் சேர்த்து தான். ஒருபோதும் நம் மனைவியை விட்டுகொடுக்க மாட்டோம்.
ஆனால், இதுபோன்ற வீடியோக்களை மக்கள் ரசிக்கிறார்கள். சில மனைவிகளுக்கு கூட அது பிடிக்கும். மனைவிகள் ஆதிக்கம் செலுத்துவதாக காட்டினாலும், உண்மையில் அவர்கள் அப்படியில்லை. கணவர்கள் தான் வீடுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இது ஒரு பொய்தோற்றம் தான். ஆனால், இது போன்ற வீடியோக்களை தவிர்க்கலாம். எனக்கு என்ன பிரச்சினையென்றால், அதை என்னால் தவிர்க்க முடியாது. காரணம் என்னுடைய கன்டென்ட்டே அதுதான். அதை மக்கள் ஜாலியாக எடுத்துக்கொண்டு ரசித்து கடந்துவிட வேண்டும். அவ்வளவு தான். மற்றபடி எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். அன்பை பகிர்வோம்.''
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago