குழந்தைகளின் எடையைக் கூட்ட ‘15 நாள் டாஸ்க்’ - மருத்துவரின் முழு கைடன்ஸ்

By செய்திப்பிரிவு

பொதுவாக வளர்ந்த குழந்தைகளை காட்டிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உடல் எடை குறைந்துதான் காணப்படுவார்கள். அவர்களின் உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில விளக்கம் தருகிறார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி குழந்தை நல மருத்துவரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் ஜி.செந்தில் குமரன்

எடை குறைவு ஆபத்து இல்லை: “குழந்தைகள் பிறந்ததில் இருந்து 1 வயது ஆகும்போது அவர்களின் உடல் எடை சராசரியாக 3 மடங்கு இருக்க வேண்டும். அதற்கு குறைந்தாலும் குழந்தைகள் நல்ல ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் கவலைப்பட வேண்டாம். அவர்களின் உடல் எடை அதிகரித்திருந்தால் மட்டும் தான் ஆரோக்கியம் என்றில்லை. பொதுவாகவே நம் நாட்டில் குழந்தைகள் 1 வயது ஆகும் போது 9 கிலோ முதல் 10 கிலோ வரை இருப்பார்கள். சில குழந்தைகள் 7.5 முதல் 8 கிலோ வரை கூட இருப்பார்கள். அது நார்மல் தான். இதில் உடல் எடையை வைத்துப் பயப்படுவதற்கு எதுவும் இல்லை.

உணவு முறைகளில் உள்ள சில வேறுபாடுகளினால் அப்படி இருப்பார்கள். பொதுவாக 5 வயது வரை குழந்தைகள் உணவு சாப்பிட கொஞ்சம் அடம் பிடிக்கத்தான் செய்வார்கள். அதன்பிறகு அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். மற்றபடி அவர்களின் உணவுகளில் சில மாற்றங்களைச் செய்து அவர்களை சாப்பிட வைக்கலாம்.

சரி எல்லாவற்றையும் விட்டுவிடலாம். உங்கள் குழந்தைகளின் எடையை மாதத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப சீராக்க 15 நாட்களுக்கான ஒரு டாஸ்க் வைத்துக்கொள்வோம்.

அட்டவணையிடுங்கள்: முதலில் நீங்கள் ஒரு குட்டி நோட் எடுத்து கொள்ளுங்கள். இப்போது இதில் உங்கள் செல்லக் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக சமநிலை உணவுகள் பற்றிய குறிப்புகளை ஒரு நாள் விடாமல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் என்ன கொடுத்தீர்கள்... என்ன என்ன குழந்தை விரும்பி சாப்பிட்டது... ஒவ்வொரு நாளுக்குமான உணவு அதிகரிப்பு என்ன போன்றவற்றை மிகத் துல்லியமாக நேரப்படி எழுதி வரப்போகிறீர்கள். உதாரணத்திற்கு, முதலில் தேதியை குறித்துக் கொள்ளுங்கள். 9 மணி முதல் 11 மணி வரை, பிறகு மதியம், அதன் பின்பு இரவு வரை என எதை ஒன்றையும் விடாமல் நோட் போட்டு எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது வரை எழுதுங்கள்.

இப்போது முதல் நாள் சாப்பிட்ட இட்லியின் அளவு 1/2 என்றால் அதற்கடுத்த நாள் 1 என்கிற அளவு வரை அளவை அதிகரியுங்கள். அது இட்லியாகவோ, சாதமாகவோ கூட இருக்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு பிடித்த உணவாக அது இருக்க வேண்டும். அதைத்தான் குழந்தையும் எதிர்பார்க்கும்.

வெரைட்டி அவசியம்: மேலும், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான உணவை முடிந்தளவு செய்து கொடுங்கள். முதலில் ஒரு குட்டி தோசையினை சாதாரணமாக கொடுத்துவிட்டு, பிறகு கொஞ்சம் காய்கறி மிக்ஸிங் போட்டு அரைத்து அதனையும் தோசையில் போட்டு அடுத்ததாக ஒரு ஸ்பெஷல் தோசை கொடுக்கலாம். அதற்கடுத்ததாக சர்க்கரைப் பொங்கலை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும். அதனால் அதனை வெல்லத்தில் செய்து கொடுக்க வேண்டும்.

இந்த உணவில் இரும்பு சத்து அதிகம். அதிலும் முக்கியமாக இந்த டயட் உணவின் போது முட்டையின் மஞ்சள் கருவினை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவாக கடைபிடித்து அதன் அளவை அதிகரித்துக் கொண்டே இந்த டயட்டை 15 நாட்கள் கடைபிடியுங்கள். 15 நாட்களின் முடிவில் உங்கள் குழந்தையின் எடை எவ்வளவு கூடியிருக்கிறது என்று பாருங்கள். நிச்சயம் திருப்திகரமாகத்தான் இருக்கும்.

சுவையை அறிமுகம் செய்யுங்கள்: உங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில் உடல் எடை குறித்து எந்தப் பயமும் வேண்டாம். பெற்றோர்கள் முதலில் குழந்தைகள் நாம் சாப்பிடுவது போலவே அவர்களும் சாப்பிட வேண்டும் என்று நினைக்க கூடாது.

முக்கியமாக காய்கறிகளின் சுவைகளை சிறுவயதில் இருந்து பழக்கப்படுத்துங்கள். நிறைய குழந்தைகள் வெள்ளைச் சாதம் மட்டும் தான் சாப்பிடுகிறார்கள் என சொல்லும் பெற்றோர்கள் நிறைய பேரை இப்போது பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் புதிதான எந்த சுவையையும் பழக்கப்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பது யார் மீதான தவறு.

தாய்மார்கள் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் உணவு விஷயத்தில் முதலில் இருந்தே ஒரு சரியான விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கான உணவை அவர்கள் தீர்மானிப்பதே இல்லை. ஏதோ ஒரு வகையில் சாப்பிடுகிறார்கள் என்று நினைத்து விடுகிறார்கள். அது தவறு. நிறைய தாய்மார்களுக்கு அதுகுறித்த ஒரு விசாலமான பார்வை இன்னும் ஏற்படவில்லை.

டாக்டர் ஜி.செந்தில் குமரன்,
குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர்,
அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி.

பிறந்த 6 மாதங்களுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. ஆனால் நிறைய வீடுகளில் குழந்தைகள் அந்த காலகட்டத்தில் சரியாக பால் குடிக்கவில்லை என்று சுக்கு, மிளகு போன்றவற்றை அரைத்து கொடுக்கிறார்கள்.

பால் குடித்ததும் குழந்தைகளை உடனே தூங்க வைக்காமல் ஒரு 10-15 நிமிடங்கள் தோளில் போட்டு தட்டிக் கொடுத்த பின்பு தூங்க வைக்க வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் குழந்தைகளுக்கு குடித்தப் பால் எதிர்த்துக் கொண்டு வரலாம். ஏப்பம் வராமல் இருக்கும் காரணத்தை வைத்து இஞ்சி, சுக்கு போன்றவற்றை கொடுக்கிறார்கள். அது குழந்தைகளுக்கு அல்சர் போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.

புட்டிப்பால் வேண்டாமே: அதுபோக தண்ணீர் நிறைய குடிக்க வைக்கக்கூடாது. அப்படி செய்தால் தாய்ப்பால் குடிப்பது குறைந்துவிடும். பிறகு குழந்தை எடை குறைய ஆரம்பித்துவிடும். ஆறு மாதங்கள் கழித்து குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் கேப்பைக் கூழ் கொடுக்க ஆரம்பிப்பார்கள். இது எல்லா தாய்மார்களும் பொதுவாகச் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்று.

6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்தவர்கள்... எட்டாம் மாதத்தில் தாய்ப்பால் வரவில்லை... அதனால் நிறுத்திவிட்டோம் என்பார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் அவர்களை அறியாமலேயே அவர்கள் செய்த தவறுதான் காரணமாக இருக்கும். என்னவென்றால், பாட்டிலில் பசும்பாலை அடைத்துப் புகட்டுவது.

பாட்டில் என்பதால் மிக வேகமாக பால் வரும். பாட்டிலில் குழந்தை குடித்துப் பழகிவிட்டால், பிறகு தாயிடம் பால் குடிக்கும்போது அதே அளவு வேகத்துடன் பாலை எதிர்பார்த்துக் குடிக்கும். அதனால் குடிக்க முடியாது. இதற்கு ‘நிப்பிள் கன்ஃப்யூஷன்’ என்று பெயர். அதற்கடுத்து குழந்தைகள் பாட்டில் பாலைத்தான் எதிர்பார்க்கும். இதனால் குழந்தைகள் சீக்கிரம் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தி விடும்."

> இது, ஜி.காந்தி ராஜா எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்