சிட்ரஸ் பழங்கள் முதல் இளநீர் வரை... கோடையில் அதிகம் சாப்பிட வேண்டியவை!

By கு.கணேசன்

கோடையில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய சில இயற்கை உணவு வகைகளும், அவை தரும் பலன்களும் என்னவென்று பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்: திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றைச் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம். இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதே, இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம். இந்தச் சத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. கோடையில் முதியவர்களும் குழந்தைகளும் அதிக நேரம் வெயிலில் அலைந்தால் மயக்கம் அடைவது வழக்கம். இவர்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். எனவே, இந்த வயதில் இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய், திராட்சை அல்லது ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை, நன்னாரி கலந்த சர்பத் அருந்திவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் அதிகமாகப் போகும். இவற்றில் உள்ள குளுக்கோஸ் உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடும் என்பதால், விரைவிலேயே உடல் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கும்.

நன்மை தரும் நுங்கும் பதநீரும்

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வாரி வழங்குவதில் நுங்கும் பதநீரும் முக்கியப் பங்காற்றுகின்றன. உடல் வெப்பத்தைக் குறைக்கிற பல தாதுகள் இந்த இரண்டிலும் கலந்திருக்கின்றன. இவற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து வயிற்றையும் நிரப்பும்; பசியையும் தூண்டும். சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. இவர்கள் நுங்கு சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். கோடையில் நீரிழப்பு காரணமாகப் பலருக்கு மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் தினமும் ஒரு நுங்கும் பதநீரும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மறையும். நுங்கும் பதநீரும் செலவு குறைந்த கோடை உணவு என்று சொன்னால் மிகையில்லை.

உற்சாகம் ஊட்டும் இளநீர்

கோடைக் காலத்தில் காபி, டீ மற்றும் செயற்கைக் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பதால் பணத்தை இழப்பது மட்டுமல்ல உடலையும் கெடுத்துக்கொள்கிறோம். மென்பானங்களைக் குடிப்பதால் வெயில் காலத்தில் ஏற்படுகிற சிறுநீர் கல் தொல்லை அதிகப்படும். இவற்றில் உள்ள செயற்கை சர்க்கரை உடல் பருமனுக்கு வழிவகுக்கும். கவர்ச்சி வண்ணங்களுக்காக இவற்றில் கலக்கப்படும் சில வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும். எனவே, இயற்கை தந்திருக்கும் வரமான இளநீர் இருக்க, மென் பானங்களை நாடி செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்கள், தாதுச் சத்துகள், அமினோ அமிலங்கள், கால்சியம், சைட்டிகைனின் என்று பலவிதச் சத்துகள் உள்ளன. இளநீரைக் குடித்தவுடன் தாகம் குறைந்துவிடும் என்பது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி அடையும் என்பதும் உறுதி. இளநீரில் பொட்டாசியத்தின் அளவு அதிகம் என்பதால், இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது நல்லதொரு கோடை நீராகாரம். நல்ல கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் கோடையில் தினமும் இரண்டு இளநீர் பருகலாம். இதில் துத்தநாகம், மாங்கனீஸ் தாதுகள் அதிகமாக இருப்பதால் கோடையில் தோல் வறட்சி அடைவது தடுக்கப்படும்.

தோலோடு சாப்பிடுங்கள்

பொதுவாகவே பழங்களைச் சாப்பிடத் தொடங்கும்போது நாம் முதலில் செய்யும் வேலை, பழத்தின் தோலை நீக்குவதுதான். தோல் என்றாலே தேவையற்றது என்று நம் மனதில் பதிந்து போனதன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட, தோலில்தான் அதிகச் சத்துகள் இருக்கும். குறிப்பாகச் சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். தவிரப் பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும்போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது,

சாப்பாட்டுக்கு முன்பா? பின்பா?

உணவோடு பழங்களைச் சேர்த்துக்கொள்வதே நம்மில் பலருக்குப் பழக்கம். ஆனால், பழங்களைத் தனி உணவாகக் கருத வேண்டும் என்கிறது நவீன மருத்துவம். பழங்களை உணவுக்குச் சற்று முன்பு அல்லது உணவைச் சாப்பிட்டவுடன் சாப்பிடுவதைவிட, தனித்து அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை. அப்போதுதான் உணவுச் செரிமானத்தில் பிரச்சினை வராது. உணவு சாப்பிட்டதும் பழம் சாப்பிட்டால், ஏற்கனவே இரைப்பையில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், முன்கூட்டியே இது செரிமானமாகிவிடும். அதற்குப் பிறகுதான் உணவில் உள்ள மற்றச் சத்துகள் கிரகிக்கப்படும். இதனால் சிலருக்கு குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு - ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துப் பழம் சாப்பிட்டால், இது தவிர்க்கப்படும்.

பழங்கள் தரும் பொதுவான பலன்கள்

பழங்கள் கோடைக் காலத்தில் மட்டுமல்ல எல்லாப் பருவத்திலும் நமக்கு நன்மை தருகின்றன. நம் உடலுக்குத் தேவைப்படுகிற பலவிதச் சத்துகளைக் குறைந்த செலவில் அள்ளித்தருவது பழங்களே. பழங்களில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் உள்ளது. இதனால் உடல் பருமன் தடுக்கப்படும்; செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. பப்பாளி, கொய்யா, பலாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் உள்ள வைட்டமின்-சி சத்து சளித் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது. எலும்பு மூட்டுகளில் ‘கொலாஜன்’ என்ற புரத உற்பத்திக்கு உதவுகிறது; இதனால் மூட்டுவலி தடுக்கப்படுகிறது.

நாவல் பழத்தில் உள்ள ‘ஜம்போலின்’ எனும் குளுக்கோசைடு ரத்தச் சர்க்கரையைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்து ரத்தசோகையைக் குணப்படுத்துகிறது.

வாழை பழம், கிர்ணிப் பழம், சாத்துக்குடி போன்றவற்றில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. பப்பாளி மற்றும் மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் பார்வையைப் பாதுகாக்கிறது. மாலைக்கண் நோயைச் சரிசெய்கிறது. பல்வேறு பழங்களில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்’கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. எனவே, ஒரு நாளைக்கு 300-லிருந்து 500 கிராம்வரை பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.

`நலம் வாழ` பகுதியிலிருந்து. | #ThrowbackHTT

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

மேலும்