பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும், எனவே பணியிட மாறுதல் அளிக்கவேண்டும் எனவும் டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இதன் பின்னணியைப் பார்ப்போம்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சந்தியா (29). 2019-ல் டிஎஸ்பி பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்து முதல்முறையாக கடந்த ஆண்டு செப்.8-ம் தேதி, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட சட்டம் ஒழுங்குப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், "சட்டம் - ஒழுங்குப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு உடல்நலப் பிரச்சினையும் உள்ளது. பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனநிலை உள்ளது.
நான், எனது கணவர், பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாருடன் நல்ல குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறேன். இருந்தும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனவே, எனக்கு காவலர் பயிற்சி மையம் (பிஆர்எஸ்) அல்லது பட்டாலியன் போன்ற சென்சிட்டிவ் அல்லாத பிரிவில் பணியிடமாற்றல் வழங்கி என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து டிஎஸ்பி சந்தியாவிடம் விவரம் கேட்க அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டும், அவர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ள பெண் டிஎஸ்பி ஒருவரைத் தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி நம்மிடம் பகிர்ந்த தகவல்கள்: ”நானும் தற்கொலைக்குத் தூண்டப்படும் அந்த மனநிலையை கடந்துள்ளேன். நாம் நினைப்பதை விட, ஏன் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணிச்சுமை இந்த துறையில் இருக்கும். ஒரு வழக்கிற்காக இரு தரப்பை விசாரிக்கும்போது ஒருவருக்கு சாதகமாகவும், இன்னொருவருக்கு எதிரியாகவும் காவல் துறையினர் மாறிவிடுகிறோம். இதில் எதிரியாக நினைத்த நபர்கள், சமூக வலைதளங்களில் திட்டிப் பதிவிடுவது, பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவது என செய்கிறார்கள்.
» 'ஓர் அசிங்கம்' - பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை கூடவே கூடாது... ஏன்?
» புது ரோட்டுல தான் ஹைய்யா... - தனித்து பயணிக்க நீங்கள் தயாரா?
ஒருமுறை இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களை விசாரிக்க வேண்டிய நிலை. எப்போதும்போல் விசாரித்தேன். உன் பக்கம்தான் தவறு என ஒரு தரப்பை குற்றம் சொன்னேன். அவர்கள் தவறு செய்திருந்தார்கள். அதை சட்டத்தின்படி சொன்னேன். அந்த தரப்பு ஒரு படி மேலே சென்று போஸ்டர் அடித்து “என் பெயரை போட்டு இந்த அதிகாரி ’ஒரு சாதியை குறிப்பிட்டு’ இந்த சாதிக்கு எதிரானவர் என ஊர் முழுக்க பரப்பி வந்தார்கள். இந்தச் சம்பவம் இப்போது பேசுவதற்குக் கூட சாதாரணமாக தோன்றலாம். ஆனால், அந்த சமயம் மிகுந்த வேதனையை கொடுத்தது.
இதனால் நான் மட்டுமல்ல என் பிள்ளைகள் வரை பாதிக்கப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் ஏதாவது தவறான கருத்தை என் மீது பதிவிட்டிருந்தால், அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். முதலில் அவர்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டியுள்ளது.
அதிகாரிகளுடனான மீட்டிங்கே அவ்வளவு இக்கட்டாக இருக்கும். ஒரு நாளில் நான்கைந்து மீட்டிங் வைத்தனர். அந்த நாள் முழுவதும் மீட்டிங்கில்தான் போனது. இதில் சிக்கல் என்னவென்றால் அந்த மீட்டிங்குகளில் வெவ்வேறு துறை பிரச்சினைகளைப் பற்றி பேசினார்கள். அதில் இருவர் பேசியது அந்த நாளுக்கு ஏற்றது. அது அப்போது தேவையான ஒன்று. ஆனால், மற்ற இருவர் பேசிய பிரச்சினைகள் அந்த சமயத்திற்கு தேவை இல்லாத ஒன்று. இப்படி இருக்கும் சூழ்நிலையில்தான் மன உளைச்சலாக இருக்கும்.
மீட்டிங் என்றால் எல்லோரும் நினைப்பது போல உயர் அதிகாரிகள் பேசுவார்கள்... நோட்டில் குறிப்பு எடுப்பது அல்ல. அதிகாரிகள் வரிசையாக கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச் சரியாக பதலளிக்கவே முடியாது. எவ்வளவு சின்சியரான காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் பதில் அளிக்க முடியாது. ஏனென்றால், இது எதுவும் எங்கள் கைகளில் இருக்காது.
எப்போது ரோட்டில் போராட்டம் செய்வார்கள் என தெரியாது. ஒரு வழக்கை விசாரிக்க நான் வழக்கு சம்பந்தப்பட்டவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொல்லி இருப்பேன். முன் அறிவிப்பு இல்லாமல் உயர் அதிகாரிகள் மீட்டிங்கிற்கு வர சொல்லுவார்கள். வழக்கிற்காக வந்தவர்கள் சாப்பிடாமல் காத்துக் கிடப்பார்கள். மீட்டிங் முடிந்தவுடன் ஏதாவது போராட்டம் என போன் வரும். அப்படியே அங்கு போக வேண்டியிருக்கும். வழக்கிற்காக வந்தவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படாமல் போய்விடும். ஓர் அட்டவணை போட்டெல்லாம் இந்தத் துறையில் பணியாற்ற முடியாது.
உயர் அதிகாரிகள் மீட்டிங் என முன் அறிவிப்பில்லாமல் சொல்வார்கள். அவர்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ, அப்போதுதான் சொல்லுவார்கள். அவர்களுக்கும் பணிச்சுமைகள் இருக்கதான் செய்யும். மேலும், துறையில் எந்த ஏற்பாடும் இருக்காது. எனக்கு கொடுத்திருக்கும் வண்டியெல்லாம் பழுதான வண்டி, ஒரு திருடனை விரட்டி பிடிக்க முடியாது. டிபார்ட்மென்டில் 100 வண்டிகள் உள்ளன என்றால், 80% பழைய வண்டிகள்தான். 20% மட்டும்தான் புது வண்டி, நல்ல நிலையில் உள்ள வண்டிகள்.
பெண்களுக்கு அதிக சுமையை தருகிறதா காவல் பணி? - இயல்பாகவே ஆண்களை விட பெண்கள் சென்சிட்டிவானவர்கள். அதுமட்டுமல்லாமல் பெண்களிடம் பர்பெக்ஷ்னஸ் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இதன் விளைவுதான் அதிக மன உளைச்சல். நம்மை ஒரு வார்த்தை யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருப்பார்கள்.
குடும்பத்திலும் அவர்களின் பங்கு அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தோசை சுட்டுக் கொடுக்க எனக்கு நேரம் இருக்காது. ஆனால், அவர்கள் பள்ளிக்குச் சென்றார்களா, வீட்டிற்கு வந்தார்களா என கவனிக்கும் பொறுப்பையும் பெண்களுக்குத்தான் கொடுத்துள்ளார்கள். அதனால், பெண்களுக்கு மன உளைச்சல் இன்னும் அதிகமாக உள்ளது.
காவல் துறையை பொறுத்தவரை இது மற்ற துறைகளுடன் இணைந்துள்ள துறை. சட்டம், வருவாய் என மற்ற துறையோடு இணைந்து தான் வேலைசெய்ய முடியும். ஆனால், மற்ற துறைகள் கொஞ்சம் கூட ஒத்துழைப்பு தர மாட்டார்கள். காவல் துறை என்றால் மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் கிளார்க் கூட போலீஸ் அதிகாரியை மதிக்க மாட்டார்கள்.
கஷ்டப்பட்டு படித்து பணியை நேர்மையாக செய்து வந்தால், அதற்கு இதுதான் மரியாதையா என மன அழுத்தம் ஏற்படும். விடுமுறை எடுக்கலாம் என உயர் அதிகாரிகள் சொன்னாலும், ஆள் இருந்தால் தானே லீவ் எடுக்க முடியும். எக்கச்சக்கமான வழக்கு, வேலை இருக்கும்போது எப்படி லீவ் எடுக்க முடியும்?
சட்டம் - ஒழுங்கு தொடர்பான வேலையை மட்டும் பார்த்தால் பரவாயில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடத்த வேண்டும். முதியோர் இல்லங்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பது வரை ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பதால் மன அமைதி கெடுகிறது. பல நாட்கள் தூக்கமில்லாமல் ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டிற்கு போகவே நள்ளிரவுக்குப் பின் மூன்று, நான்கு மணி ஆகும். அடுத்த நாள் காலை 10 மணிக்கு மீட்டிங்கில் இருக்க வேண்டும். தூக்கம் இல்லாமல் போவதாலேயே எதையும் பொறுமையாக சிந்திக்க முடியாமல் மனம் குழப்பமடைந்து மன அழுத்தம் ஏற்படுகிறது” என்றார் அந்த பெண் டிஎஸ்பி.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
19 hours ago
வாழ்வியல்
19 hours ago
வாழ்வியல்
20 hours ago
வாழ்வியல்
22 hours ago
வாழ்வியல்
23 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago