காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!" என்றார் பாரதி. எத்தனை யுகங்களானாலும் `காதல்` என்பது மந்திரச் சொல்லே. இனம், மொழி, மதம், ஜாதி, வயது என அத்தனை பேதங்களையும் கடந்ததுதான் காதல். சாதனையாளராக மாற்றியதும் காதல்; சாகத் தூண்டியதும் காதல்தான். காதல் இல்லையேல் மனித வாழ்வே இல்லை. எனினும், எது உண்மையான காதல் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
ஆண்டு முழுவதும் காதல் செய்தாலும், காதலைக் கொண்டாடவும் ஒரு நாளை உருவாக்கியுள்ளனர். `காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டுமா, புறக்கணிக்கப்பட வேண்டுமா? நமது கலாச்சாரத்துக்கு உகந்ததா?` என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது ஒருபுறம். அன்பின் அதீத வெளிப்பாடுதானே காதல்! ஒருவரைக்கூட காதலிக்காதவர்கள் உண்டா? சரி, ஏன் பிப். 14-ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர்?
பிப்.14-ன் வரலாறு
ரோமானிய அரசனான கிளாடிஸ் மிமி ஆட்சியின்போது, பல முட்டாள்தனமாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளான். இதனால் படையில் சேர இளைஞர்கள் தயங்கியுள்ளனர். திடீரென ஒருநாள், "ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதை மீறுவோர் கைது செய்யப்பட்டு, இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர், பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்தும், தலை துண்டித்தும் கொல்லப்படுவார்கள்" என உத்தரவிட்டுள்ளான். மனைவியும், காதலியும் இல்லாவிட்டால், நிறைய பேர் படையில் சேருவார்கள் என அந்த அரசன் கருதியுள்ளான்.
இதனால் ரோமானியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது பாதிரியாராக இருந்த வாலண்டைன், அரசனின் அறிவிப்பை மீறி ரகசியமாக திருமணங்களை நடத்திவைத்துள்ளார். இதையறிந்த மன்னன், வாலண்டைனை கைது செய்து, சிறையில் அடைத்தான். மரண தண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், சிறையில் இருந்த வாலண்டைனுக்கும், சிறைக் காவலர் தலைவனின், பார்வையிழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதையறிந்த சிறைத் தலைவன், தன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். காவல்களை மீறி, அவளுக்கு சேதி அனுப்பினார் வாலண்டைன். பின்னர், வாலண்டைன் கொல்லப்பட்டுள்ளார். அவர் இறந்த தினம் பிப்ரவரி 14-ம் தேதி. இதனால், ரோம் மக்களின் மனதில் புகுந்தார் வாலண்டைன். பின்னர், ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியர் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது பிப். 14-ம் தேதி விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்போதைய போப்பாண்டவர், வாலண்டைனை புனிதராக அறிவித்துள்ளார். அப்போதிருந்து பிப். 14-ம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
இலக்கியக் காதல்... இன்றைய காதல்... மறைந்துபோன வாழ்த்து அட்டைகள்
பண்டைத் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் போற்றி வளர்த்துள்ளனர். சங்க இலக்கியங்களில் பல்வகையான காதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இப்போது, கண்டதும் காதல், காணாமலே காதல், சைவ காதல், அசைவ காதல், இன்டர்நெட் காதல், செல்போன் காதல், பேசா காதல், தெய்வீக காதல், பருவ காதல், முற்றிய காதல் என்றெல்லாம் பல வகைகள் இருக்கின்றன. என்றாலும், காதலர் தினத்தைக் கொண்டாடுவதெல்லாம், சமீப வருடங்களில்தான். மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி, காதலர் தினத்தன்று காதலி அல்லது காதலனுக்கு பரிசுகளும், காதலர் தின அட்டைகளும் வழங்கி மகிழ்ந்தனர். காதலர் தின அட்டைகளை தேடித்தேடி வாங்கியவர்கள் பலருண்டு. சொந்தமாய் கவிதை எழுதிக் கொடுத்தவர்கள் கொஞ்சம் என்றால், ரெடிமேடாக காதல் கவிதைகள் எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகளைக் கொடுத்தவர்கள்தான் அதிகம்.
ஆனால், நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மறந்துபோன பல விஷயங்களில் முக்கிய இடம் வாழ்த்து அட்டைக்குத்தான். 1850-களில் நவீன வாழ்த்து அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது.
பொதுவாக, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினத்துக்கு வாழ்த்து அட்டைகளை வழங்கிக் கொண்டனர். 1970 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலத்தை வாழ்த்து அட்டைகளின் பொற்காலம் என்றே கூறலாம்.
தேசிய விருது பெற்ற, அஞ்சல் துறை முன்னாள் அதிகாரி நா.ஹரிஹரன் கூறும்போது, "பண்டிகைகளுக்கும், காதலர் தினத்துக்கும் முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் குவியும். டிசம்பர் மாதத்திலிருந்தே வாழ்த்து அட்டைகள் அனுப்புவது தொடங்கிவிடும்.
1970-ல் 6.74 லட்சம், 1980-ல் 7.76 லட்சம், 1990-ல் 10.24 லட்சம் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அதற்குப் பின் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, 2010-ல் 1.50 லட்சம் வாழ்த்து அட்டைகளே அனுப்பப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகள் இந்த எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. அப்போதெல்லாம், 50 பைசா முதல் ரூ.200 வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகள், டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும்.
செல்போன் வருகைக்குப் பின்னர், வாழ்த்து அட்டைகளை அனுப்புவது வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் போன்றவற்றில் காதலையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள்.
நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், வகைவகையான டிசைன்களில் வாழ்த்துகள் உருவாக்கப்பட்டு, செல்போன்கள் மூலம் எண்ணற்ற நண்பர்கள், உறவினர்களுக்கு ஒரே நேரத்தில், நொடிப்பொழுதில் வாழ்த்துகளை அனுப்பிவிடுகிறார்கள்.
ஆனாலும், வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் கைப்பட எழுதி, காதலர் அல்லது நண்பருக்கு அனுப்பி, காதலையும், அன்பையும் பரிமாறிக் கொண்ட உணர்வை எதுவும் தராது. எத்தனை வருடங்களானாலும் அதை பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து, வயதான பின்னர் அதை எடுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, செல்போன் வாழ்த்துகளில் கிடைக்குமா?" என்றார்.
மனதை நெருடும் கவிதை!
காதலர் தின அட்டைகளில் இடம் பெற்றிருக்கும் சில கவிதைகள் வெகு சுவாரஸ்யமாக இருக்கும். வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைகளுக்குச் சென்று, மணிக்கணக்கில் தேடி சிறந்த காதல் வாசகங்கள் கொண்ட வாழ்த்து அட்டையை வாங்கி, காதலிக்கு கொடுத்த இளைஞர்கள் பலருண்டு. மனதை நெருடும் கவிதை கொண்ட வாழ்த்து அட்டையைத் தேர்வு செய்யும் இளைஞர் அல்லது இளம்பெண், தனது இணைக்கு கொடுத்து மகிழ்வர்.
காதலுக்கு மரியாதை...
காதலர்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், உண்மையான காதலை யாரும் வெறுப்பதில்லை. பதின் பருவத்தினருக்கே காதல் உரியது என்று வாதம் செய்தாலும், காதலுக்கு வயது கிடையாது. திருமணமானவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரைக் காதலித்தால்தான் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். உடற் பசியெல்லாம் தீர்ந்த பின்னர் வரும் காதலுக்குத்தான் மரியாதை அதிகம். குறிப்பாய், 40, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழும் முதியோரிடையே இருக்கும் காதல் நெகிழ்ச்சிக்குரியது. ஆதலினால், மானிடரே காதல் செய்வீர்!
- ஆர்.கிருஷ்ணகுமார்
| காதலர் தினத்தையொட்டிய மறுபகிர்வு |
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
20 days ago