நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா?

By ஏஎன்ஐ

நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்பவரா அப்படியென்றால் இந்த ஆய்வும்; அதன் பரிந்துரையும் உங்களுக்கானதே.

பணி நிமித்தமாக வழக்கமாக நீங்கள் அமர்ந்திருக்கும் நேரத்தில் வெறும் அரை மணி நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆயுள் சற்றே கூடும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

பரபரப்பாக மாறிவிட்ட காலச்சூழலில் நம்மில் பெரும்பாலானோர் அலுவலகத்தில் அதுவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில் 8 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் வேலையைச் செய்கிறோம். அந்த 8 மணி நேர வேலைக்குச் சரியாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் ஓய்வு என எங்காவது சாய்ந்து விடுகிறோம். போதாததற்கு செல்போனில் மூழ்கிவிடுகிறோம்.

இப்படியான நம் ஒருநாள் வேலைகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் நடக்கும் தூரமோ அல்லது உடலை வருத்தி வியர்வை சிந்தும் அளவுக்கு செய்யும் வேலையோ மிக மிக சொர்ப்பமானதாகவே இருக்கிறது.

இதன் பின்னால் இருக்கும் ஆபத்தை நாம் உணர்வதே இல்லை. விளைவு, உடல்பருமன் தொடங்கி ஸ்ட்ரோக் வரை பல்வேறு வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் நம்மை தாக்கிவிடுகிறது.

அதிக நேரம் உட்கார்ந்திருபதன் எதிரொலியாக வரும் லைப்ஸ்டைல் நோய்கள் மனிதனின் சராசரி வாழ்நாளைக் கொஞ்சம் கொஞ்சமாக பதம் பார்த்து வருகிறது.

இவற்றைப் பட்டியலிட்டு, ஒரு நபர் உட்கார்ந்தே இருக்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் ஆயுட்காலம் குறையும் என எச்சரிக்கிறது அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள அந்த ஆய்வறிக்கை. அந்த அறிக்கை அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி (American Journal of Epidemiology) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வெறும் எச்சரிக்கை மணியுடன் நிறுத்தாமல் ஆயுளைக் கூட்ட ஆரோக்கியத்தைப் பேண ஆலோசனையையும் கூறுகிறது.

இந்த ஆய்வறிக்கையின் முதன்மை எழுத்தாளர் மருத்துவர் கேத் டியாஸ் ( கொலம்பிய பல்கலைக்கழகம்) "உங்கள் உடலை எவ்வளவு தூரம் இயக்குகிறீர்களோ அவ்வளவு ஆரோக்கியம் வந்து சேரும்" என்ற எளிய ஆலோசனையைப் பரிந்துரைக்கிறார். இதைத்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்களே எனக் கேட்கலாம். ஆனால், இதில் எவ்வளவு நேர உடற்பயிற்சி எத்தனை சதவீதம் ஆபத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளது என்ற தகவல் இருக்கிறது.

இந்த அறிக்கைக்காக எடுக்கப்பட்ட ஆய்வில், சாதாரணமாக வயது வந்த நபர் ஒருவர் ஒருநாளில் குறைந்தது 8 மணி நேரமாவது அமர்ந்தே கழிக்கிறார் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அப்படி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது அதே ஒரே மணி நேரம் வேலை ஏதும் செய்யாவிட்டாலும் கூட அங்குமிங்கும் நடந்து நகர்பவர்களின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? தொடர்ந்து அந்த ஆய்வு முடிவைப் படியுங்கள்.

ஆரோக்கிய வாழ்விற்கு, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை எழுந்து சற்றே நடந்துவிட்டு பின்னர் மீண்டும் பணியைத் தொடர அந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

வழக்கமாக அமர்ந்திருக்கும் நேரத்தில் வெறும் அரை மணி நேரத்தை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வேலைகளுக்காக ஒதுக்கினால் லைஃப்ஸ்டைல் நோய்கள் வாயிலாக மரணம் நம்மை இளம் வயதில் தழுவுவதை 17% வரை குறைக்கலாம் என ஆய்வுகளின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளது.

அதே அரை மணி நேரத்தில் சாதாரண நடையைக் காட்டிலும் இன்னும் அதிக உடல் உழைப்பை வாங்கும் செயலில் ஈடுபட்டால் 35% வரை மரண அபாய அறிகுறிகளைக் குறைகலாம் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மிகக் கொடிய நோய்கள் நம்மை 40 வயதிலேயே தீண்டுவதைத் தடுக்க நாம் மிகச்சிறிய முயற்சி மேற்கொண்டாலே போதுமானது.
ஓரடி முன்னே எடுத்து வைத்தால் நோயும், மரணமும் ஓரடி பின்னே எடுத்து வைக்கும் என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு.

இதைப் படித்துவிட்டு நீங்களும் சிறிய பிரேக் எடுத்துக் கொள்ளலாம். இல்லை இதை நடந்து கொண்டே படிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

மேலும்