மொட்டைக் கடுதாசி எனும் சராஹா!

By க.ஸ்வேதா

கு

ண்டக்க மண்டக்க வரும் மொட்டைக் கடிதத்தால் குடும்பத்தில் குழப்பக் கூத்துகள் நடந்த வரலாறெல்லாம் முந்தைய தலைமுறையினுடையது. இந்தத் தலைமுறையினர்தான் டிஜிட்டல் தலைமுறையினர் ஆயிற்றே? ‘மொட்டைக் கடுதாசி போடுங்க’ எனக் கெஞ்சாத குறையாகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மொட்டைக் கடுதாசி போடுவதற்காக ‘சராஹா’ (Sarahah) எனும் செயலி, இந்தத் தலைமுறையினருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே இளசுகளை யோசிக்கவிடாத அளவுக்கு மூழ்கடித்துக்கொண்டிருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு மத்தியில், மொட்டைக் கடுதாசி பாணியிலான இந்த சராஹா மீதான மோகம் நல்லதா?

இந்தியாவில் வைரல்

சராஹா புதிதாக வந்த செயலி என்று அல்ல. ஏற்கெனவே ‘அனானிம்ஸ்’ சாட், ‘ஸ்டிரேஞ்சர்’ சாட் என விதவிதமான முகம் தெரியாத சாட்டிங்குகளைக் கொண்ட செயலிகள் நிறைய உள்ளன. அதுபோன்ற ஒரு செயலிதான் இதுவும். இந்தச் செயலியை உபயோகப்படுத்துவது எளிது. முதலில் இந்தச் செயிலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுசெய்ததும் நமக்கென ஒரு பிரத்யேக சராஹா இணைப்பு கிடைக்கும். அதை நண்பர்களுடன் பகிர்ந்தால், அவர்கள் தங்களது பெயரை வெளியிடாமல் நமக்குக் குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள். தகவல் அனுப்பியவர் யார் என்றே இதில் தெரியாது என்பதுதான் சராஹாவின் முக்கிய அம்சம்.

சவுதி அரேபியா, எகிப்து என இரு நாடுகளில் மட்டும் அறியப்பட்ட இந்தச் செயலி திடீரென ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்காவில் கடந்த மாதம் வைரலாகப் பரவியது. இந்த மாதம் இந்தியாவில் அதிரடியாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் இந்தச் செயலியை சுமார் 75 லட்சம் பேர் இந்தியாவில் மொபைல்களில் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

அடையாளம் சொல்லாத செயலி

சவுதி அரேபியாவைச் சேர்ந்த சயின் அல் அபிதின் தவுபிக் என்பவர் இந்தச் செயலியைக் கடந்த ஆண்டு உருவாக்கினார். அரேபியப் சொல்லான ‘சராஹா’ என்பதற்கு ‘நேர்மையான’ அல்லது ‘வெளிப்படையான’ என்று பொருள். இந்தச் செயலியை உருவாக்கியபோது, ஒரு நிறுவனத்தின் தலைவரும் தொழிலாளர்களும் ஒளிவுமறைவின்றித் தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டதாக அபிதின் தவுபிக் சொன்னார். ஆனால், இப்போது இந்தச் செயலியைப் பயன்படுத்திக்கொண்டிருப்போர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் அந்த ரகத்தில் இல்லவே இல்லை.

அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தகவல்களை அனுப்பும் முறை, குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கு வேண்டுமானல் சரிப்பட்டு வரலாம். அதேபோல மக்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிய அரசுக்குப் பயன்படலாம். ஆனால், சராஹா செயலி, இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருவியாகவே இருக்கிறது.

சீண்டும் தகவல்கள்

சராஹாவில் தம்மைப் பற்றிப் பாராட்டுகள் அல்லது தன்னுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்து சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் கிடைத்து வருகிறது. இதில் பாராட்டுகளைவிட வசைபாடுதலைக் கேட்டவர்கள்தான் அதிகம். ஒரு ஒவியனுக்கு, “உன் ஒவியம் எதற்கும் உதவாது, உன் ஒவியம் படு மோசம்’’ என்பது போன்ற கருத்துகளை அனுப்புவது, அந்த ஒவியனுக்கு தன் திறமை மீதான நம்பிக்கையைக் கண்டிப்பாகக் குறைக்கும் அல்லவா? அப்படியான சராஹா தகவல்கள் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. உடல் குறைபாடுகளைக் கேலி செய்வது, விளையாட்டாக சிண்டு முடிக்கும் கருத்துகளை அனுப்புவது என சராஹாவின் தகவல்கள் எதுவுமே ஒருவர் மேம்படுத்திக்கொள்ளும்விதமாக இல்லை.

இது ஒருபுறம் இருக்க, பெண்களைச் சீண்டுவதற்கென்றே இருக்கும் ஆண்களுக்கு இந்தச் செயலி கடவுள் கொடுத்த வரம். இதுநாள்வரை, அடையாளம் தெரிந்துவிடுமே என்ற பயத்தில் கண்ணியமாக நடந்துகொண்ட ஆண்கள்கூட, இப்போது பெயர் தெரியாதே என்ற மகிழ்ச்சியில், தவறான பல செய்திகளைச் துணிச்சலாக அனுப்பவும் செய்கிறார்கள். ‘உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன்’, ‘டேட்டிங் செல்வோமா’, ‘ஐ லவ் யூ’ என்றெல்லாம் பெண்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள், இந்தக் குறிப்பை அனுப்பியது யார் என்று குழம்பி, தங்களுக்கு வரும் தவறான கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “தைரியம் இருந்தால் உன் பெயரை சொல்” என்று கேட்பதைப் பார்த்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

குழம்பும் நண்பர்கள்

விளையாட்டாக அனுப்பும் பல தகவல்கள் பிறரின் வாழ்கையையே பாதிக்கக்கூடும் என்ற அச்சத்துக்கெல்லாம் சராஹாவில் வேலையே இல்லை. ஆக்கப்பூர்வமான குறிப்புகளைப் பகிர இது உதவும் என்றாலும், பெரும்பாலும் இதை சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளவும், நமக்குப் பிடிக்காதவர்களைத் திட்டவும், பாலியல்ரீதியான கேள்விகளை எழுப்பவுமே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனம். இதை எழுதி அனுப்பியது யாராக இருக்கும் என்று நினைத்து, நண்பர்கள் அனைவரையும் சந்தேகித்து மனதைக் குழப்பிக்கொள்வது தேவைதானா?

இணையத்தில் புதிதாக ஒரு வதந்தி சில நாட்களுக்கு முன் பெரிதாகப் பரவியது. அது, சராஹா நிறுவனம், குறிப்புகளை அனுப்பியவர்களின் அடையாளத்தைச் சில தினங்களில் வெளியிடும் என்ற வதந்திதான் அது. ஆனால், இந்தச் செய்தி தவறு என்று சரஹா மறுப்பு வெளியிட்டது. இந்த மறுப்பு செய்தியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவர்கள் பலர். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் பலர் நட்பையும் உறவையும் இழந்திருப்பார்கள்.

ஏனென்றால் ‘மொட்டைக் கடுதாசி’ செய்யும் வேலை எப்பவுமே அப்படித்தானே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

மேலும்