ஆகஸ்ட் 6: சர்வதேச நண்பர்கள் தினம்
மனித வாழ்க்கையின் எல்லாக் காலகட்டங்களிலுமே நம்முடன் நண்பர்கள் இருப்பார்கள். சிறு பிராயத்தில் பள்ளிக்கூட நண்பர்கள், இளமைப் பருவத்தில் கல்லூரி நண்பர்கள், பணியாற்றும் காலத்தில் அலுவலக நண்பர்கள், எல்லா காலங்களிலும் உடனிருக்கும் ஏரியா நண்பர்கள், முகநூல் நண்பர்கள் என எப்போதும் நண்பர்களுக்குக் குறை இருந்ததில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நட்பு முளைவிட்டாலும், ஒவ்வொருவரையும் செதுக்குவது கல்லூரி கால நட்புதான்.
பள்ளிக் கால நட்பு
பள்ளிக் காலத்தில் பாடங்களுக்காகவும் மதிப்பெண்களுக்காகவும் ஓடிய ஓட்டத்தில், நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதையே மறந்திருப்போம். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். சுட்டித்தனமான நண்பர்களுடன் பழக வீட்டில் தடை போட்டுவிடுவார்கள். எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் ‘நல்ல’ பிள்ளைகளிடம் மட்டுமே பேச வேண்டும் என்பது அம்மாக்களின் கட்டளை. இத்தனையையும் தாண்டி, நமக்கான நண்பர்கள் அமைந்தாலும், அவரவர் பள்ளிப் படிப்பு முடியும்வரை பசை போட்டு ஒட்டியதுபோல் இந்த நட்பு இருக்கும். கல்லூரிக்குப் போகும்போது, ஒவ்வொருவரும் தனக்கான தனிப் பாதையில் புதிய பயணத்தைத் தொடங்கிவிடுவார்கள்.
விரிவடையும் கல்லூரி நட்பு
கல்லூரிக்குச் சென்ற பிறகு தொடர் நட்பில் வரும் பள்ளிகூட நட்பு மிகவும் குறைவுதான். மனதளவிலும் உடலளவிலும் மாற்றங்களைப் பார்க்கும் நேரத்தில்தான் கல்லூரிக் காலம் தொடங்குகிறது. எண்ணற்ற மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் வலிகளையும் முதலில் பார்ப்பதும் கல்லூரிக் காலத்தில்தான். அவற்றைக் கடந்து வர அப்போது உதவியாக இருப்பது கல்லூரி நண்பர்களே.
ஜாலியாக அரட்டை அடிக்க, தனியாக நண்பர்களுடன் சினிமா, வெளியிடங்களுக்குச் செல்ல, நண்பர்களின் வீட்டுக்குத் தாராளமாகச் செல்ல என வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது கல்லூரி நண்பர்கள்தான். கல்லூரிக் காலத்தில்தான் வீட்டு கஷ்டம், சமூகச் சிக்கல்கள் என அனைத்தையும் அறிந்துகொள்ளவும் முடிகிறது. வெவ்வேறு தளங்களிலிருந்து வரும் கல்லூரி நண்பர்களுடன் ஒன்றாகக் கலக்கும்போது அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கின்றன.
சமூகத்துக்காகக் குரல்
சமூக நலனுக்காக நண்பர்களுடன் இணைந்து போராடும் அளவுக்கு மனப்பக்குவம் அடைவதும் கல்லூரிப் பருவத்தில்தான். சமீபத்தில் போராட்டக் களம் ஒன்றில் நண்பர்களுடன் இருந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவி யாழினியிடம், நண்பர்கள் வட்டம் தொடர்ந்து சமூக பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருவதைப் பற்றிக் கேட்டபோது, “கல்லூரிக்கு வந்த பிறகுதான் வேறுபட்ட பின்னணியிலேர்ந்து வந்திருக்குற மாணவ மாணவிகளைப் பத்தி தெரிஞ்சுக்க முடிகிறது.
முகநூல் வந்துட்டதால சமூகத்துல நடக்கும் பல பிரச்சினைகளைப் பற்றி விவாதம் போய்ட்டேதான் இருக்கு. அப்போதான் நண்பர்களுடன் இணைந்து எங்களால முடிந்தவரை எங்க கருத்துகள பதிவு செய்திட்டு வரோம்.
கல்லூரி நண்பர்களாகச் சேர்ந்து செயல்படுறப்ப இருக்கும் பலம், வேற எப்போதுமே இருக்காது” என்கிறார் யாழினி.
அலுவலக நட்பு
கல்லூரிக் கால நண்பர்கள் கூட்டாக இருக்கும்போது உள்ள பலம், வேறு எப்போதும் கிடைக்காது என்பது உண்மைதான். கூட்டாக ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி என்கிற சிறந்த பண்பைக் கல்லூரி நண்பர்கள் மூலமாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. கல்லூரிப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட கருத்துகளும் சிந்தனைகளும் விரிவடையும்.
கல்லூரி முடிந்து வேலை, அலுவலகம் எனச் செல்லும்போது, பள்ளிக்காலத்தில் அம்மா போட்ட கட்டளைகளை இப்போது நாமே வகுத்துக்கொள்வோம், ‘யாரிடமும் ரொம்ப வச்சுக்கக் கூடாது. நம்ம வேலையைப் பார்த்திட்டு வந்துடனும், எந்த வம்புக்கும் போகக் கூடாது. ரொம்ப குளோஸாகவும் இருக்கக் கூடாது, விலகியும் இருக்கக் கூடாது’ எனப் பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வோம். இந்தப் பருவத்தில் வரும் நட்பில் பெரிய அளவில் உண்மைத் தன்மை இருக்காது.
தனியாக எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் பாதையில் ஆதரவாகவும், துணையாகவும், கண்டிப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கூட்டாகவும், தொல்லை கொடுத்த படியும், சண்டை போட்டுக்கொண்டும், பல முதல் அனுபவங்களில்கூட இருந்தும், ஏமாற்றங்களில் பங்கெடுத்தும், ஒன்றாக வருந்தியும், எப்போதுமே நக்கலும் கேலியுமாகவும், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் மாற்றி பயணிப்பது கல்லூரி நட்புகளே.
கட்டுப்பாடுகளும் கட்டளைகளும் இல்லாத கல்லூரி நட்புகளுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள்!
நண்பர்கள் தினப் பரிசுகள் என்ன?
நாளை மறுதினம் (ஆகஸ்ட் 6) சர்வதேச நண்பர்கள் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் நண்பர்கள் தினத்துக்காகப் பரிசுகளைக்கூடப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இணையதளங்களில் வரும் தொடர்களை நாள் அல்லது வாரம் தவறாமல் படிக்கும் பழக்கம் உள்ளவரா உங்கள் நண்பர்? அப்படியானல் அவர் விரும்பிப் படிக்கும் இணையதளத்துக்கு ஒரு மாதத்துக்கான சந்தா கட்டி உங்கள் நண்பரைக் குஷிப்படுத்துங்கள்.
சாக்லெட்டை விரும்பாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க மாட்டார்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விதவிதமான வண்ணங்களில் இருக்கும் சாக்லெட்டுகளை நண்பர்கள் தினத்தன்று வாங்கிக்கொடுத்துப் பாருங்களேன்.
பொதுவாகப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுப்பது இயல்பான விஷயம்தான். ஒரு வேளை உங்கள் நண்பர் புத்தகப் புழுவாக இருந்தால், ஒரு மாற்றத்துக்குப் புத்தகத்துக்குப் பதிலாகப் புத்தகங்களை வைக்கும் சிறிய அலமாரியைப் பரிசாகக் கொடுக்கலாம். அதை அவர் காலத்துக்கும் மறக்கமாட்டார்.
விரும்பிய உடையை வாங்கித் தருவது அரதப்பழசான பரிசு வகைதான் என்றாலும், உடையில் நட்பு பற்றிய வாசகங்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்.
நண்பர்கள் அதிகம் விரும்பும் பூக்கள் கொடுப்பதும் பழைய பரிசுதான். பூக்களைக் கொடுப்பதற்குப் பதிலாகச் சிறிய பூந்தொட்டியில் பூச்செடியை வைத்துக் கொடுங்கள். தண்ணீர்விட்டு பூச்செடியை உங்கள் நண்பர் வளர்ப்பதுபோல உங்கள் நட்பும் ஆழமாக வளரும்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
18 hours ago
வாழ்வியல்
19 hours ago
வாழ்வியல்
18 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
19 days ago