சென்ற ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் டிராபி இறுதியாட்டம் பார்த்திருப்பீர்கள். தோற்கும் தறுவாயில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியையும், தவறுகள் செய்த வீரர்களையும் திட்டித் தீர்த்திருப்பீர்கள். அதுவும் பாகிஸ்தானுடனான தோல்வி என்பதால் கோப வார்த்தைகளால் வறுத்தெடுத்திருப்பீர்கள். சமூக ஊடகங்களில் புழங்குவோர் மீம்ஸ் போட்டும் கிண்டலடித்திருப்பீர்கள். அதெல்லாம் சரி, இந்தியா - பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை எப்போதும் நாம் விளையாட்டாக அணுகுவதில்லையே, ஏன்?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரசியலைத் தாண்டி, இரு தரப்பையும் ஒரு புள்ளியில் குவிப்பது கிரிக்கெட்தான். சுமார் கடந்த 10 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு கிரிக்கெட் உறவு சுத்தமாக இல்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் பரஸ்பரம் மோதிக்கொள்கின்றன. ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர் அனைத்துமே மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்பதால், இரு நாடுகள் மோதும்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே இயல்பாகவே ஆர்வமும் பதற்றமும் தொற்றிக்கொள்கிறது. கிரிக்கெட்டை ஆராதிக்கும் ரசிகர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். ஐ.சி.சி. அமைப்பும் அப்படித்தான் நினைக்கிறது.
ஒரே பிரிவில்...
சென்ற ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை வெளியிட்டபோது இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமடைந்தார்கள். ஆனால், இதன்பின் நுட்பமான அரசியல் இருந்தது. அதை ஐ.சி.சி. தலைமை செயற்குழு அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் போட்டு உடைத்தார்.
“சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றது தற்காலிகமான செயல் அல்ல. ரசிகர்களைக் கவர்வதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டதே. எங்கள் தொடரில் வேண்டுமேன்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளை மோத விடுகிறோம். இரு அணிகளும் மோதும்போது, அந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது.
கூட்டம் அலைமோதுகிறது. அந்தத் தொடரும் உலக அளவில் பிரபலமடைகிறது” என்று சொன்னார் டேவ் ரிச்சர்ட்சன். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, 2015-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை, 2014-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, 2013-ல் நடைபெற்ற சாம்பியன் டிராபி என அண்மைக் காலமாக ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் எல்லாம் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறுவதிலிருந்தே ஐ.சி.சியின் ஆட்டத்தை உறுதி செய்துகொள்ளலாம்.
போட்டியா... போரா..?
ஐ.சி.சி. அமைப்பே திட்டமிட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்தும்போது இரு நாட்டு ரசிகர்களும் சும்மா இருப்பார்களா? தங்கள் அணி கோப்பையை வெல்கிறதோ இல்லையோ, தங்கள் நாடு வென்றால் போதும் என்ற எண்ணம் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கேற்ப பிரபலங்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பற்றி தங்கள் எதிர்பார்ப்பைச் சொல்லி, ரசிகர்களின் பல்ஸை எகிறவைக்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் எண்ணங்களை மீம்ஸ் மற்றும் கருத்துகள் மூலமாக ‘இந்தியா ஜெயிக்கணும்’ என்ற வெறியை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள்.
லீக் போட்டி நிலைக்கே இப்படி களேபரங்கள் என்றால், மிகப் பெரிய தொடரின் இறுதியாட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் விடுவார்களா? இறுதியாட்டத்தை இரு நாடுகளுக்கிடையேயான ஒரு போர் நடைபெறுவதற்கு இணையாக உருவகப்படுத்திக்கொண்டார்கள் ரசிகர்கள். முதல் லீக் போட்டியில் தோற்ற போது பாகிஸ்தானில் டி.வி.யை உடைத்து வெறுப்புணர்வை வெளிப்படுத்திய பாகிஸ்தான் ரசிகர்கள், இறுதியாட்டத்தில் இந்தியாவைப் பழிதீர்க்க வேண்டும் என்ற ரீதியில் பேசித் தீர்த்தனர். இந்திய ரசிகர்களும் சும்மா இருக்கவில்லை. ‘அப்பாவிடம் (இந்தியா) மோதப் போகும் மகன் (பாகிஸ்தான்) காலி’ என்ற ரீதியில் மீம்ஸ் போட்டு இந்தியாவே வெற்றி பெறப் போகிறது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். அதற்காகப் பிரார்த்தனைகளிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மூழ்கினார்கள்.
ரசிகர்கள் சண்டை... வீரர்கள் சகஜம்...
ஆனால், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மோசம் போகும் வகையில் இறுதிப் போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சிகரமாக அமையாமல்போனது. இந்தியத் தோல்வியை எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்திய அணிக்கு எதிராக திடீர் வில்லனாகிப் போனதுதான் காமெடி. ‘மானம் மரியாதையே போய்விட்டது’ என்று சொல்லாமல், ரசிகர்கள் அதை செயலில் காட்டினார்கள்.
ஒரு சில இடங்களில் கிரிக்கெட் வீரர்களின் படங்கள் கொளுத்தப்பட்டன. சமூக ஊடகங்களில் வசைபாடினார்கள். கிண்டல் மீம்ஸ்கள் வாட்ஸ்அப்புகள் தோறும் வலம் வந்தன. காலங்காலமாக இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை கவுரவக் குறைச்சலாகப் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தியாவின் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. ‘மேட்ச் ஃபிக்சிங்’ என்று ஒரே போடுபோட்டார்கள். இங்கே இப்படி என்றால், முதல் போட்டியில் இந்தியாவிடம் மோசமாகத் தோற்ற பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானில் ஹீரோவாக மாறிப்போனார்கள்.
இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் மாறிமாறி விநோதமாக நடந்துகொள்ள இந்திய - பாகிஸ்தான் வீரர்களோ கிரிக்கெட் அறைகளில் சகஜமாகவே இருந்தார்கள். பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸின் மகன் அப்துல்லாவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தூக்கி வைத்திருந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
தோல்விக்குப் பிறகு சகஜமாக பாகிஸ்தான் நாட்டு வீரர்களுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசியபடி இருந்தனர் இந்திய வீரர்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி ஒரு அங்கம் என்பது வீரர்களுக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாகக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் அணிக்கே வெற்றி கிடைக்கும் என்பது கிரிக்கெட்டின் அடிப்படை. ஆனால், கிரிக்கெட்டை யுத்தம் போல கருதிக்கொள்ளும் இரு நாட்டு ரசிகர்களால்தான் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
கொண்டாடப்படாத வெற்றி
ஒரே ஒரு கேள்வி. லண்டன் ஓவலில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியிடம் மோசமாகத் தோற்ற தருணத்தில், அதே நகரில் பாகிஸ்தான் ஹாக்கி அணியை இந்திய ஹாக்கி அணி புரட்டிப் போட்டதே, அந்தப் பெரும் வெற்றியை யாரும் கொண்டாடவில்லையே, ஏன்? கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் வெற்றி என்றால் மட்டும்தான் கொண்டாட்டமா?
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்வார்கள். ரசிகர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தப்பில்லையே!?
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
20 days ago