தி
யேட்டரில், பொதுக்கூட்டங்களில், மைதானங்களில் தங்களுடைய அபிமான பிரபலத்தைப் பார்த்தவுடன் காதைப் பிளக்கும் அளவுக்கு விசில் (சீட்டி) அடிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், விசில் அடிப்பதையே வேலையாக வைத்துக்கொண்டு அதில் சாதனை படைப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? ‘சாரே ஜஹான்ஸே அச்சா’, ‘ஹம் ஹோங்கே கம்யப்’ ஆகிய தேசப் பக்திப் பாடல்களை விசிலடித்துத் தேசிய அளவில் மட்டுமல்லாமல், ஆசிய அளவிலும் சாதனை படைத்திருக்கிறார்கள் ‘இந்திய விசிலர்கள் சங்கத்தைச்’ சேர்ந்த 150 விசில் கலைஞர்கள்.
அதுக்கும் மேலே!
‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனைகளைப் படைத்திருக்கும் இந்த விசில் கலைஞர்களில் சுவேதா, சாந்தினி, ஸ்ரீநிதி, ஸ்ரீலேஷ், பிரவீன் குமார், நவீன் உள்ளிட்ட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள். மீதமுள்ளவர்கள் கொச்சி, மும்பை, பெங்களூரு, துபாய், மஸ்கட் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இணைந்து பங்கேற்று கொச்சியில் நடைபெற்ற இந்த ஐந்து மணி நேரப் போட்டியில் சாதனை படைத்தார்கள்.
ஏற்கெனவே 48 விசில் கலைஞர்களை ஒருங்கிணைத்து 2008-ம் ஆண்டில் சாதனை படைத்த இந்தக் குழு, தங்களுடைய சாதனையைத் தாங்களே முறியடிக்கும் விதமாகத் தற்போது 150 பேரைக்கொண்டு விசில் பாடல் கச்சேரியை அரங்கேற்றியிருக்கிறது.
விசிலடிக்கும் கலை
இவர்களில் தமிழக விசில் கலைஞர்களை ஒருங்கிணைத்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த கபில் பன்சால். “பொதுவா விசில் அடிக்கிற பசங்கள ‘ரோட் சைடு ரோமியோ’னு திட்டுவாங்க. ஆனா, விசிலடிக்கிறது ஒரு கலை. எங்க சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவங்க. விசில் என்ற ஆற்றல்தான் எங்களையெல்லாம் ஒண்ணா இணைச்சிருக்கு.
ஒவ்வொரு மாதத்திலும் ஒரு ஞாயிற்றுக்கிழமை கூடிப் பயிற்சி எடுப்போம். இந்தப் போட்டிக்காகக் கடந்த நான்கு மாதங்களாக சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா, மதுரை சங்கர் ஆகிய திறமையான விசில் கலைஞர்கள் எங்களோடு பங்கேற்றாங்க. அதோடு இசை நுணுக்கங்கள்பற்றியும் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தாங்க. அதிலும் என்னைப் போன்ற இளைஞர்கள் விசில் கலைஞர்களாக உருவாக உந்தித்தள்ளியது ஸ்வேதாதான்” என்கிறார் கபில்.
பாட்டும் நானே விசிலும் நானே!
ஒரே அரங்கில் 150 பேர் ஒரே சுருதியில் துல்லியமான லயத்தில் வெவ்வேறு ராகங்களில் அமைந்த பாடல்களைச் சீராக விசிலடிப்பது என்பது நிச்சயம் சவால்தான். இதைச் சாத்தியமாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் ஸ்வேதா. கர்னாடக இசையில் மட்டுமல்லாமல் மேற்கத்திய இசையும் கற்றுத்தேர்ந்த சென்னைப் பெண் இவர்.
இசைக்கு மொழி கிடையாது. அதுவும் பாடல் வரிகளே இல்லாத விசில் பாட்டுக்கு மொழி தடையாகுமா! இதை நிரூபிக்கும் விதமாக 2017-ல் ஜப்பானில் நடைபெற்ற ‘உலக விசில் சாம்பியன்ஷிப்’ போட்டியில் பீத்தோவன், மொசார்ட் இசையோடு ‘திருவிளையாடல்’ திரைப்படப் புகழ் ‘பாட்டும் நானே பாவமும் நானே!’ பாடலையும் விசிலடித்து உலக சாம்பியன்ஷிப்பை வென்றவர் ஸ்வேதா. 2014-ல் சீட்டி இசை மாரத்தானில் தொடர்ந்து 18 மணி நேரம் விசில் கச்சேரி நடத்தி, சாதனை நிகழ்த்தினார்.
‘பசங்க விசில் அடிச்சாலே திட்டுவாங்க, நீங்க எப்படி விசில் ராணியா ஆனீங்க?’ என்று கேட்டால், விசில் அடித்தபடியே சிரிக்கிறார். “விசில் கச்சேரி செய்ய நான் முதல் தடவை மேடை ஏறியபோது நிறையப் பேர் கேலி கிண்டலாக விசில் அடிச்சாங்க.
ஆனா, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு யாராலையும் எனக்கு ஈடுகொடுக்க முடியல. போகப்போக என்னுடைய விசில் கச்சேரியைக் கேட்டு ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்கிறார் ஸ்வேதா.
தற்போது கிடைத்த அங்கீகாரங்களுக்கு அடுத்தபடியாக ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ஐயும் வெல்வதுதான் கபில், ஸ்வேதா உள்ளிட்ட விசில் கலைஞர்களின் அடுத்த கனவு.
சீண்டும் காரியமாகக் கண்டிக்கப்பட்ட விசிலடித்தலைச் சாதனையாக மாற்றிக் காட்டும் இந்த ‘சீட்டி’சன்களுக்கு நாமும் ஒரு விசில் போடுவோம்!
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
20 days ago