வலை 3.0: பாய்ச்சலுக்குத் தயாரான வலை!

By சைபர் சிம்மன்

கணினிகள் இன்னமும் பரவலாகத் தொடங்காத காலகட்டம் அது. 1960-களில் லிக்லைடர், எதிர்காலத்தில் கணினிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைக் கணித்து புதிய சிந்தனைகளை முன்வைத்தார். ‘மேன் – கம்ப்யூட்டர் சிம்பயாசிஸ்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

அடிப்படையில் இவர் ஓர் உளவியல் வல்லுநர். புகழ்பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தரவுகள் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டியிருக்கும் பணிகளைப் பற்றி யோசித்தார்.

அந்தப் பணிகளில் முடிவெடுக்கச் செலவிடும் நேரத்தைவிடக் கணிசமான நேரத்தைத் தரவுகளைத் திரட்டுவதற்காகச் செலவிட வேண்டியிருந்ததை எண்ணி வெறுப்படைந்தார். எதிர்காலத்தில் இந்தப் பணிகளை எல்லாம் கம்ப்யூட்டர் திறம்படச் செய்து மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என அவர் கணித்தார். அந்த வகையில் தானியங்கிமயமாக்கம், செயற்கை நுண்ணறிவுத் துறைகளுக்கான முன்னோடியாக அவர் கருதப்படுகிறார்.

முதல் மைக்ரோ கணினியில் பணியாற்ற வாய்ப்பு பெற்ற லிக்லைடர், தனக்கு முன் வான்னெவர் புஷ் விவரித்த தானியங்கி நூலக வகையை உருவாக்கக்கூடிய சாத்தியத்தை இவை கொண்டிருப்பதாக நம்பினார்.

அதனடிப்படையில், எங்கோ இருக்கும் ஒருவருக்கு ஒரு கணினி தானியங்கி நூலகமாகச் செயல்படக்கூடிய சாத்தியத்தைப் பற்றி எதிர்கால நூலகம் எனும் கட்டுரையில் விவரித்தார்.

இணைக்கப்பட்ட கணினிகளின் வலைப் பின்னல் பற்றியும் விரிவாக எழுதியிருந்தார் லிக்லைடர். ‘தற்போதைய நூலகங்களின் செயல்பாடுகளை இணைந்து அளிக்கக்கூடிய, அகண்ட அலை தகவல்தொடர்பு இணைப்புகளால் பிணைக்கப்பட்ட கணினிகளின் வலைப் பின்னல்’ என அவர் இதைப் பற்றி விவரித்திருந்தார். இதை ‘இண்டர் கேலெக்டிக் கணினி வலைப் பின்னல்’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணங்களை அவர் முன்வைத்த குறிப்புகளே இணையத்துக்கான முன்னோட்டமாக அமைந்தன.

இதற்கிடையே, 1961-ல் லியோனாட் கிளின்ராக் (Leonard Kleinrock), பெரிய தகவல் தொடர்பு வலைப் பின்னல்களில் தகவல் பாய்ந்தோடுவதற்கான கணிதவியல் கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ‘பாக்கெட் ஸ்விட்ச்’ எனும் தகவல் பரிமாற்ற முறை உருவானது.

வழக்கமான சர்க்யூட் போன்றவற்றில் தகவல்கள் கொண்டுசெல்லப்படும் மையம் சார்ந்த முறைக்குப் பதிலாக, இந்த முறையில் தரவுகள் சிறுசிறு பாக்கெட்களாகப் பிரிக்கப்பட்டு, அவை வலைப் பின்னலில் தனித்தனிப் பாதைகளில் சென்று, பின்னர் சேருமிடத்தில் ஒருங்கிணைய வழிவகுத்தது. இந்த முறையே வலைப் பின்னல்களில் தரவுகள் தடையற்றுச் செல்ல வழிவகுத்தது. இணையத்தின் தகவல் பரிமாற்றத்துக்கான ஆதாரமாகவும் அமைந்தது.

மற்றொரு முக்கிய நிகழ்வாக, 1965-ல் டெட் நெல்சன் எனும் கணினி அறிஞர், இணைப்புகள் மூலம் தகவல்களை, தொடுப்புகளை அளிப்பதற்கான ஹைபர்டெக்ஸ்ட் கருத்தாக்கத்தை முன்வைத்தார். அதே ஆண்டு, எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த லாரி ராபர்ட்ஸ், தாமஸ் மெரில் தொலைபேசி இணைப்பைக் கொண்டு, முதல் கணினி வலைப் பின்னலை உருவாக்கினர்.

ஆக, இணையம் என அறியப்பட இருந்த வலைப் பின்னலுக்குள் நுழைய தேவையான எல்லாம் தயாராக இருந்தன.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்