மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடித்த ‘தீ வண்டி’ படம் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதில் இடம்பெற்ற ‘ஜீவாம்சமாய் தானே…’ என்ற பாடலும் செம ஹிட். வகுப்பறையில் ஒரு அரட்டைப் பொழுதில் இந்தப் பாடலைச் சென்னையைச் சேர்ந்த செளமியா பாட, ஜிமிக்கி கம்மல் ஷெரிலை நம்மூரு இளந்தாரிகள் கொண்டாடியதைப் போல, செளமியாவைக் கொண்டாடுகிறார்கள் சேர நாட்டினர்!
மலையாளிகளின் ஃபேஸ்புக் பக்கங்களை எட்டிப் பார்த்தால், அங்கே செளமியாவின் குரல் நிரம்பிவழிகிறது. கேரள முன்னணி ஊடகங்களும் அவரைத் தேடிப்பிடித்து நேர்காணல் செய்து கவுரவித்துள்ளன. இதனால் ஏக மகிழ்ச்சியிலும் அதேநேரம் தன்னடக்கத்தோடும் பேசத் தொடங்குகிறார் செளமியா.
“எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே இசை ஆர்வம் அதிகம். அதுக்கு முழுக்க காரணமாக இருந்தது என்னோட பாட்டிதான். என் பாட்டி சுதாராவ் அகில இந்திய வானொலி நிலையத்தில் இசைத் துறையில் ‘ஏ கிரேடு’ ஆர்டிஸ்டாக இருந்தவங்க. வீட்டுல சமைக்கும்போதுகூட பாட்டி பாடிக்கிட்டேதான் சமைப்பாங்க. இசையில் அவுங்கதான் என்னோட வழிகாட்டி. பள்ளியில் படிக்கும்போதே பாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி கொடுத்து பாட்டி என்னை அனுப்பி வைப்பாங்க. அவுங்க மூலம்தான் எனக்கும் இசை ஆர்வம் வந்துச்சு. ஆனா இப்போ எனக்குக் கிடைச்ச பெருமையைப் பார்த்து சந்தோசப்பட பாட்டி உயிரோட இல்லை” என்று வருத்தப்படுகிறார் செளமியா.
செளமியாவின் தாய்மொழி கன்னடம். அவரது பூர்விகம் பெங்களூரு. ஆனால், தமிழ்நாட்டில் செட்டிலான குடும்பம். செளமியா சென்னையில் இருந்ததால், தமிழும் அத்துப்படி. இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீசுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். கேரளாவில் டிரெண்டிங்கான ‘தீ வண்டி’ பாடலை வீடியோ எடுத்த கதையைச் சொல்லும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.
“இசைக் கல்லூரி வகுப்பில் ஏதாவது திரைப்படப் பாடல்களைத் தோழிகளுடன் சேர்ந்து அடிக்கடி பாடிக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்றைக்கும் பாடினோம். அப்போ நான் ‘தீ வண்டி’ படத்துலேர்ந்து ‘ஜீவாம்சமாய் தானே…’ எனும் மலையாளப் பாடலைப் பாட ஆரம்பிச்சேன். அதை ஃப்ரண்ட்ஸுங்க செல்போனில் வீடியோ எடுத்ததும் எனக்குத் தெரியாது. என்னோட வகுப்புத் தோழன் ஸ்ரீஜித் அதை ‘டிரெண்டிங் கேரளா’ன்னு ஃபேஸ்புக் பக்கத்தில் போட, லட்சக்கணக்கான பார்வையாளர்கள், பல ஆயிரக்கணக்கான பகிர்தல்ன்னு எங்கேயோ போயிடுச்சு” என்கிறார் செளமியா.
“இதுல முக்கியமான விசயம் என்னன்னா, தமிழும் கன்னடமும் தெரிஞ்ச அளவுக்கு எனக்கு மலையாளம் தெரியாது. பேசுனா புரிஞ்சுக்குவேன். ஆனால், பதில் பேசத் தெரியாது. அந்தப் பாடலுக்கும் அர்த்தம் தெரிஞ்செல்லாம் பாடல. நாயகன், நாயகியை வர்ணித்து, நீதான் என் உயிர்ன்னு பாடுறாருன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். ஒரு வீடியோ வைரல் ஆகுறப்ப, என்ன நடக்கும்னு நேரடியா இப்போதான் பார்க்குறேன். அது நமக்கே நடக்கும்போது கிடைக்குற அனுபவம் நிச்சயம் வேற லெவல்!” என்று பூரிக்கிறார் செளமியா.
சரி, கேரளாவில் இப்போது உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று கேட்டதும் சிலிர்க்கிறார் செளமியா. “பாடலைக் கேட்டுட்டு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நண்பர்கள்னு பலரும் பாராட்டுனாங்க. சாதாரணமா இப்போ பஸ்ல போனாக் கூட, பக்கத்து சீட்டுல இருக்குறவங்க ‘ஆ பாட்டு பாடிய குட்டி நீயானோ?’ன்னு கேட்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்கிறார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
9 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago