சென்னையில் கடற்கரை, தியேட்டர்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என இளைஞர்கள் சந்திக்கும் இடங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. சந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டாலே வானுயர்ந்த மால்கள் தொடங்கி விதவிதமான காபி ஷாப்புகள், ரிசார்ட்டுகள், பைக்குகள் சீறிச் செல்லும் ஈ.சி.ஆர். சாலை ஆகிய இடங்களைத்தாம் இளைஞர்கள் குறிக்கிறார்கள். பாரம்பரிய பழைய இடங்களைத் தவிர்த்துப் புதிய இடங்களை சென்னை இளைஞர்கள் விரும்ப என்ன காரணம்?
மால்களில் உலா
பொதுவாக பேருந்து நிறுத்தங் களுக்கு அருகில் இருக்கும் குட்டிச் சுவரிலோ தேநீர் கடையிலோ உட்கார்ந்துகொண்டு மணிக் கணக்கில் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் போன தலைமுறையினர். ஆனால், உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான சென்னை மெரீனா அந்தக் காலம் முதலே சந்திப்புகளின் முக்கிய இடமாக இருந்துவருகிறது. இப்போதும் இளைஞர்களின் சந்திப்பு திட்டமிடும் இடங்களில் மெரீனா இருந்தாலும், முன்புபோல மணிக் கணக்கில் எல்லாம் இளைஞர்கள் அங்கே ஒன்றுகூடி அரட்டையடிக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. காவலர்களும் இளைஞர்களை அங்கே இருக்க விடுவதில்லை. எனவே அந்த இடத்தைப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் கைப்பற்றிவிட்டன.
சுவையாகச் சாப்பிட நொறுக்குத் தீனிகள், ‘அய்யோ சாப்பாட்டுக்கு நேரமாச்சே’ என்று நினைக்காமல் இருக்க விதவிதமான ஹோட்டல்கள், ஹாயாக சினிமா பார்க்க மினி தியேட்டர்கள், ஜாலியாக பொழுதுபோக்க விதவிதமான விளையாட்டுகள் என ஒரு புத்தம் புது உலகமே மால்களில் கிடைத்தால் சும்மா விடுவார்களா இளைஞர்கள்? புகுந்து விளையாடிவிட மாட்டார்களா? இப்படிச் சகல வசதிகளும் உள்ள மால்கள்தான் சென்னை இளைஞர்களின் முக்கிய சந்திப்பு மையமாகிவிட்டன.
கடற்கரை, பூங்கா, தியேட்டருக்குச் செல்வதையெல்லாம் இந்தக் காலத்து சென்னை இளைஞர்கள் மறந்தேவிட்டார்கள். முழுவதும் குளிரூட்டப்பட்ட மால்களில் கும்பலாகக் கூடி பேசியபடியே சுற்றுவதைத்தான் ஹாபியாக வைத்திருக்கிறார்கள். அதற்கேற்ப சிறியதும் பெரியதுமாக சென்னையின் எல்லா இடங்களிலுமே மால்கள் முளைத்துவிட்டன.
பறக்கும் சாலை
மால்களுக்கு பிறகு இளைஞர்களை ஈர்க்கும் விஷயம் கிழக்குக் கடற்கரைச் சாலைதான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் இளைஞர்கள் பைக் சகிதம் வந்து இந்தச் சாலையில் குவிந்துவிடுகிறார்கள். திருவான்மியூரில் தொடங்கி மாமல்லபுரம் வரை பைக்கில் சீறிப் பாய்ந்து செல்வதை ஹாபியாகவே வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே தேநீர் கடையிலோ சுற்றுலாதளங்களிலோ நின்று மணிக்கணக்கில் அரட்டையடித்து விட்டுத் திரும்பிவிடுகிறார்கள்.
ஈ.சி.ஆர். சாலையை இளைஞர்கள் தேர்வு செய்ய காரணம் இல்லாமல் இல்லை. சென்னை பெருநகரம் எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. ஓரிடத்தி லிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் திண்டாட்டம்தான். ஆனால், ஈ.சி.ஆர். சாலையில் இந்தப் பிரச்சினையே இல்லை. எப்போதுமே பரபரப்பில்லாமல் அமைதியாகவே இந்தச் சாலை இருக்கும். எனவே அதிவேக பைக்குகளை வாங்கி வைத்திருக்கும் இளைஞர்களின் விருப்பத் தேர்வாக ஈ.சி.ஆர். சாலையே உள்ளது. இதைப் பயன்படுத்தி ஆபத்தான சாகச பைக் ரேஸ்களை நடத்தவும் இளைஞர்கள் இந்தச் சாலையைத் தேர்வு செய்கிறார்கள்.
ஜாலி ரிசார்ட்டுகள்
சென்னையில் இளைஞர்களையும் இளைஞிகளையும் ஓரிடத்தில் இணைக்கும் மையப் புள்ளியாக ரிசார்ட்டுகள் மாறிவருகின்றன. குறிப்பாக ‘சென்னையின் ஐ.டி. காரிடர்’ என்றழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.) இதற்கேற்ப மாறியிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் மட்டுமல்ல, பல துறையில் பணியாற்றும் இளைஞர், இளைஞிகளும் தங்கள் வார இறுதி நாட்களை கழிக்க ரிசார்ட்டுகளையே தேர்வு செய்கிறார்கள்.
கடற்கரையில் அமர்ந்து அரட்டையடிப்பது, படகு சவாரி செய்வது, விதவிதமான உணவுகளை வரவழைத்து சாப்பிடுவது, விளையாடி மகிழ்வது, அருகே உள்ள சுற்றுலாதளங்களுக்கு சென்றுவருவது என மொத்தமாக தங்களை மறந்து மனதைக் குதூகலிக்க செய்ய பல அம்சங்கள் இருக்கின்றன. இதனாலேயே சந்திப்பு இடங்களில் ரிசார்ட்டுகளும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன.
தனிமை காபி ஷாப்புகள்
தனிமையையும் கட்டற்ற சுதந்திரத்தையும் விரும்பும் இன்றைய தலைமுறையினர் சந்திக்கவும் ஆசை தீர மணிக்கணக்கில் பேசவும் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த காஃபி ஷாப்புகளையே தேர்வு செய்கிறார்கள். சென்னையில் மட்டும் காபி ஷாப்கள், காபி டே, காபி கபே என்ற விதவிதமான பெயர்களில் நூற்றுக்கணக்கான கடைகள் வந்துவிட்டன. எங்கேயாவது ஓரிடத்தில் தினந்தோறும் காபி ஷாப்கள் முளைத்து கொண்டே இருக்கவும் செய்கின்றன.
சூரிய உதயம் ஆரம்பிக்கும் பொழுதில் தொடங்கப்படும் காபி ஷாப்கள் இரவு 11 மணி வரை தாண்டியும் பரபரப்பாகவே காட்சியளிக்கின்றன. நண்பர்கள், காதலர்கள் என யாராக இருந்தாலும் உட்கார்ந்து மணிக் கணக்கில் ஆத்மார்த்தமாகப் பேசிக்கொள்ளும் இடங்களாக காபி ஷாப்கள் மாறிவிட்டன.
காபி ஷாப்புகள் சென்னையில் இளைஞர்களை ஈர்க்கும் இடமாக இருக்க என்ன காரணம்? எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம், ஒரு காபியோ, கூல் டிரிங்க்ஸோ வாங்கி விட்டு எவ்வளவு மணி நேரம் ஆனாலும் அரட்டை அடிக்கலாம். அன்னியர்களின் பிரவேசம் கிடையாது, உறுத்தலான பார்வைகள் கிடையாது. அவரவர் வேலையில் தடங்கல்கள் என்ற பேச்சுக்கெல்லாம் காபி ஷாப்களில் இடமில்லை. சென்னை போன்ற பரபரப்பான நகரில் இத்தனை தனிமை கிடைத்தால் இளைஞர்கள் விடுவார்களா? அதனால்தான் சென்னையின் முக்கிய சந்திப்பு இடமாக காபி ஷாப்புகளும் மாறிவிட்டன.
இதுபோல ஃபிட்னஸ் மையங்கள், ஜிம்முகளும்கூட இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் இடம் பிடித்துவிட்டன. காலத்துக்கேற்ப நகரின் மாற்றமும் அதற்கேற்ப இளைஞர்களின் ரசனை மாற்றமும் சென்னையில் இளைஞர்களின் சந்திப்பு இடங்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகிவிட்டன.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago