டுபு…டுபு….டுபு...டுபு’ வெனச் சீறிப் பாய்ந்து வருகிறது அந்த புல்லட். அதில் மனைவி, குழந்தைகளோடு வலம்வருகிறார் விக்னேஷ்வர சுப்பையா. அவரது வாழ்க்கை ஒருவகையில் பிறருக்குத் தன்னம்பிக்கைப் பாடம்!
சாலை விபத்தில் ஒரு காலை இழந்த இவர், செயற்கைக் கால் பொருத்தி, இயல்பான மனிதர்களோடு ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். நிச்சயித்த திருமணமும் விபத்துக்குப்பின் நின்றுபோக, தன் தன்னம்பிக்கையால் மீண்டெழுந்தவர், இன்று அன்பான மனைவி, அழகான குழந்தைகள் செல்வங்கள், திகட்டாத தன்னம்பிக்கை என வாழ்ந்துவருகிறார்.
ஒரு காலைப் பொழுதில் விக்னேஷ்வர சுப்பையாவை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ‘’அப்பா ராமகிருஷ்ணனுக்குத் தனியார் நிறுவனத்தில் வேலை. அம்மா முத்துமாரி இல்லத்தரசி. என் உடன்பிறந்தவங்க இரண்டு தங்கச்சிங்க. இரண்டுபேருக்கும் திருமணம் முடிஞ்சிருச்சு. நான் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிச்சுட்டு, எலக்ட்ரிக்கல் வேலை செஞ்சுட்டு இருந்தேன். நான் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் வெளிநாட்டுக்குப் போனாரு. அதனால மொத்தப் பொறுப்பையும் எனக்கே சொந்தமா தந்துட்டு போனாரு.
எல்லாம் நல்லபடியா போச்சு. எனக்கும் வீட்டுல திருமண நிச்சயம் பண்ணுனாங்க. ஒரு நாள் நண்பர் வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு பைக்ல வந்துட்டு இருந்தேன். எதிர்ல வந்த மீன் லோடு வண்டி என்னை இடிச்சுட்டு நிக்காமப் போயிருச்சு. தூரத்துல இருந்தே அந்த வண்டி ஆடி, ஆடித்தான் வந்துச்சு. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கணும். அந்த விபத்தில் என்னோட வலது கால் மூட்டின் கீழ் பகுதி மூன்று பாகங்களா உடைச்சுருச்சு. பாதமும் உருத்தெரியாம சிதைஞ்சு போனது.
ஆஸ்பத்திரியில ஆப்ரேஷன் பண்ண முடியாது. செயற்கைக் கால்தான் வைக்கணும்னு சொன்னாங்க. மொத்த குடும்பமும் இடிஞ்சு போச்சு. நிச்சயிக்கப்பட்ட பொண்ணு வீட்டுல ஒரு கால் இல்லைன்னு சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. வாலிப வயசுல இது எத்தனை சோதனையான காலகட்டம்? ஆனாலும் நான் மனம் தளரல. செயற்கைக் கால் வைச்சேன். பிலோனி என்னும் வகையைச் சேர்ந்த கால் இது. மூணே மாசத்துல செயற்கைக் காலில் நடந்தே பொண்ணு வீட்டுக்குப் போனேன்.
பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் எப்படி நடக்குறீங்கன்னு ஆச்சர்யமா பார்த்தாங்க. ஆனாலும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் இல்லன்னு சொல்லிட்டாங்க. இதெல்லாம் நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. திரும்பி பார்க்கும்போது, இப்பவும் வலிக்குது” என்கிறார் விக்னேஷ்வர சுப்பையா.
ஆனால், விபத்துக்குப் பிறகு அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. செயற்கைக் கால் உதவியுடன் ஜிம்முக்குப் போகத் தொடங்கியிருக்கிறார். சிறிய உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். விக்னேஷ்வராவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால், உடம்பு சீக்கிரமே குணமாகிவிட்டது, பிறகு ஹைதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தபோது அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார்.
செயற்கைக் கால் வைத்து ஏழே மாதங்களில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியிருக்கிறார். அந்த மாரத்தானில் 30 பேர் மட்டுமே 5 கிலோ மீட்டர் தூரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். இவர்களில் விக்னேஷ்வர சுப்பையாவும் ஒருவர். அந்த நம்பிக்கை கொடுத்த அனுபவம், தொடர்ந்து ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.
“முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப் பந்தயங்களில்தான் பங்கெடுத்தேன். அதில் பரிசு வாங்குனாலும், எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. நம்மைவிட இயலாதவருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் பறிக்கிறோமோன்னு தோணுச்சு. உடனே இயல்பானவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். இதுக்குன்னு செயற்கைக் காலுக்குப் பதிலாக, பிளேட்ன்னு ஒரு கால் இருக்கு. ஸ்பிரிங் வகையில் அது துள்ளி எழும்பி ஓட வைக்கும்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் என்னை ஊக்குவிக்கும் விதமா ரூ.5 லட்சம் மதிப்பிலான கார்பன் பைபர் வகையிலான இந்தக் காலை எனக்கு இலவசமா கொடுத்தாங்க. இப்போ என்னால 100 மீட்டரை 13.5 வினாடிகளில் ஓட முடியும். மாவட்ட அளவில் பல பரிசுகளும் வாங்கிருக்கேன். இப்போதைய உடல்நிலையில் எலக்ட்ரிக்கல் வேலை சாத்தியமே இல்லைன்னு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி படிச்சேன். இப்போ நாகர்கோவிலில் சொந்தமா செல்போன் சேல்ஸ், சர்வீஸ் மையம் வைச்சுருக்கேன்” என்று பெருமையுடன் கூறுகிறார் விக்னேஷ்வர சுப்பையா.
சரி, திருமணம் நடந்த கதையைச் சொல்லவே இல்லையே என்று கேட்டவுடன் அதையும் பகிர்ந்துகொண்டார். “ஒரு திருமண வீட்டுலதான் முதன்முதலா ஸ்ரீதேவிய சந்திச்சேன். கால் இல்லைன்னாலும், தன்னம்பிக்கை நிறைந்த மனுஷன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க. அவுங்க வீட்டுலயும் என்னை மகன்போல ஏத்துக்கிட்டாங்க. இப்போ எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க.
இப்போ இவுங்கதான் என் உலகம். என்னால் புல்லட்கூட ஓட்ட முடியும். என்னைப் பொறுத்தவரை விருதும் கோப்பையும் முக்கியம் அல்ல. விபத்தால் ஒரு காலை இழந்த பின்பும், நான் இயல்பாக இருப்பதும், தொடர்ச்சியாய் இயங்குவதும் என்னைப் போல் பலருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்!” என்று சொல்லியவாறே குடும்பத்தை ஏற்றிக்கொண்டு புல்லட்டைக் கிளப்புகிறார் விக்னேஷ்வர சுப்பையா.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago