சமீபமாக ஒரு தெலுங்கு டப்பிங் சீரிஸை ஓடிடியில் பார்க்க நேர்ந்தது. நமக்கு சில நாட்களில் நிறைய நேரம் கைவசம் இருந்தும் உருப்படியாக ஏதும் செய்யத் தோன்றாது அல்லவா?! அப்படி ஒரு நாளில் பார்த்த சீரிஸ் அது. அதில் ஒரு பதின்ம வயது சிறுவன் யூடியூப், இன்ஸ்டா இன்ஃப்ளூயசர் என்று தன்னை அறிமுகப்படுத்துவான். ‘எப்போ பார்த்தாலும் ஃபோனும் கையுமா..’ என அறிவுரை கூற அடித்தளம்போடு அண்டை வீட்டு (பூமர் அங்கிளிடம்) “ஹலோ அங்கிள் நீங்க என்ன ட்ரெஸ் போடலாம், என்ன பிராடக்ட் வாங்கலாம், என்ன சாப்பிடலாம் தொடங்கி யாருக்கு ஓட்டு போடலாம்னு வரைக்கும் நாங்க தான் வழிகாட்டுறோம். உங்க வேலை எங்கள ஃபாலோ பண்றது மட்டும்தான்” என்று பேசி ‘ஸோ கால்டு’ பூமரின் வாயடைப்பான்.
அச்சிறுவனின் பேச்சு அந்த சீரிஸில் ஒரு ‘பூமர் கலாய்ப்பு’ சீனாக செருகப்பட்டிருந்தது. அது கலாய்ப்பு என்றாலும் கூட இன்றைய இளைஞர்கள், யுவதிகள் பலரும் இப்படிப்பட்ட இன்ஃப்ளூயன்சர்களால் வெகுவாகவே ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது அக்காட்சி. அவர்கள் என்ன சொன்னாலும் அதை கண்மூடித்தனமான பின்பற்றும் ‘கோளாறான மனப்பக்குவத்தில்’ இளம் தலைமுறையின் ஒரு சாரார் இருக்கின்றனர்.
அதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கும் வீடியோக்கள் அழகு குறிப்புகள் சார்ந்தவை. ஸ்கூல் போகும் பெண் பிள்ளைகளுக்கான ‘லைட் மேக்’ அப் தொடங்கி ‘ஐ மேக் அப்’, ‘ஹோம் கேர்’ எனத் தனித்தனியா, ரகம் ரகமா திகைக்க வைக்கும் இன்ஃப்ளூயன்சர்களின் அட்ராசிட்டீஸ்.
செல்ஃப் கேர் என்றால் என்ன?! - புதிதாக கல்லூரியில் சேர்ந்த ஓர் இளம் பெண்ணிடம் வகுப்புப் பிள்ளைகள் சிலர் அறிமுகப் பேச்சிலேயே, ‘நீ செல்ஃப் கேர் பண்ணுவியா?’ என்று கேட்டுள்ளனர். அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் அவளை திகைக்க வைத்திருக்கிறது. அது அவளுக்கு மறைமுகமாக மன அழுத்தத்தையும் கொடுத்துள்ளது. அப்படி என்னதான் அவர்களின் பியூட்டி ஸ்டாண்டர்ட்ஸில் சொன்னார்கள் என்று விசாரித்தால் சற்று தலை சுற்றுகிறது.
» வீட்டை சுற்றி 15,000 செடிகள்: டெல்லியில் தூய்மை காற்றை சுவாசிக்கும் தம்பதியின் உத்வேக கதை!
இதோ அவற்றில் சில.. காலையில் எழுந்ததும் ஐஸ் பவுலில் முகத்தை முக்கி ‘face plunge’ செய்ய வேண்டும். அப்புறம் க்ளென்ஸர் பயன்படுத்த வேண்டும். இவற்றில், Oily, Dry, Combination, Sensitive Skin என நம் சருமத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க ரகரகமான க்ளென்ஸர்கள் சந்தையில் நிறைய உள்ளன. இதில் சார்க்கோல் க்ளென்ஸருக்கு மவுசு அதிகம். (கரித்தூளால் செய்யப்பட்டது) அதன்பின்னர் டோனர் யூஸ் பண்ண வேண்டும். ( இவை நியாசினமைட், சாலிசிலிக் ஆசிட், ஹையாலுரானிக் ஆசிட் கொண்ட களிம்புகள்). அதற்கு அடுத்து ஃபேஸ் சீரம் (Face Serum). அடுத்து ஐ க்ரீம் (Eye Cream),
அப்புறம் ஸ்பாட் க்ரீம், (Spot Cream - இது ஏதாவது முகத்தில் டார்க் ஸ்பாட்ஸ் இருந்தால் அதை மறைக்க), அடுத்தது ஃபேஸ் ஆயில், கடைசியாக மாய்ஸ்சரைஸர், சன்ஸ்க்ரீன் பூசிக் கொள்ள வேண்டும். இது தான் மார்னிங் ரொட்டீனாம். இதில் மிகப்பெரிய மார்க்கெட் சன்ஸ்க்ரீனுடையது. இதில் வெயில் காலத்தில், காற்று காலத்தில், பீச் சென்றால், தலையில் உள்ள ஸ்கால்புக்கான சன் ஸ்க்ரீன் எனத் தனித்தனியாக உள்ளன. முகப் பொலிவுக்கு ‘மைக்ரோ நீட்லிங்’ (Microneedling) என்ற காஸ்மடிக் பரோசீஜரை கூட செய்து கொள்கின்றனர் சற்றே வசதிபடைத்த கல்லூரி மாணவிகள்.
இது போக ‘எவ்ரிதிங் ஷவர் ரொட்டீன்’ (பாடி பட்டர், ஷியா பட்டர், அதற்கான ஸ்கரப்பர், மாய்ஸ்சரைஸர், பாடி லோஷன் அப்புறம் குளித்தவுடன் ஈரத்தை பதமாக உறியும் பாத் டவல் வரை இருக்கின்றன). அப்புறம் நைட் ஸ்கின் ரொட்டீன், வாரா வாரம் கவனிக்க வேண்டியவை, மாதம் ஒரு முறை க்ரூம் செய்ய வேண்டியவை, ஹேர் மாஸ்க், ஹேர் பேக், ஹேர் ஆயில், ஹேர் மூஸ் போன்ற ஹேர் கேர் ரொட்டீன், அதிலும் குறிப்பக கர்லி ஹேர் ரொட்டீன், ஸ்ட்ரெய்ட் ஹேர் ரொட்டீன் என்று தனித்தனியாக உள்ளது.
அடுத்தது வாசனை திரவியங்கள், ஹேர் ஸ்ப்ரே என்று வேறு இருக்கின்றன. ‘ஹவ் டூ ஸ்மெல் லைக் ஏ ஸ்ட்ராபெர்ரி, வெனிலா’ என்றெல்லாம் ப்ராட்க்ட் டிப்ஸ் தருகிறார்கள். நகத்தை வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே பள்ளிகளில் சொல்லித்தரப்படும் செல்ஃப் கேராக இருந்த காலம் போய் இப்போது நகத்தைச் சுற்றியுள்ள தோல் எப்படி இருக்க வேண்டும் என்றுவரை அழகு நிர்ணயங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய cuticle corrector - drill bit என்றொரு பொருளை உபயோகிக்கின்றனர்.
பெண்களின் மாதவிடாய் சைக்கிளை மென்ஸ்ட்ரூவல் ஃபேஸ், ஃபாலிகுலார் ஃபேஸ், ஓவுலேஷன், லியூட்டல் ஃபேஸ் எனப் பிரித்துக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு ஃபேஸிலும் எப்படி முகத்தை பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் தனித்தனி ப்ராடக்ட்ஸுடன் டிஃப்ஸூம் நிறைந்து கிடக்கின்றன. இவையெல்லாம் தான் செல்ஃப் கேர் என்று இன்றைய இளைஞர்கள் சிலர் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
ஹெர்பல், ஹோம் ரெமடி, தொடங்கி கொரியன் க்ளாஸ் ஸ்கின் வரை.. இதுவரை சொன்னதெல்லாம் ‘செல்ஃப் கேர்’ ரொட்டீன் என்றால் இதை எந்த மாதிரியான ப்ராடக்ட்ஸ் கொண்டு செய்யலாம் என்று இன்ஃப்ளூயன்ஸ் செய்யவும் தனிக் கூட்டம் இருக்கும். ஆயுர்வேதா, ஹெர்பல், ஐரோப்பாவின் மோஸ்ட் ஃபேவரைட் ப்ராடக்ட்ஸ், கொரியன் ப்ராடக்ட்ஸ் என்று நிறைய உலா வருகின்றன.
இன்றைக்கு டிவி, ரேடியோ, செய்தித்தாள், இணையதள விளம்பரங்களுக்கு சவால்விடக் கூடிய விளம்பரத் தூதுவர்களாக உருவாகியுள்ளனர் இந்த இன்ஃப்ளூயென்சர்கள். இவர்களுக்கான ஃபாலோவர்ஸ் அடிப்படையில் உள்ளூர் தொடங்கி உலகச் சந்தையின் டாப் பிராடக்ட்ஸ் வரை இவர்கள் வசம் கொடுக்கப்பட்டு பிராண்ட் புரோமோஷன் நடக்கிறது. இதைப் பார்க்கும் சிலர் என்னவோ இந்த பொருட்களை எல்லாம் அவர்களே பணம் கொடுத்து வாங்கி பல மாதங்கள் பயன்படுத்தி டெஸ்டிமோனியல் சொல்வது போல் கருதிக் கொண்டு பர்ஸை காலி செய்து கப்போர்டை நிறைக்கிறார்கள். இந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களுக்கான ஸ்டோரேஜ் சாதனங்கள் மார்கெட் தனி. இப்படி ஒன்றுக்கொன்று பிணைந்து கன்ஸ்யூமரிஸ சந்தை பெருத்து வீங்கிக் கொண்டு இருக்கிறது.
உங்கள் ஃபேஸ் பேக்கில்.. - அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்டாக இணைந்துள்ளது தான் கோதுமை மாவு, மஞ்சள், நெய், பால் சேர்த்த ஃபேஸ் பேக். இந்த ரெசிபி ரொம்ப சிம்பிள் தான். நிறைய செலவழிக்க வேண்டாம். உங்கள் வீட்டில் கோதுமை மாவு, பால், நெய், மஞ்சள் தூள் இருக்கா. அப்புறம் என்ன இன்ஸ்டா வீடியோ கோதுமை மாவு ஃபேஸ் டோ ரெசிபி சொல்லும் அதைச் செய்து கொள்ளலாம். அப்புறம் அந்த மாவை முகத்தில் அப்படி, இப்படி, எப்படி வேண்டுமானாலும் உருட்டிக் கொண்டு முகத்தில் இருக்கும் முடியை நீக்கிவிடலாம். இது தான் இப்போ ட்ரெண்ட். இதைப் புகழ்ந்து, பரிந்துரைக்கும் இன்ஃப்ளூயன்சர்கள் ஏராளம். இவர்களைத் தான் சில கல்லூரிகள் தாங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அழைக்கும் அவலங்களும் நடக்கின்றன.
ஃபேஸ் ஹேர் ஐடன்டிஃபிகேஷன் ஸ்ப்ரே என்று ஒரு பொருள் சந்தையில் இருக்கிறது. இதை முகத்தில் ஸ்ப்ரே செய்தால் அது வெள்ளை படிமமாக படியும். பின்னர் அந்த இடத்தில் ரேசர் வைத்து ஷேவ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் ஆஃப்டர் ஷேவ் ரொட்டீன் இருக்கு. இந்த ஸ்ப்ரே சற்று காஸ்ட்லியானது என்பதால் அதற்கு நாங்கள் எளிதான மாற்று தருகிறோம் என்று திணிக்கப்படுள்ளதுதான் இந்த கோதுமை மாவு ஃபேஸ் டோ.
இதைப் பற்றி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும் தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர், இப்போது ட்ரெண்டில் இருக்கும் இந்த வீட் ஃபேஸ் டோ, சரும பராமரிப்பில் சிறிய விளைவைத் தரும் என்றாலும் கூட நீண்டகாலம் இதைப் பயன்படுத்துவதில் சில பிரச்சினைகளும் வரலாம். சிலருக்கு சில விதமான உணவுப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் பரவலாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரிந்துரைக்கப்படுகிறது என்பதால் பின்பற்றுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறார்.
உண்மையில், நம் முகத்தில் இருக்கும் மிக நுணுக்கமான முடிகள் அவசியமானவையே. அவை சுற்றுப்புற மாசு, புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை இயற்கையாகவே தடுக்கக் கூடியதாகும். அவற்றைத் தேடித்தேடி அப்புறப்படுத்தி அழகாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் ஃப்ளாலெஸ் ஸ்கின் (Flawless Skin) என்பதையே இலக்காக, செல்ஃப் கேராக, இயல்பானதாகக் கருதும் இளம் தலைமுறையினர் காலையில் ஒரு சோப் வைத்து குளித்துவிட்டு வரும் சக தோழிகளை அன் ஹைஜீனிக் என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு ‘ப்யூட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ கட்டுக்கதைகள் வாழ்க்கை முறையாக, நல்ல பழக்கங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
கல்லூரிப் பெண்ணின் பார்வை... - கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி புவனிகா ஸ்ரீ தற்கால ப்யூட்டி ஸ்டாண்டர்ட்ஸ் அழுத்தம் பற்றி கூறுகையில் , முன்னாடியெல்லாம் ஒரு ட்ரெண்ட் இருந்தது. இவை தான் ப்யூட்டி ஸ்டாண்டர்ட்ஸ். இதையெல்லாம் நீ செய்யாட்டி எங்களோட இருக்க முடியாது என்று வெளிப்படையாக சொல்வார்கள். நம்மை ஒதுக்கிவைப்பார்கள். வாட்ஸ் அப் க்ரூப்பில் கூட சேர்க்க மாட்டார்கள். ஆனால் இப்போ காலப்போக்கில் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது.
இப்போது வெளிப்படையாக எதுவும் சொல்வதில்லை. ஆனால், மறைமுக அழுத்தம் இருக்கிறது. ஏதேனும் ஒரு ப்யூட்டி ஸ்டாண்டர்டுக்குள் நாம் ஃபிட்டாக வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. அவர்கள் எது சரியான, உண்மையான செல்ஃப் கேர் என்று நம்பி கடைப்பிடிக்கிறார்கள் அதை நான் இம்மியளவாவது பின்பற்ற வேண்டிய கண்ணுக்குத் தெரியாத அழுத்தம் இருக்கிறது. இதையெல்லாம் ஊக்குவிக்கும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது எனக்கு மிகப்பெரிய கோபம் இருக்கிறது” எனக் கூறுகிறார்.
இந்தியா எனும் மிகப்பெரிய சந்தை.. - “இந்தியாவில் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு சந்தை 2024 ஆம் ஆண்டில் 31.56 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ” என்று அண்மைய சந்தை ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகின்றது. மேலும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்சர்ஸ் மற்றும் பிரபலங்கள் அழகுத் துறையில் நுகர்வோர் நடத்தையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது.
இந்த அழகு சாதன சந்தைக்கு இளம் பெண்கள் மட்டும் தான் இலக்கா என்றால் இல்லை. ஆன்ட்டி ஏஜிங் (anti-aging), ஹைட்ரேஷன் (hydration) ஸ்கின் ரினீவல் (skin renewal) என்று நிறைய பேர் இந்தச் சந்தையின் கன்ஸ்யூமர்களாக இருக்கிறார்கள். இது ஏஐ காலம் இல்லையா அப்புறம் அதையும் சந்தையில் புகுத்தாவிட்டால் எப்படி என்று உலகப் புகழ் பிராண்ட்கள் மிகுவித்த மெய்நிலை (Augmented Reality - AR) and வர்ச்சுவல் ட்ரை ஆன்ஸ் ( virtual try-ons ) மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சருமத்துக்கு எந்த விதமான அழகு சாதன பொருள் சரிவரும் என சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் வழி செய்கின்றன.
இன்னும் சில பிராடக்ட்ஸ் தங்களின் நேர்மையை, அன்பை அடையாளப்படுத்த ’இந்த ப்ராடக்ட் மிருகங்களின் மீது பரிசோதிக்கப்படவில்லை’ எனக் கூறி தங்களை திருவாளர் பரிசுத்தமாக பிம்பப்படுத்துகின்றன. எப்படியோ, இந்தியா அழகு சாதனப் பொருட்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான ஒரு மிகப் பெரிய சந்தையாகிவிட்டது.
இத்தனை அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தாவிட்டாலும் இதில் ஏதேனும் ஒன்றையாவது பயன்படுத்துவோர் இல்லாமல் இருக்க முடியாது. எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்ற ட்ரெண்ட்களில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இது. ஆனால் இது உடல் ரீதியாக பக்க விளைவுகளை, நிர்ணயிக்கப்பட்ட அழகு எல்லைகளை எட்டாவிட்டால், நெருங்காவிட்டால் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதால் இது பொது விவாதத்துக்கு கொண்டு வரப்பட வேண்டிய விஷயமாக உருவெடுத்துள்ளது.
சமூகப் பொறுப்பு இருக்கிறது? - இதுபோன்ற அழகு, தனிநபர் பராமரிப்பு சார்ந்த ப்யூட்டி ஸ்டாண்டர்ட்ஸின் வீச்சு சற்று ஆழமாகவே சமூகத்தில் புரையோடி வருகிறது. இது சில நேரங்களில் இவற்றைப் பின்பற்றும் இளம் பெண்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் சிக்கல், மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது. இன்ஃப்ளூயன்சர்கள் கொட்டும் வீடியோக்களால் தன்னைத் தான் சந்தேகிக்கும், ஓர் பாதுகாப்பாற்ற மனநிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர்.
நான் அழகாக இருக்க வேண்டும், மிளிர வேண்டும் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஒரு பெண் அல்லது ஆண், நினைப்பது நிச்சயமாகக் குற்றமில்லை. ஆனால் நீ இப்படித்தான் இருக்க வேண்டும், பளபளப்பான சருமம் தான் அழகானது. வெள்ளையான சருமம் தான் சரியானது. முகத்தில் இதையெல்லாம் பூசிக் கொள்வதுதான் சரியான செல்ஃப் கேர் .
தலை முதல் கால் விரல் நகம் வரை இப்படித்தான், இதைக் கொண்டுதான் பராமரிக்க வேண்டும் என்று சமூகமோ இல்லை இந்தியாவை இதற்கான சந்தையாக்கும் பெரு நிறுவனங்களோ நிர்ணயிக்கும் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி அதற்காகவே தன்னை திருத்திக் கொள்வது, ப்ளாஸ்டிக் சர்ஜரி வரை செல்வது, சமூகம் வகுத்த அழகுத் தரங்களுக்கு கட்டுப்படுவது என்பது தவறு. ஒரு வகையில் அடிமைத்தனம்.
செல்ஃப் கேர் என்பது நாம் என்ன நிறத்தில் இருக்கிறோம், எத்தகைய உடல்வாகைப் பேணுகிறோம் என்பதில் இல்லை. மாறாக நம்மை நாம் ஏற்றுக் கொள்வதில், நாம் தன்னம்பிக்கையுடன் மிளிர்வதில், அன்பைக் கடத்துவதில், நம்பகத்தன்மை வாய்ந்த நபராக சமூகத்தில் இருப்பதில் தான் இருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அது தான் உங்கள் அடையாளம். இந்தச் சமூகம் உங்களை எந்த அளவுகோலில் பார்க்க விரும்புகிறதோ அதில் நீங்கள் பொருந்திக் கொள்ள முயற்சிப்பது அல்ல உங்கள் அடையாளம் என்பதை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கும் சமூகப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
20 days ago