அப்துல் கலாம் 93-வது பிறந்த தினம்: நிறைவேறுமா சொந்த ஊர் கனவு?

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: "கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவுகள் தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன" என்று கூறி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின் முன்னேற்றம் பற்றி கனவு காண வைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாய் கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் பிறந்த அவரின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் பிறந்த சகோதர்கள் மூன்று பேர். ஒரு சகோதரி. கடைக் குட்டியான கலாம் பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று செய்தி தாள் விநியோகித்ததை தன் வாழ்நாள் முழுவதும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.

பள்ளிப் படிப்பினை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளநிலை இயற்பியலும், சென்னை எம்.ஐ.டியில் விமானப் பொறியியலும் பயின்ற அப்துல் கலாம், 1958-ம் ஆண்டு டெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.250 பின்னர் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.

அப்துல் கலாம் தனது கடின உழைப்பால் 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.ராக்கெட் திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டு, ரோகிணி செயற்கைக் கோளும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்ற பிருத்வி, அக்னி, ஆகாஷ், நாக், திரிசூல் ஆகிய ஐந்து ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் வெற்றி பெற்றன. இந்த ஏவுகணைகளுக்கு ஐந்து இயற்கை மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடைய பெயர்களை தேர்ந்தெடுத்து கலாம் வைத்தார்.

இதனால் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற பட்டத்துக்கும் சொந்தக்காரர் ஆனார் கலாம். 1998-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி மதியம் 3.45 மணி பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை அப்துல் கலாமின் தலைமையில் அமெரிக்காவின் செயற்கைக் கோள்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக நடத்தியது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் அப்போது நம் இந்தியா மீது திரும்பியது.

ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பல்நோக்கு புகலிடக் கட்டத்தில் இயங்கும் கலாம் கல்லூரி.

ஜூலை 25, 2002 அன்று இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரானார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும், பதவி முடிந்த பின்னரும் அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மாணவர்களையெல்லாம் கனவு காணுங்கள் என இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்த அவர், தனது சொந்த ஊரான ராமேசுவரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என தனது சுய சரிதையான அக்னி சிறகுகள் புத்தகத்தில் கூறியுள்ளார்.

அவரது வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறவில்லை. கலாம் மறைவுக்கு பின்னர் அவரது பெயரிலிலேயே ராமேசுவரத்தில் கல்லூரி ஒன்றை உருவாக்க தமிழக சட்டப்பேரவையின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2019-20ம் கல்வி ஆண்டில் ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பல்நோக்கு புகலிடக் கட்டிடத்தில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் ஆகிய 5 பாடங்கள் இந்தக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கல்லூரியில் ஆய்வகம் இல்லாததால் அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படாத நிலையில், நடப்பாண்டில் பிஎஸ்சி கணிதம் பாடமும் போதிய மாணவர் சேர்க்கை இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நான்கு பாடப்பிரிவுகளில் சுமார் 350 மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லூரி துவங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் ராமேசுவரத்தில் 8 ஏக்கர் நிலம் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டு 13.5 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த கல்லூரியில் கலாம் பயின்ற வானுர்தியியல், விண்வெளி அறிவியில், மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு பல்நோக்கு கல்லூரி வளாகமாக்கப்படும் என கல்லூரி துவங்கப்பட்ட போது தமிழக அரசு அறிவித்தது. அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக தொடங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

மேலும்