நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கம்: முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு கொடையளித்த தமிழக மன்னர்கள்!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கொடைகளை வழங்கி இருப்பதன் மூலம் அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

முஸ்லிம் மன்னர்கள், வணிகர், வணிகக் குழுவினர் இந்துக் கோயில்களுக்கு தானம் வழங்கியுள்ளதை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல் முஸ்லிம் பள்ளிவாசல், தர்காகக்களுக்கு பிற்காலப் பாண்டியர், நாயக்கர், சேதுபதிகள் உள்ளிட்ட தமிழக மன்னர்கள் தானம் வழங்கியுள்ளனர். அவ்வாறு முஸ்லிம் வழிபாட்டு தலங்களுக்கு நிலம் உள்ளிட்டவற்றை தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் தானம் கொடுத்துளளனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியது: “108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில், கி.பி.1247-ல் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்து (பெரியபட்டினம்) பிழார் பள்ளிக்கு, ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்களை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு உள்ளது. வைணவக் கோயிலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடை வழங்கிய கல்வெட்டு இருப்பதன் மூலம் அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

ராமேசுவரத்தில் உள்ள ஆபில் காபில் தர்கா

சேதுபதி மன்னர்கள் அளித்த கொடைகள்: சேதுபதி மன்னர்கள் முஸ்லிம்களுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக அதிக பள்ளிவாசல்களுக்கு மானியம் வழங்கியுள்ளனர். பூலாங்கால் பள்ளிவாசலுக்கு அவ்வூரின் சில பகுதிகளை கி.பி.1722-ல் முத்துவிஜய ரெகுநாத சேதுபதியும், கி.பி.1759-ல் செல்லமுத்து சேதுபதியும் அளித்துள்ளனர். குமாரமுத்து விசயரகுநாத சேதுபதி ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் அன்னதான தர்மத்துக்கு கி.பி.1734-ல் கிழவனேரி என்ற ஊரையும், முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி ஏர்வாடி தர்காவுக்கு கி.பி.1742-ல் மாயாகுளம் என்ற ஊரையும், ராமேசுவரம் ஆபில் காபில் தர்காவுக்கு கி.பி.1745-ல் புதுக்குளம் என்ற ஊரையும் தானமாகக் கொடுத்துள்ளனர். காரேந்தல் பள்ளிவாசலுக்கு திருச்சுழி என்ற ஊரை ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி தானமாக விட்டுள்ளார். அவர் மகன் ரணசிங்கத் தேவர் புதுக்கோட்டை மாவட்டம், காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவன்குளம் ஆகிய ஊர்களை தானமாக கொடுத்துள்ளார்.

காயல்பட்டினத்து கல்வெட்டுகள்: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் 5 உள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி.1190-1218) காயல்பட்டினம் கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தை தானமாகக் கொடுத்துள்ளான். இரண்டாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலத்தில், இவ்வூர் வியாபாரி வடவணிகன், கி.பி.1325-ல் கறுப்புடையார் பள்ளியில் சந்தியா தீப விளக்கு ஏற்ற இரண்டு அச்சு நாணயம் கொடுத்துள்ளான். அதே மன்னன் காலத்தில், கி.பி.1330-ல் இரட்டைக்குளம் பள்ளிவாசலுக்கு சுல்தான், உய்யவந்தான், திருவனந்தான் ஆகியோர் தானம் வழங்கியுள்ளனர்.

பெரியபட்டினம் பள்ளிவாசல் முன் மண்டபத்தில் வெட்டுப் போதிகைகளுடன் உள்ள சதுரத் தூண்கள்.

முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் காலத்தில் (1334-1367) காகிற்றூர் நாடாள்வான் அவ்வூர் கறுப்புடையார் சோனகப்பள்ளிக்குக் அவ்வூரில் உள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார். அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலத்தில் (கி.பி.1422-1463) துருக்க நயினாப்பள்ளியில் அர்த்தமண்டபம், இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க்குளம் அமைத்து மாத்தூர் என்ற ஊர் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கி.பி.1387-ல் உதயமார்த்தாண்டன் சோணாடுகொண்டான் பட்டினத்து ஜும்மாத்துப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் உதையமார்த்தாண்டப் பெரும்பள்ளி என பெயர் வைத்து இவ்வூர் துறைமுகத்து மகமை பணத்தை பள்ளிவாசலுக்கு வழங்கவும் செய்துள்ளதை வீரபாண்டியன்பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், அதிராம்பட்டினம் தர்காவுக்கு தஞ்சை செவ்வப்ப நாயக்கர் கி.பி.1531-ல் அவ்வூர் முழுவதையும் மானியமாகக் கொடுத்துள்ளார்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE