உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்க நேரத்துக்கு ஓடும் ரசிகர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். ஆனால், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நேரில் காண ஊர்விட்டு ஊரு செல்லும் தீவிர கால்பந்து ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். நாடு விட்டு நாடு செல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சைக்கிளிலேயே நாடு கடந்து செல்பவர்கள் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்று சொல்வதற்காகவே ஒருவர் இருக்கிறார். அவர், கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ரஷ்யாவுக்கு சைக்கிளிலேயே சென்ற கிளிஃபின் பிரான்சிஸ்.
இவர் கடந்த பிப்ரவரி 23 அன்று கேரளாவிலிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்போது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நெருங்கியிருப்பார்.
இஷ்டப்பட்டதைச் செய்ய முடிவெடுத்த பிறகு எதுவுமே கஷ்டமில்லை என்று நினைத்துத்தான் இதை பிரான்சிஸ் செய்திருக்கிறார் என்பது புரிகிறது. ஆனால், எப்படி இவ்வளவு தூரம் சென்றார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரை ஃபேஸ்புக்கில் பிடித்தோம். “இருங்க பாஸ்… உங்களுக்கு சென்னையில மாலை 4 மணி. ஆனா, இங்க இப்போதான் மதியம் 1:30 மணியாகுது. நானே மதியம் எங்க சாப்பிடறதுன்னு தெரியாம சைக்கிள் ஓட்டிக்கிட்டிருக்கேன். ரஷ்யாவோடப் புறநகர் பகுதியிங்கறதால இன்னும் 70 கிலோமீட்டராவது சைக்கிளை மிதிச்சாத்தான் ஏதாவது சாப்பாட்டுக் கடை தென்படும். இன்னும் 450 கிலோ மீட்டர் கடந்தா மாஸ்கோ. அதை நோக்கித்தான் போயிக்கிட்டிருக்கேன். சாப்பிட்டதும் வாட்ஸ்அப் கால் பண்றேன்” என்றார்.
நல்ல மனிதர்கள், புதிய நண்பர்கள்
அவருடனான இந்தக் குட்டி உரையாடலுக்குப் பிறகுதான் புரிந்தது. பிரான்சிஸ் செய்துகொண்டிருப்பது வெறும் சைக்கிள் பயணம் அல்ல, சாகசம் என்று. சாலை வழியாக நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றிச் சாதனை படைக்கும் ‘சைக்கிள் பிரியர்கள்’ அண்மைக்காலமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறது ரஷ்யா. அங்கு நடந்துகொண்டிருக்கும் ஃபிபா உலகக் கால்பந்து போட்டியைப் பார்க்க சாகச சைக்கிள் சவாரி செய்யும்போது பிரான்சிஸ் எதிர்கொள்ளும் சவால்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.
அடுத்த நாள்தான் நம்மை வாட்ஸ் அப் வழியே அழைத்தார் பிரான்சிஸ். “கடந்த நான்கு மாதங்களாக 5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய 28-வது பிறந்த நாளைகூட இந்தப் பயணத்தின்போதுதான் ஈரானின் மேஹம் கிராமத்து மக்களோடு கொண்டாடினேன். என்னிடம் சாதாரண சைக்கிள் இருந்தது. அதனால் தொலைதூரப் பயணத்துக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய சைக்கிளை துபாயில் வாங்கினேன்.
அங்கிருந்து ஈரானுக்குக் கப்பல் வழியாகச் சென்றேன். அங்கிருந்துதான் ரஷ்யாவை நோக்கி சைக்கிள் பயணத்தைத் தொடங்கினேன். இதற்கு இடையில் ஜார்ஜியா நாட்டுக்குள் நுழையும்போது அனுமதி மறுக்கப்பட்டதால் அஜர்பைஜான் வழியாக பயணப் பாதையை மாற்றினேன். அதன்பின்பு இன்றுவரை செல்லும் வழியெல்லாம் மக்கள் அன்போடு உண்ண உணவு, தங்க இடம் கொடுத்து ஆதரவு அளித்துவருகிறார்கள். நல்ல மனிதர்களையும் புதிய நண்பர்களையும் சம்பாதித்தபடி பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
வழிநடத்தும் பேரார்வம்
‘இப்படி ஒரு சாகசப் பயணத்துக்கு அதிகம் செலவாகுமே, பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமே, அப்படியிருக்க இதை மேற்கொள்ள உங்களை உந்தித்தள்ளியது எது?’ என்று கேட்டதற்கு, “எர்ணாகுளத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கோச்சிங் சென்டரில் கணிதம் பயிற்றுவிக்கும் பகுதி நேர ஆசிரியர் நான். அப்பப்போ வேலை பார்ப்பேன், அதில் கிடைக்கும் பணத்தில் நாடு கடந்து பயணிக்கப் புறப்பட்டுவிடுவேன். இந்தமாதிரி இரண்டு வருடங்களுக்கு முன்னால் ‘backpacking’-ல் போகும் வழியெல்லாம் ‘லிஃப்ட்’ கேட்டே தெற்காசிய நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியாவரைக்கும் பயணித்தேன்.
அந்தப் பயணத்தின்போது சில சைக்கிள் ஓட்டுநர்களைச் சந்தித்து உத்வேகம் பெற்றேன். பயணம் முடிந்து எர்ணாகுளம் திரும்பியதும் சைக்கிள் வாங்கினேன். நான் வகுப்பெடுக்கும் கோச்சிங் சென்டருக்கு பைக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து என்னுடைய மாணவர்களும் ஊக்கம் பெற்று சைக்கிளில் வலம்வரத் தொடங்கினார்கள். கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்கான தகவல் வெளியானதும் உலக சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஒரு நாள் திடீரெனத் தோன்றியது. எட்டு மாதங்களாக ஒன்றரை லட்சம் ரூபாய் சேமித்து இந்தப் பயணத்தைத் தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் பாலைவனப் பகுதிகளிலும் செங்குத்தான மலைப் பகுதிகளிலும் சைக்கிள் ஓட்டுவது சவாலாக இருந்தது.Cyclingright
ஆனால், எனக்குள் இருக்கும் பேரார்வம் என்னை வழி நடத்துகிறது. அதை விடவும் குறுகிய வட்டத்தில் இருந்து வெளி உலகுக்குள் அடியெடுத்துவைக்கும்போது கிடைக்கும் பிரமிப்பு மென்மேலும் என் பயணத்தை உந்தித் தள்ளுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் துரிதமாக சைக்கிளை மிதித்தால் 26-ம் தேதி அன்று மாஸ்கோவைச் சென்றடைவேன். கால்பந்து வீரர் மெஸ்ஸியைச் சந்தித்து அவரிடம் என்னுடைய சைக்கிளில் ஒரு ‘ஆட்டோகிராஃப்’ வாங்கணும். அதுதான் இப்போதைய ஆசை” என்கிறார்.
இந்த சைக்கிள் ‘சாகசப்’ பிரியரிடம் இருப்பதோ 26-ம் தேதி மாஸ்கோவில் உலகக் கால்பந்துப் போட்டியைக் காண்பதற்கான 100 டாலர் மதிப்புமிக்க ஒரே ஒரு டிக்கெட்தான். ஆனால், அதை நோக்கிய பயணத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் விலைமதிப்பற்றவை.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago