இலகு ரக தேஜஸ் போர் விமானத்தின் முதல் பெண் பைலட் மோகனா சிங்

By செய்திப்பிரிவு

ஜோத்பூர்: இந்திய விமானப்படை பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும் பெண்களுக்கு அதிகாரம் வழங்கவும் உறுதி பூண்டுள்ளது. இதன் அடிப்படையில், போர் விமான படைப் பிரிவில் கடந்த 2016-ம்ஆண்டு முதல் முறையாக மோகனாசிங் ஜிதர்வால் (32), பாவனா காந்த் மற்றும் அவனி சதுர்வேதி ஆகிய 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டனர். இப்போது போர் விமான பைலட்களாக 20 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், படைப்பிரிவு தலைவரான மோகனா சிங், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் போர் விமானத்தின் முதல் பெண் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், தேஜஸ் போர் விமானங்களை இயக்கும் எலைட் 18 ‘பிளையிங் புல்லட்’ படைப்பிரிவில் இவர் இணைய உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி என்ற பெயரில் இரண்டாம் கட்ட பன்னாட்டு விமானப்படை போர் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெற்றது. இதில் மோகனா சிங்கும் பங்கேற்றார்.

இந்த பயிற்சியின்போது, ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங், லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி மற்றும் வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகிய முப்படைகளின் துணைத் தளபதிகளுடன் இலகுரக் தேஜஸ் போர் விமானத்தில் மோகனா பயணித்தார். அப்போது, ராணுவம் மற்றும் கடற்படை துணைத்தளபதிகளுக்கு விமானத்தின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். மோகனா சிங் இதுவரை மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கி வந்தார். இனி தேஜஸ் போர் விமானத்தை இயக்குவார். இவர், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் நாளியார் விமானப் படை தளத்தில் இலகு ரக போர் விமானப் படைப் பிரிவில் சமீபத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE