பன்னீர், காளான், காலிபிளவர்... கரூர் பிரியாணி கடையில் புரட்டாசி மாத ‘ஸ்பெஷல்’ மெனு!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் உள்ள சிறிய அளவிலான உணவு நிறுவனம் ஒன்று புரட்டாசி மாதத்தையொட்டி புரட்டாசி மாதம் ஸ்பெஷல் எனக்கூறி தனது கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பே பன்னீர், காளான் பிரியாணிகள், காலிபிளவர், காளான் ரைஸ், நூடுல்ஸ், காலிபிளவர் சில்லி ஆகிய சைவ உணவு மெனுக்களை வைத்துள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு அசைவம் என்பது கிராமத்தில் உள்ளவர்களுக்கு கிடாவெட்டு அல்லது விருந்தினர்கள் வருகையின்போது கோழி அடித்து குழம்பு வைப்பது என்றும், நகரங்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ஒரு முறை ஹோட்டலில் அசைவம் எனவும், வீட்டில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வாரத்தில் ஒரு நாள் அசைவம் சாப்பிடுவது என்பது அதிகபட்சமாக இருந்தது. ஆனால், தற்போது நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் நினைத்தால் வீட்டில் அசைவம், அல்லது விரும்பினால் ஹோட்டல்களிலும் அசைவம் என்பது சர்வசாதாரணமாகி விட்டது.

அசைவம் என்றால் பிரியாணி, சிக்கன் மற்றும் முட்டை ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், சில்லி வகைகள் இடம் பெறுகின்றன. புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் (செப்.17 முதல் அக்.17) வரை ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், நண்டு, இறால் ஆகியவற்றின் விற்பனை, ஹோட்டல்களில் அசைவ உணவுகள் விற்பனை குறைந்துவிடும்.

இதனையொட்டி, கரூரில் உள்ள சிறிய அளவிலான உணவு நிறுவனம் ஒன்று புரட்டாசி மாதத்தையொட்டி புரட்டாசி மாதம் ஸ்பெஷல் எனக்கூறி தனது கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பே பன்னீர், காளான் பிரியாணிகள், காலிபிளவர், காளான் ரைஸ், நூடுல்ஸ், காலிபிளவர் சில்லி ஆகிய சைவ உணவு மெனுக்களை வைத்துள்ளது. கரூரில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளிலே ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகள் விற்பனை நடைபெறும் நிலையில் நாளை (செப். 17) புரட்டாசி மாதம் பிறப்பதால் கரூரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகளில் இன்று (செப்.16) அதிகளவில் மக்கள் குவிந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE