“தமிழ் மருத்துவத்தின் வாழ்வியல் தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும்” - மருத்துவர் கு.சிவராமன்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: “தமிழ் மருத்துவத்தின் வாழ்வியல் தத்துவங்களை கடைபிடித்தால் நோய்க்கூறுகளிலிருந்து விடுபடலாம்” என சித்த மருத்துவர் கு.சிவராமன் மதுரையில் இன்று பேசினார்.

மதுரையில் புத்தகத் திருவிழாவில் 5-ம் நாளான இன்று மாலையில் நடந்த கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சர்க்கரை நோயும், புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. சிறுவயதிலிருந்து உணவுகளை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆறுசுவையுள்ள உணவை சாப்பிட வேண்டும். இனிப்பு சுவை திசுவை வளர்க்கும் என்பதால் அவசியம்.

அது இனிப்பு என்றால் வெள்ளை சர்க்கரை என்று மட்டும் நினைக்க்கூடாது. இனிப்புக்கு பழங்களை எடுத்துக்கொள்ளலாம். வாதம், பித்தம், கபத்தை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவு பற்றிய ஒட்டுமொத்த புரிதல் வேண்டும். உடல்வாகுக்கு தகுந்தவாறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுகள் பற்றிய புரிதல் இருந்தால் நோய்க்கூறுகளிலிருந்து விடுபடலாம். இனிப்பு உடம்பை வளர்க்கும்.

பிறகு ஏன் கசப்பு, துவர்ப்பை சாப்பிடச் சொல்கிறோம் என்றால், கசப்பும், துவர்ப்பில்தான் மருத்துவக்குணம் உள்ளது. இதில் ஏராளமான தாவரவியல் நொதிக்கூறுகள் உள்ளன. எல்லாப் பழங்களையும் விட சிறந்த பழம் நெல்லிக்காய். ஒருநாள் முழுக்கத் தேவையான வைட்டமின்சி ஒரு நெல்லிக்காயில் கிடைக்கும். இதில் துவர்ப்பு, இனிப்பு சுவைகள் உள்ளது. ஆறுசுவையுள்ள கடுக்காய் சாப்பிட்டால் நோய் போக்கும். காலையில் இஞ்சி, மாலையில் நடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடலாம். வீட்டில் எல்லோருக்கும் ஒரே உணவாக இருக்க வேண்டும்.

மதிய உணவாக சோறு குறைவாக இருக்கவேண்டும். கீரைகள், காய்கறிகள் அதிகமாக இருக்க வேண்டும். இரவு உணவு மிகக்குறைவாக இருக்க வேண்டும். அடுப்பங்கரையில் கூடுதலாக செலவழிக்கும் இருபது நிமிடங்கள், ஒருவரின் 20 ஆண்டுகள் ஆயுளை அதிகரிக்கும். தமிழ் மருத்துவத்தில் ஏராளமாக பொதிந்து கிடக்கிறது. அவற்றின் மருத்துவ கூறுகளை, வாழ்வியல் தத்துவங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். கடைபிடித்தால் நோய்க்கூறிகளிலிருந்து விடுபடலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE