விழுப்புரம் அருகே 5,000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டெடுப்பு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முட்டத்தூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் முட்டத்தூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி கண்டறியப்பட்டது.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது: “முட்டத்தூர் – கல்யாணம்பூண்டி எல்லைக்கு உட்பட்ட மலையடிவாரத்தில் கள ஆய்வு செய்தோம். அப்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி கண்டறியப்பட்டது. இக்கருவி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். வேட்டைக்கால மக்கள் வேளாண் சமூகத்துக்கு மாறியபோது இதுபோன்ற பட்டைத் தீட்டப்பட்ட வழுவழுப்பான கற் கோடரிகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

விருப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, உடையாநத்தம், தி.தேவனூர், பாக்கம் மலைப்பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இங்கும் அதற்கான தடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள எழுத்துப் பாறையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வெண் சாந்து ஓவியங்களை நாங்கள் கண்டறிந்தோம்.

மேலும், முட்டத்தூர் – கல்யாணம்பூண்டி எல்லையில் உள்ள இந்தப் பகுதி முழுவதும் பண்டைய பானை ஓடுகள் காணப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர். ஊர் இருந்து மறைந்துள்ளது. தற்போது புதிய கற்காலக் கருவி கண்டறியப்பட்டிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்பரப்பு ஆய்வு மற்றும் அகழாய்வு நடத்த வேண்டும். அப்போது மேலும் பல தடயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தொல்லியல் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE