‘வீடுதோறும் நூலகம்’ விருதுக்கு விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து சிறப்பாக செயல்படுவோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதன்படி கோவை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்த சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை மாவட்ட ஆட்சியரால் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

தங்கள் இல்லத்தில் நூலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது மற்றும் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நூலக அலுவலர், 1232, பெரியகடை வீதி, கோவை 641001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் dlocbe1@gmail.com என்ற மின்ஞ்சல் முகவரி அல்லது அருகில் உள்ள பொதுநூலக இயக்கக நூலகத்திலும் நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE