வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்

By செய்திப்பிரிவு

கல்பேட்டா: வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு பிறகு வெள்ளர்மலை, முண்டக்கை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் இன்று (செப்.2) பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

திங்கட்கிழமை அன்று மேப்பாடி பகுதியில் அவர்களுக்கான வகுப்பை மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தொடங்கி வைத்தார். ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவில் வெள்ளர்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு பள்ளிகள் நிலச்சரிவில் கடும் சேதம் அடைந்தன.

நிலச்சரிவு பேரழிவினால் வெள்ளர்மலை பள்ளியில் படித்த 42 மாணவர்கள் மற்றும் முண்டக்கை பள்ளியில் படித்த 11 மாணவர்கள் என சுமார் 53 மாணவர்கள் காணாமல் அல்லது உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் சுமார் ஒரு மாத காலத்துக்கு பிறகு உயிரோடு உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் மேப்பாடியில் தொடங்கி உள்ளது.

வெள்ளர்மலை பள்ளியில் படித்த மாணவர்கள் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், முண்டக்கை பள்ளியில் படித்த மாணவர்கள் மேப்பாடி ஏபிஜே கூடத்திலும் பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை சிறப்பு பள்ளியில் வரவேற்கும் விதமாக துவக்க விழா நடத்தப்பட்டது. கல்வி கற்க முறையான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் கேரள மாநில அரசு இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE