பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் - கோவையில் தயாரிப்பு, விற்பனை பணிகள் தீவிரம்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதை தொடர்ந்து, கோவையில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்னரே பல்வேறு அளவு, வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணி தொடங்கி விடும். நடப்பாண்டு செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது. கோவையில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் என சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் மற்றும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுர்த்தி நெருங்குவதைத் தொடர்ந்து தயாரிப்பு, விற்பனை தீவிரமடைந்துள்ளது.

விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து, தெலுங்குபாளையத்தில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பாளர் சக்திவேல் முருகன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: “சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூல் உள்ளிட்ட கலவைகளை கலந்து, 2 அடி முதல் 10 அடி வரை பல்வேறு உயர மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. முன்பு 12 அடி உயர சிலைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது அனுமதி இல்லாததால் அதிகபட்சமாக 10 அடி உயரம் வரை மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள்: எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போல், டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர் அமர்ந்திருப்பது போல், 2 மாடுகளை கொண்டு, ஏர் கலப்பையுடன் உழவுப் பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம் போல், நந்தி, மான், மயில், குதிரை போன்ற வடிவ வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல், சிவன் சிலையை கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருப்பது போல் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டு புதிய வரவுகளாக ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் 10 அடி உயரம், 8 அடி அகலத்தில் குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல் விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலை வடிவங்கள் புதிய வரவாகும்.

மூலப்பொருட்களின் விலை உயர்வால் விநாயகர் சிலை தயாரிப்புக்கான செலவு உயர்ந்துள்ளதால், கடந்தாண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.அதிக உயரம் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1,500 வரை உயர்ந்துள்ளது. நடப்பாண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி நெருங்க நெருங்க மேலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

விலை விவரம்: நடப்பாண்டு 2 அடி சிலை ரூ.ஆயிரம் முதல், 3 அடி சிலை ரூ.2,500 முதல், 4 அடி சிலை ரூ.4 ஆயிரம் முதல், 5 அடி சிலை ரூ.6,500 முதல், 7 அடி சிலை ரூ.11 ஆயிரம் முதல், 8 அடி சிலை ரூ.8 ஆ யிரம் முதல், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம் முதல், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது. வடிவங்கள், சிலையின் உயர, அகலங்களுக்கு ஏற்ப விலைகளில் மாற்றம் இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE