வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல்லில் மொய்விருந்து: திரளான மக்கள் பங்கேற்று நிதியளிப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், திண்டுக்கல்லில் உள்ள உணவகத்தில் மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் உயிர்பிழைத்த மக்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுவருகிறது. இதில் வித்தியாசமான நிகழ்ச்சியாக திண்டுக்கல்லில் தனியார் உணவகத்தில் (முஜிப் பிரியாணி) மொய் விருந்து நிகழ்ச்சி 8 நடைபெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான், வயநாடு மக்களுக்கு தான் மட்டும் உதவினால் போதாது திண்டுக்கல் மக்களுடன் கைகோர்த்து உதவவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மொய்விருந்தை நடத்துவதாக அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகம் பரவியது.

உணவுகளை உட்கொண்டுவிட்டு (உண்ட உணவிற்கு பில் தரப்படமாட்டாது) தாங்கள் விரும்பிய தொகையை வழங்கலாம் என்றும் இதில் வசூலாகும் தொகையை கேரளா மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் உணவு தயாரிப்புக்கான செலவு இதில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, வசூலாகும் தொகை முழுவதும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் கடை உரிமையாளர் முஜிபுர்ரகுமான் தெரிவித்திருந்தார்.

திண்டுக்கல்லில் வயநாடு மக்களுக்கு உதவும்விதமாக நிதிதிரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொய்விருந்தில் பங்கேற்ற மக்கள்.

இதையடுத்து திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் உள்ள கடை முன்பு மொய்விருந்தில் ஆர்வமுடன் பங்கேற்க மக்கள் திரண்டனர். பலரும் சாப்பிட்டுவிட்டு சாப்பிட்டதற்கு உண்டான தொகையை விட அதிக தொகையை இலைக்கு அடியில் வைத்துச்சென்றனர். சிலர் செக் ஆகவும் வழங்கினர். குறைந்த தொகை கொண்டு வந்தவர்கள் உண்டியலில் தொகையை செலுத்தினர்.

இதுகுறித்து ஏற்பாட்டாளர் முஜிபுர்ரகுமான் கூறுகையில், “வயநாடு மக்களுக்கு நான் ரூ.50 ஆயிரமோ, ஒரு லட்சமோ தனியாக நிவாரணமாக தந்து உதவலாம். ஆனால் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து பங்களிப்பை செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் மக்களால் மறந்துபோன பண்டைய முறையான மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். இதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். மொய்விருந்தில் வந்த தொகை அனைத்தும் வயநாடு மக்களுக்கு நிவாரணத் தொகையாக சென்றடையும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE