வயநாடு சிறுமியின் சிறுகதை உண்மையானது

By செய்திப்பிரிவு

வயநாடு: வயநாட்டின் சூரல்மலை பகுதியில் உள்ள வெலர்மலா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி லயா என்பவர் கடந்தாண்டு பள்ளியின் இதழுக்காக சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அதில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மூழ்கிய சிறுமி பறவையாக திரும்பி வந்து, நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்து கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கதை எழுதியிருந்தார்.

அதில் அந்தப் பறவை கூறுகையில், ‘‘குழந்தைகளே இங்கிருந்து தப்பிச் செல்லுங்கள். இங்கு ஆபத்து நேரிடவுள்ளது’’ என கூறியது. உடனே குழந்தைகள் ஓடிச் சென்று மலையை திரும்பி பார்த்தபோது, அங்கு திடீரெனவெள்ளம் வருவதை பார்த்தனர். அதன்பின் அந்தப் பறவை ஒரு அழகிய பெண்ணாக மாறுவதை அவர்கள் பார்த்தனர். தான் சந்தித்த நிலைமையை அவர்கள் சந்திக்க வேண்டாம் என எச்சரிப்பதற்காக அந்தப் பெண் திரும்பி வந்தார் என கதையில் கூறப்பட்டிருந்தது.

அந்த கதையில் வரும் இயற்கைச் சீற்றம் போல் தற்போது வெலர்மலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஊரையே தரைமட்டமாக்கிவிட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தக் கதையை எழுதிய மாணவி லயாவின் தந்தை லெனினும் உயிரிழந்தார். வெலர்மலாவில் உள்ளஅரசுப் பள்ளியில் படித்த 497 மாணவர்களில் 32 பேர் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளை இழந்துள்ளனர்.

ஆசிரியர்கள் தப்பினர்: சூரல்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி ஆற்றங்கரையோரம் உள்ளது. இந்தப் பள்ளி தற்போது நிலச்சரிவில் சிக்கி மோசமாக சேதம் அடைந்துள்ளது. இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் உன்னி கிருஷ்ணன், மற்றும் 4 ஆசிரியர்கள் நிலச்சரிவில் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இவர்கள் பள்ளி அருகே வாடகைவீடுகளில் தங்கியுள்ளனர். வீட்டுக்கு பின் மிகப் உயரமான மலைப் பகுதி உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு இங்கு கனமழை பெய்தபோது, நிலச்சரிவு ஏற்படும் என அஞ்சி இவர்கள்பள்ளியில் தங்குவதற்கு முடிவு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமைதான் இவர்கள் வீடு திரும்பினர்.

ஆனால், அவர்கள் இவர்கள் தங்கியிருந்த வீடு அருகே நிலச்சரிவு ஏற்படவில்லை. ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவர்களது பள்ளி நிலச்சரிவில் பயங்கர சேதம் அடைந்தது.‘‘இந்தப் பள்ளியில் நாங்கள் தங்கியிருந்தால், நாங்கள் உயிரிழந்திருப்போம்’’ என தலைமையாசிரியர் உன்னி கிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE