13 லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் தீப்பெட்டித் தொழில் பாதுகாக்கப்படுமா?

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: திப்பெட்டி ஆலைகளுக்கு வாழ் நாள் உரிமம் வழங்க வேண்டும், லைட்டர்களுக்கு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பரமசிவன் தலைமையிலான நிர்வாகிகள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோரை சந்தித்து மனு வழங்கினர்.

மனுவில் கூறியிருப்பதாவது: தீப்பெட்டித் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரைடு, சல்பர் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பொட்டாசியம் குளோரேடு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வாழ்நாள் உரிமம் வழங்கப்படுகிறது. அவர்களிடம் சிறிதளவு வாங்கிபயன்படுத்தும் எங்களுக்கு நிரந்தர உரிமம் வழங்கப்படாமல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க கூறுகின்றனர். எனவே, தீப்பெட்டி ஆலைகளுக்கு வாழ்நாள் உரிமம் வழங்க வேண்டும்.

தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் சிறு விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் நேரிட்டால் உரிமையாளர்களை கைது செய்து, பிணையில் வர முடியாத வழக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாற்றி, காவல் நிலையத்தில் பிணையில் வெளிவரும் அளவில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கான தொழில்: இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவன் கூறியதாவது: சீனாவில் இருந்து பிளாஸ்டிக் லைட்டர்கள் வருகின்றன. ஒரு லைட்டர் விற்பனை செய்தால், 20 தீப்பெட்டிகளின் விற்பனை பாதிக்கும். இதுகுறித்து மத்திய,மாநில அரசுகளிடம் முறையிட்டோம். இதன்அடிப்படையில், இந்தியாவில் ரூ.20-க்குகுறைந்த லைட்டர்கள் இறக்குமதி செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

ஆனால், லைட்டர்கள் இறக்குமதி செய்பவர்கள், சீனாவில் இருந்து நேபாளம் வழியாக திருட்டுத்தனமாக கொண்டு வருகின்றனர். அதேபோல், அங்கிருந்து லைட்டர்களின் உதிரிப்பாகங்களைக் கொண்டு வந்து, இங்கு வைத்து பொருத்தி இந்தியா தயாரிப்பு என விற்பனை செய்கின்றனர். இதனால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கிறது. எனவே பிளாஸ்டிக் லைட்டர்கள் வாங்க, விற்க, இருப்பு வைக்க தடை விதிக்க வேண்டும்.

ரூ.600 கோடி அந்நிய செலவாணி: தீப்பெட்டித் தொழில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அந்திய செலவாணி ஈட்டித்தருகிறது. இது 100 ஆண்டுகளை கடந்த மண் சார்ந்த தொழில். இந்த தொழிலில் நேரடியாக 5 லட்சம் பேர், மறைமுகமாக 8 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். இப்படிப்பட்ட வளமான தொழிலை பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பாண்டில் மட்டும் 10 தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டித் தொழில் முடங்கிவிடும் என எண்ணி, வங்கிகளில் இருந்து ஒரு மாத தவணை பாக்கி வைக்க விடாத அளவுக்கு எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மூலப்பொருள் விற்பனையாளர்களும், தீப்பெட்டித் தொழிலுக்கு கடன் கொடுத்தால் வசூலாகாது என கடன் கொடுப்பதில்லை. எனவே, தீப்பெட்டித் தொழிலைக் காக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE