ஆரல்வாய்மொழி கோட்டை, மண்டபங்களை வரலாற்று சின்னங்களாக மாற்ற திட்டம்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்போதைய அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களை உள்ளடக்கிய நாஞ்சில் நாட்டுப்பகுதிகளை, கி.பி 10-ம் நூற்றாண்டு வரையிலும் ஆய் வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். பாண்டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் இடைப்பட்ட நாடாக ஆய் நாடு இருந்து வந்தது. நீர் மற்றும் நிலவளம் கொண்ட இப்பகுதி அண்டை நாட்டினரைக் கவர்ந்தது. இதன் காரணமாக சங்க காலம் முதல் 18-ம்நூற்றாண்டின் தொடக்கம் வரை நாஞ்சில் நாட்டின் மீது தொடர்ந்து படையெடுப்புகளும், கொள்ளைக் கும்பல்களின் அட்டகாசங்களும் நடந்தன.

எனவே, ஆய் நாட்டின் நுழைவு வாயிலான ஆரல்வாய்மொழிப் பாதையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஆய் மன்னர்களுக்கு ஏற்பட்டது. எனவே, ஆரல்வாய்மொழியின் இரு பக்கங்களிலும் உள்ள மலைகளை இணைத்து, இங்கிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்தில் உள்ள கடுக்கரை வரை கோட்டைச் சுவர் எழுப்பபட்டது. இதற்கு ஆரல்வாய்மொழி கரைக்கோட்டை என்று பெயர். பாண்டிய நாட்டு படையெடுப்பில் இருந்து ஆயி நாட்டையும், சேர நாட்டையும் பாதுகாக்கும் அரணாக அமைந்ததால் ஆய் மன்னர்களும், சேர வம்ச மன்னர்களும் இக்கோட்டையைப் புனரமைத்து பாதுகாத்து வந்தனர்.

ஆரம்பத்தில் மண் சுதையால் அமைந்த இக்கோட்டையை, ஆய் மன்னர் கருணானந்தகன் (கி.பி. 851 - 885) புனரமைத்தார். கி.பி. 1729-ல்திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா ஆட்சியில், ஆரல்வாய்மொழி கோட்டை கற்களைக் கொண்டு மதில் சுவர் கோட்டையாக மாற்றி, குமரி கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டது. இக்கோட்டையின் காரணமாக ஆய் நாடு பலமாக பாதுகாக்கப்பட்டது.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நினைவு சின்னங்களாக நிற்கும்
மன்னர்கால கோட்டை மண்டபங்கள் .

காலப்போக்கில் அடுத்தடுத்த படையெடுப்புகளில் இக்கோட்டைச் சுவர் முழுமையாக இடிந்து போனது. ஒரு சில இடங்களில் இச்சுவர் எஞ்சிநிற்கிறது. மேலும் கோட்டை நுழைவுவாயிலில் இருந்த ஆயுதம் சேமிப்பறை, வரி வசூல் செய்யுமிடம், படை வீரர்கள் தங்குமிடம் ஆகியவை, இன்றளவும் வரலாற்று சாட்சிகளாக எஞ்சி நிற்கின்றன. இக்கட்டிடங்கள், கடந்த 1970-ம் ஆண்டில் ஆரல்வாய் மொழியில் அமைந்த அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வழங்கப்பட்டு, கல்லூரியின் நூலகம், ஆய்வகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு கல்லூரி இடமாற்றப்பட்டுள்ளது. இதனால், பழங்கால கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளன.

இக்கோட்டைக் கட்டிடம் சிறந்தவரலாற்று எச்சமாகும். இதனைப் பாதுகாத்து, வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்று நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். ஆகவே, இதனை மீட்டெடுத்து அருங்காட்சியகமாக மாற்றி அரசு பராமரித்திடவும், சுற்றுலா மையமாக மாற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி வந்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரிகள், மண்டபத்தை வரலாற்று நினைவிடமாக காட்சிப்படுத்த முடிவுஎடுத்துள்ளனர். அங்கு ஆரல்வாய்மொழி தொடர்பான வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தவும் உள்ளனர். வாழும் தலைமுறையும், வரும் தலைமுறையும், வரலாற்றை தெரிந்து கொள்ள தொல்லியல் துறை மேற்கொள்ளும் இப்பணிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE