ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொசப்பேட்டையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எல்ஐசி பயிற்சி மைய முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014-ம் ஆண்டு மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையை குடும்பத்தினர் தொடங்கினர்.

இந்நிலையில் மருத்துவர் சூர்யாவின் பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை கொசப்பேட்டையில் உள்ள ரெயின்போ ஹோம்ஸ் இல்லத்தில் கேக் வெட்டி அங்கு தங்கியிருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்படி அவர்களுக்கு சோப்பு, டூத் பேஸ்ட், டூத் பிரஷ், தேங்காய் எண்ணெய், உடுத்த துணிகள் போன்ற அன்றாட உபயோகப் பொருட்களும் இல்லத்துக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், பினாயில் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. பின்னர் குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மேலும் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வும் மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எல்ஐசி பயிற்சி மைய முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, அருண் ரெயின்போ ஹோம்ஸ் முதன்மை நிர்வாகி லட்சுமி பிரியா, இந்திரா, எல்ஐசி வளர்ச்சி அதிகாரி அய்யாசாமி, சமூக செயற்பாட்டளர்கள் வாசுகிநாதன், முத்துக்குமார், பூர்ணசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE