கல்லூரணி முதல் தருவைகுளம் வரை - குவிந்திருக்கும் வரலாற்று தொன்மங்கள்!

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கல்லூரணி முதல் தருவைகுளம் வரையிலான பகுதிகளில் நிறைந்து காணப்படும் வரலாற்று தொன்மங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கல்லூரணி முதல் தருவைகுளம் வரையிலான பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதில், பட்டினமருதூர் மற்றும் வேப்பலோடை கண்மாய்களில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான குமிழிதூம்பை கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார். மேலும், பட்டினமருதூருக்கு அடுத்த ‘கல்மேடு’ கிராமத்திலுள்ள அணைக்கட்டினை பலப்படுத்தும் பணியின் போது தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில்7 அடிக்கு கீழே காணப்படும் 200 அடி நீளம் கொண்ட சிற்பங்களோடு கூடிய கல் கட்டுமான மதில் சுவற்றினை கண்டறிந்து, ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து தற்போது தொல்லியல் துறை ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராபர்ட் ஓரம் 18-ம் நூற்றாண்டில் (1728—1801) கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு மற்றும் வரைபட அறிஞராக இருந்தார். இவர் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்துக்காக கி.பி.1775-ல் அப்போதைய நிலப்பரப்புகளையும், நதி நீர் ஆதாரங்களையும் தெளிவாக விளக்கும் வகையில் கோதாவரி-கன்னியாகுமரி என்ற தலைப்பில் வரைபடம் வரைந்துள்ளார்.

தொடர்ந்து முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பழைய ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையில் கி.பி.1778-ல் கொள்ளிடம் - கன்னியாகுமரி என்ற தலைப்பில் ஓர் ஒப்பீடு வரைபடம் வரைந்துள்ளார். 3 ஆண்டு இடைவெளியில் அவர் வரைந்த வரைபடங்களை பார்த்தால், பெரியபட்டினம் - கீழக்கரை- கோரைக்குட்டம் பகுதி, கீழபட்டினம் (பட்டினமருதூர்) - கல்லூரணி, காயல்பட்டினம் – சாகுபுரம் ஆகிய இடங்களில் துறைமுகங்கள் இருந்ததை குறிப்பிடுகிறது.

இந்த மூன்று துறைமுகங்களையும் ஆதாரங்களாக கொண்டு சிறந்த வணிக பிராந்தியமாக விளங்கிய பகுதியே ‘கொற்கை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு சான்றாக அக்கா சாலை ‘ஸ்ரீ ஈஸ்வரமுடைய நாயனார்’ ஆலய கல்வெட்டில் ‘கொல்கை மதுரோதைய நல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 3 பகுதியிலும் முறையே வைகை, வைப்பார், பொருநை (தாமிரபரணி) நதிகளின் முகத்துவாரத்தில் சாவி காடி (Dry Dock Place) போன்ற பெரிய நீர்த்தேக்க நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய சாவி போன்ற அமைப்பானது கடல் கலன்களில் (நாவாய்களில்) சரக்குகளை எளிதாக கையாள ஏதுவாக செயற்கையாக உருவாக்கப்பட்ட அமைப்புகளாக தென்படுகின்றன.

இவை பாண்டிய மன்னர்களின் ஆட்சி, கலாச்சார மேன்மை, வணிகநுட்ப மற்றும் மதிநுட்ப திறமைகளை பற்றிய கி.பி.1292-ல் இப்பகுதிக்கு வந்திருந்த மார்க்கபோலோவின் கூற்றுகளின் உண்மைத் தன்மைக்கு சான்றுகளாக உள்ளன. தற்போதைய பூகோள அமைப்பின் படி பார்த்தாலும், கி.பி.1775-ம் ஆண்டு வரைபடத்தின் படி பார்த்தாலும் இத்தகைய சாவி போன்ற அமைப்புகளான கோரைக்குட்டம், கல்லூரணி, சாகுபுரம் போன்ற துறைமுக பகுதிகள் தற்போது சமதள பூமிகளாகிவிட்டன.

குறிப்பாக கல்லூரணிக்கு தெற்கே தற்போதைய தருவைகுளம் பகுதியில் சங்கமித்த மலட்டாறு தற்போது இல்லை. இந்த மலட்டாறின் தடமானது தற்போதைய கங்கைகொண்டானில் திரும்பி தெற்காக சென்று சீவலப்பேரியில் தாமிரபரணியோடு சங்கமம் ஆகியிருக்கிறது. இத்தகைய நிலப்பரப்புகளின் மாற்றம் 14-15-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இவற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி - சாகுபுரம் கடற்பகுதியில் முனைவர் த.தவசிமுத்து மேற்கொண்ட ஆய்வில், தொன்மையான சுவாமி சிலைகளும், வரலாற்று பொக்கிஷங்களும் கண்டறியப்பட்டன. ஆனால் தொடர் ஆய்வுகள் நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. தற்போதைய பட்டினமருதூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்ற வரலாற்று சிதைவுகள், சின்னங்கள் அடிப்படையில் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் தொடர்ந்து பல கட்டங்களாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலுள்ள ஸ்ரீ பக்தலிங்கம் சன்னதிக்கு நேர் எதிரேயுள்ள பெரிய கல்தூணில் வடிவமைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு அடி உயரமுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சிற்பத்தின் அமைப்பினை, 90 சதவீத ஒத்த அமைப்பில் பட்டினமருதூர் ஸ்ரீ வடக்குவாச் செல்லிஅம்மன் ஆலயத்தில் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கும், இரு கைகளும் இல்லாமல் பல துண்டுகளாக சிதைவுற்ற நிலையிலுள்ள மூலவர் அம்மனின் தெய்வத்திருமேனி உள்ளது.

இதன் உண்மை வரலாற்றினை ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வரலாற்று தொன்மங்கள் குவிந்து காணப்படும் இந்த பகுதிகளை முழுமையாக, ஒற்றுமையாக ஆராய்ந்தால் தமிழர்களின் மிக மிக தொன்மையான கபாடபுரம்/ மூதூர் தொடர்பான சான்றுகள் நிச்சயமாக கிடைக்கப்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE