கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்வில் நல்ல மாற்றம் வருமா?

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பில் 57 பேர் இறந்தனர். அச்சம்பவத் துக்குப் பின் மிகப்பெரிய சம்பவமாக தற்போதைய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளிதழ்கள், செய்தித் தொலைக் காட்சிகள், சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அப்போது அதில் முக்கியமாக மாவட்டத்தை உள்ளடக்கிய கல்வராயன்மலையில் காய்ச் சப்படும் கள்ளச்சாராயமே உயிரிழப்புக்கு காரணியாக விளங்கியதாக மேற்கோள் காட்டி விவாதித்தனர்.

ஆனால், இதற்கு மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி, கல்வராயன்மலை வாழ் மக்களின் சூழல் குறித்து எடுத்துரைத்த கருத்துக்களின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு குறித்து தாமக முன்வந்து விசாரணை வழக்குப் பதிவு செய்து பல்வேறு பயனுள்ள கருத்துகளை தெரிவித்து வருகிறது.

மேலும் கடந்த புதன்கிழமை இது குறித்த விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அல்லது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி துறை சார்ந்த அமைச்சருடன் கல்வராயன் மலைக்குச் சென்று பார்வையிட வேண்டும் என்றும், அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில், கல்வராயன்மலைப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் நடத்தியுள்ளது. இக்கூட்டத்தில் பேசியவர்கள், கல்வராயன் மலையில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்த கோடை விழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை, சாலை வசதி மற்றும் மின் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தங்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மலைவாழ் இளைஞர்கள் வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் செல்லும் நிலை தான் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேல் பாச்சேரி கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள்

இதுதொடர்பாக பேசிய ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், “சங்கராபுரம் தொகுதியில் காட்டுவன்னஞ்சூர் பகுதியில் சிட்கோ தொழிற்போட்டை அமைக்க சிட்கோ மேலா ளர் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சுற்றுலாத்தலமாக திகழும் கல்வராயன்மலை பகுதியில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தேவையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிதாக5 படகுகள் வாங்குவதற்கு வனத்துறையின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

கல்வராயன் மலை அடிவாரப்பகுதி

கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதனை பயன்படுத்திட சில எளிய வழிமுறைகள் அரசின் சார்பில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் குறித்து வனத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து, விரைவில் சாலைகளை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நிரந்தர வேலைவாய்ப்பு மட்டுமே கல்வராயன்மலை வாழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும். இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் இம்மலை பகுதியில், அந்த வளத்தை நல்வகையில் திருப்பி, இளையோரின் திறனை அதை நோக்கி நகரச் செய்தால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஒரு பெரிய சிக்கலுக்குப் பின் தீவிரம் காட்டுவதும், அதன்பின் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் என்பதைத் தாண்டி, தொடர்ச்சியான நல் முயற்சி கல்வாரயன் மலை வாழ் மக்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE