பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விருதுநகர் முதியவர்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரத்தில் அவர்களுக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை 23 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி (69). விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கட்டில், சேர்களுக்கு வயர் பின்னிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

தனது அன்றாடப் பணியோடு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, மாலை நேரத்தில் விருதுநகர் நகராட்சி அலுவலகச் சாலை சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்பகுதியில் சத்ரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அண்ணா மலையம்மாள் நடுநிலைப் பள்ளி, ஆர்.சி. நடுநிலைப் பள்ளி, மாங்கா மச்சி நடுநிலைப் பள்ளி, பி.எஸ்.சி. தொடக்கப் பள்ளி, சுப்பிரமணியம் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி தொடக்கப் பள்ளி ஆகிய 7 பள்ளிகள் அருகருகே உள்ளன.

காலை, மாலை வேளைகளில் இந்த 7 பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கே.வி.எஸ். பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் நகராட்சி அலுவலகச் சந்திப்புப் சாலையை தினந்தோறும் கடந்து செல்கின்றனர். எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இச்சாலையில் காலை 7.45 முதல் 9.25 மணி வரையும், மாலை 4.45 முதல் 6.25 மணி வரையும்மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவியாக போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் முத்துப்பாண்டி ஈடுபடுவதை அவ்வழியாகச் செல்வோர் காண முடியும்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். படிப்பின் அருமை என்னவென்பது என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். படித்தால் எந்த அளவுக்கும் சென்று உச்சத்தை அடைய முடியும். பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஒரு நாள் தேர்வை கோட்டை விட்டால் ஓராண்டு படிப்பு வீணாகிவிடும். அது வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதனால் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரத்தில் அவர்களுக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

இச்சேவைக்காக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சேத்தூர் ஜமீனிடம் விருது பெற்றேன். அப்போது டிஎஸ்பியாக இருந்த சக்திவேல் போக்குவரத்து சீரமைப்புக் குழுவைத் தொடங்கி என்னை அதில் உறுப்பினராக்கி அடையாள அட்டையை வழங்கினார். அன்று முதல் தற்போது வரை போக்குவரத்துக் காவலர்கள் அணியும் ஜாக்கெட் ஒன்று ஆண்டுதோறும் எனக்கு காவல் துறை சார்பில் வழங்கப்படுகிறது. அதோடு, தன்னார்வலர்கள், அமைப்புகள் எனக்கு வெள்ளை சட்டையும், காக்கி பேண்ட்டும் தைத்துக் கொடுப்பார்கள். மாணவ, மாணவிகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்றுவர வேண்டும் என்பதற்காகவே நான் தொடர்ந்து இந்தச் சேவையைச் செய்து வருகிறேன் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE