பஞ்சுமிட்டாய் முதல் பானிபூரி வரை - ‘நிறமிகள்’ ஜாக்கிரதை

By ஆர்.ஆதித்தன்

கோவை: இயந்திரமயமான வாழ்க்கை முறையில் மாறிவிட்ட உணவுப் பழக்க முறையால் பலவித வாழ்வியல் நோய்கள் வந்துவிட்டன. குறிப்பாக ஷவர்மா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுவர்கள் உயிரிழப்பு என்ற செய்திகள் சமீபத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது அடங்குவதற்குள் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட ‘ரோடமைன்-பி’ என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்ளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் நிறமிகள் கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது அடுத்த பேரிடியாக சாலையோர கடைகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பானிபூரி நீரில் நிறமி சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் பானிபூரி நீரில் புற்று நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டதால், தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் காந்திபுரம், வ.உ.சி.பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சித்ரா, சிங்காநல்லூர், கணபதி, சாயிபாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி, டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் பானிபூரி விற்பனை செய்யும் கடைகள், பானிபூரி தயாரிக்கப்படும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையிட்டனர்.

278 கடைகளை ஆய்வு செய்து 57 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15 உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டன. நிறமி சேர்க்கப்பட்ட 98 லிட்டர் பானி, 88 கிலோ தரமற்ற உருளைக் கிழங்கு, 12 கிலோ உருளைக் கிழங்கு மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கே.தமிழ்செல்வன் கூறியதாவது: பானிபூரி தயாரிக்கும் இடங்களில் சுத்தி கரிக்கப்பட்ட நீரை பயன்படுத்த வேண்டும். பானிபூரி மூலப்பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு காலாவதி தேதி, தயாரிப்பு தேதி விவரங்களுடன் இருக்க வேண்டும். பானிபூரி தயாரிக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். பானிபூரி தயாரிப்பவர்கள் முக கவசம், தலைக்கு தொப்பி, கைகளில் கையுறை ஆகியவை அணிந்திருக்க வேண்டும்.

மூலப்பொருட்களை அதற்கான பெட்டியில் அடைத்து வைக்க வேண்டும். தரையில் கொட்டி வைக்கக் கூடாது. சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல, பானிபூரிக்கு முளைவிட்டிருக்கும் தரக்குறைவான உருளைக்கிழங்குகளை பயன்படுத்தக்கூடாது. தரமான உருளைக்கிழங்குகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக வேகவைத்து பரிமாற வேண்டும். பானிபூரி தயாரிப்பைத் தொடர்ந்து அதை விற்பனை செய்யும் இடங்களில் முழுமையாக ஈ, தூசி எதுவும் படாமல் கண்ணாடியில் அடைத்து வைத்திருக்க வேண்டும்.

பானிபூரி கடைகளில் சுகாதாரம் இல்லாமல், கைகளாலேயே உடைத்து அப்படியே அந்த நீரில் மூழ்கடித்து எடுத்து தரக்கூடாது. முக கவசமும், கையுறையும் அணிந்து தான் பரிமாற வேண்டும். வெறும் கைகளால் பானிபூரியை தரக்கூடாது. வெறும் கைகளால் பரிமாறும் பானிபூரியை பொதுமக்கள் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

பானிபூரிக்கான ரசம் புதினாவில் இருந்து மட்டுமே இருக்க வேண்டும். மாறாக தடை செய்த செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு அதிக நிறமி சேர்த்திருப்பதாக சந்தேகம் வந்தால் 94440 42322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். பானிபூரியை நீண்ட நாட்களாக தொடர்ந்து உட்கொள்வதால் குடல் நோய்கள் வரும். பானிபூரிக்கு தரும் நீரில் தடை செய்த நிறமி கலந்திருப்பதால் அது மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். புதினா மட்டுமே சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் நல மருத்துவர் சரண்யா கூறும்போது, “இந்திய குழந்தைகள் மருத்துவ வழிகாட்டுதலில் ஜங்க்ஸ் (juncs) உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காஃபினேடட், நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்களை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது. பானிபூரியில் உள்ள சுகாதாரமற்ற நீரினால் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு ஆகியவை வருகிறது. இதுபோன்ற உணவுகளால் உடல் பருமன், சினைப்பை நீர் கட்டி, சிறுமிகள் இளம் வயதில் பருவம் அடைதல், முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுதல், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. ஆண்களுக்கும் ஹார்மோன் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, குழந்தைகளுக்கு வேக வைத்த நிலக்கடலை, பொட்டுக்கடலை, சிறுதானிய மாவு உருண்டை, எள் உருண்டை ஆகியவை தர வேண்டும். குழந்தைக்கு பானமாக தராமல் பழங்களாக தர வேண்டும். இறக்குமதி செய்த பழங்களை தவிர்த்து, உள்ளூரில் கிடைக்கும் சீசன் பழங்களை சாப்பிட வேண்டும். நேரத்துக்கு தூங்க வேண்டும். பற்களை முறையாக பரிசோதிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். டிஜிட்டல் உபகரணங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் நோய்களை தவிர்க்கலாம்” என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மண்டல புற்றுநோய் மையத்தின், புற்றுநோய் மருந்தியல் துறை பேராசிரியர் எம்.பிரபாகர் கூறும்போது, “பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் அனைத்து உணவு பொருட்களிலும் நிறமி சேர்க்கப்படுகிறது. மிட்டாய் தொடங்கி பீசா, கேக் என அனைத்திலும் கலர் சேர்க்கப்படுகிறது.

இதுபோன்ற நிறமி கலந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. ஒருநாள் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது. குறிப்பாக பிரில்லியன்ட் புளூ, சன்செட் யெல்லோ போன்ற பல்வேறு வித நிறமி கலந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும்போது மரபணு மாற்றம், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்